இந்து மதத்தை ஆரிய மதம் என்றும் சனாதன மதம் என்றும் கூறலாம் என்றார் காலம் சென்ற காஞ்சீபுரம் சங்கராச்சாரி விழுப்புரம் சாமிநாதன்! சனாதனம் என்றால் “என்றென்றும் முன்பே இருந்துவருவது’’ என்பது பொருள் என்று குல்லுகபட்டர் பொருள் கூறுகிறார், மனு அதிகாரம்! சுலோகம் 22_23க்குப் பொருள் கூறும்போது! அதாவது முந்தைய கல்பகாலத்திலிருந்தே இருப்பதாம். 71 மகாயுகங்கள் கொண்டது கல்பம். கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இந்நான்கும் 43,12,000 ஆண்டுகளாகும். இவை முடிந்து மகரயுகம் நிறைவடைகிறது. இம்மாதிரி 71 மகாயுகங்கள் கொண்டது கல்பம் என்கிறார்கள். இவர்கள் புளுகுக்கு அளவே கிடையாது. அவ்வளவு காலத்து மதமாம் இந்துமதம். அம்மதத்தின் வேதங்களும் பிரமாவினால் மனதில் வைக்கப்பட்டு அக்னி, வாயு, சூரியன் ஆகியோரின் மூலம் வெளிக் கொணரப்பட்டதாம். ஆனால், ரிக் வேதத்தின் புருஷ சூக்தப்படியான கதை வேறு; புருஷ என்ற (கற்பனை) பிராணியைக் கொன்று யாகம் செய்தபோது யாககுண்டத்தில் இருந்து தோன்றியவை ரிக், சாம, யஜூர் வேதங்கள் என்கிறார்கள். ஒரே செய்தியைப் பலவிதமாகப் புளுகும் மதமே இந்து மதம்.
வேதங்களின் தோற்றம் பற்றி பதினொரு வகையான விளக்கங்களும் உள்ளன. இதுவே புதிர். ஏன் இவற்றைப் படைத்துப் பார்ப்பனர்கள் ஒன்றுக்கொன்று இணக்கமற்ற, குழப்பமான விளக்கங்களைத் தந்தார்கள்? வேதங்களை அபவுருஷேயம் என்கிறார்கள். புருஷர்களால் படைக்கப்பட்டவையல்ல என்பதாம். என்றாலும் வேதங்கள் பொய்யாதவை என்கிறார்கள். ஆபஸ்தம்பர் எனும் ரிஷி வேதங்களுக்கு எந்த அதிகாரமும் தரவில்லை. ஒரு சபையில் உறுப்பினராவதற்குரிய தகுதிகளில் ஒன்றாக வேதம் படித்திருப்பதைக் கூறுகிறார். பிறகு எதற்காக வேதங்கள்? வேதங்களுக்கு ஏன் மரியாதை? வேதங்களை மீற முடியாதவை என்று எப்படிக் கூறுகிறார்கள்?
“வருங்கால உலகத்தில் இன்பம் அனுபவித்தல் என்பதே இருக்காது என்றால் ஏன் யாகங்களைச் செய்ய வேண்டும்?’’ என்று சார்வாகர்கள் கேட்டதில் என்ன தவறு? என்று கேட்டார் அம்பேத்கர். “அக்னிகோத்ரம் மூன்று வேதங்கள், சன்யாசம், திரிதண்டம் சாம்பலைப் பூசிக்கொள்வது எல்லாமே ஆண்மையும் அறிவும் இல்லாதவர்களின் வயிறு வளர்க்கும் வழிகளே’’ என்றவர் சார்வாகர்களின் அறிவாசான் பிருகஸ்பதி.
ரிக் வேதத்தில் என்ன இருக்கிறது? அறநெறி பற்றி ஏதாவது உள்ளதா? எமனும் அவனது தங்கை எமியும் பேசிக்கொள்வதாக வேதம் கூறுகிறது.
“வா! என்னுடன் உறவு கொள்ள வா. சிறந்தவரான நம் தந்தையின் சந்ததியைத் தோற்றுவிக்க வா’’ என்கிறாளாம். அண்ணன் மறுக்கிறானாம். தங்கையோ மீண்டும், என் உடலை அனுபவிக்க வா என்று அண்ணனை அழைக்கிறாள். அண்ணன் மறுக்கிறான். “உன்னுடன் ஒரே படுக்கையில் படுக்க ஆசையாக உள்ளது. வண்டிச் சக்கரங்களைப் போல இருவரும் முனைந்து செயல்படுவோம், வா’’ எனக் கூப்பிடுகிறாள். உன் உடலை என் உடலுடன் பிணைத்துக்கொள் என்று வற்புறுத்துகிறாள். யமன், “நான் என் சகோதரியுடன் இணைய மாட்டேன். வேறு யாருடனும் நீ சேர்ந்து கொள்’’ என்கிறான். இந்த அசிங்கமான உரையாடல் மேலும் ஆபாசமாகத் தொடர்கிறது வேதத்தில்! இதில்தான் இந்துமதப் பெருமை உள்ளதாம்!
வாயு தேவனைத் தங்களுடன் சோமபானம் அருந்தக் கூப்பிடும் பாடல்கள் ஏராளம். இதே குடிகார அழைப்பு அக்னிக் கடவுளுக்கும் விடப்படுகிறது. இந்திரனையும் சோமபானம் குடிக்க அழைக்கிறார்கள். இவையெல்லாம் மாதிரிக்காக. ரிக் வேதம் முழுவதும் இதே பிரதாபங்கள்தான். சூரியனுக்கும் புஷனுக்கும் நடந்த உரையாடலும் (மண்டலம் 10, 85, 37) இந்திராணிக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலும் (மண்டலம் 10, 86, 6) ஆபாசத்தின் உச்சம்.
ரிக் வேதத்தின் நார்த்தனைப் பகுதியில்கூட அறநெறிக் கருத்துகள் கிடையாது. ஆக, வேதங்களில் என்ன உள்ளது பெருமைப்பட்டுக் கொள்வதற்கு?
அதர்வண வேதத்தில் முழுக்கவும் மந்திரங்களும் வசிய சமாச்சாரங்களும்தான். காய்ச்சல், தலைவலி, இருமல் ஆகியவற்றிற்கும் காரணம் மின்னலாம். மின்னலுக்கு ஒரு பிரார்த்தனை. எல்லா நோய்களுக்கும் மந்திர வசியமாம். எலும்பு முறிவுக்கும் மந்திர வசியமாம். ஆண்மை பெருக மந்திர வசியமாம். மனைவியை அடைய, கணவனை கைக்குள் போட்டுக்கொள்ள மந்திரமாம். ஆணின் ஆண்மையை அழித்திட மந்திரமாம். பெண் கருத்தரிக்காமல் தடுத்திட மந்திரமாம். நூற்றுக்கணக்கான வசிய மந்திரங்கள் அடங்கியது அதர்வண வேதம். நோய்களை உடல் உறுப்புகளிலிருந்து வெளியேற்ற மந்திரங்கள் உள்ளன.
வேதங்களில் ஆன்மிக ரீதியிலோ, அறநெறி ரீதியிலோ மனிதனை உயர்த்தும் பண்பு கொண்டவை எதுவும் இல்லை. இருப்பினும் வேதங்கள் உயர்வானவை என்று கூறும் நிலைக்கு இந்துமதத்தவர்கள் ஏன் முயற்சி செய்கிறார்கள்? என்று கேட்ட டாக்டர் அம்பேத்கரா இந்துத்வ அம்பேத்கர்?
(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் – தொகுதி-8)
வேதங்களை உயர்ந்தவை எனக் காட்டிட பார்ப்பனர்கள் முயன்று தோற்ற பிறகு, வேதங்களைவிடவும் ஸ்மிருதிகளுக்கு உயர் அதிகாரம் உண்டு என்று கதைக்கத் தொடங்கினர். வேதங்களை மிகவும் தாழ்வான நிலைக்குத் தூக்கிப் போடக் காரணி எது? குமாரிலபட்டர் மிகவும் தந்திரமாக வாதிட்டார்: ஸ்ருதிகளில் காணாமல் போனவைதான் ஸ்மிருதிகளில் வைக்கப்பட்டுள்ளன என்றார். ஆகவே ஏற்க வேண்டும் என வாதிட்டுள்ளார்.
ஸ்மிருதிகள் வேதங்களைவிட உயர்வு என்றில்லாவிட்டாலும் அவற்றை வேதங்களுக்குச் சமமாக வைத்திட அத்ரி ஸ்மிருதி கடைபிடிக்கும் வழி _ ஸ்மிருதிகளை மதிக்காதவர்கள் சாபத்துக்கு உள்ளாவார்கள் என்கிறார் அத்ரி. வேதம் மட்டும் கற்று ஸ்மிருதிகளைத் தாழ்வாகக் கருதினால் அவன் 21 தலைமுறைகளுக்கு விலங்குப் பிறவியே எடுப்பான் எனச் சபிக்கிறது. ஸ்மிருதிகளுக்கு அடுத்து புராணங்கள். இந்தப் புராணங்கள் 18ஆம் உபபுராணங்கள் 18ஆக 36ஆம் சுருதியில் சேர்க்கப்படாமல் இருந்தன. காலப்போக்கில் அவை வேதங்களைவிட உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டன. பிறகு ஸ்மிருதிகள் அதனை அடுத்து புராணங்கள், கடைசியாகத் தந்திரங்கள் என்றாக்கி அனைத்திற்கும் கீழே வேதங்கள் வைக்கப்பட்டன. எனவே, வேதங்கள் புனிதம் என்ற நிலைமாற்றப்பட்டுப் புடலங்காய் என்றாக்கப்பட்டது.
இம்மாதிரி வேதங்களை அக்குஅக்காகப் பிரித்தெறிந்து பிய்த்து எறிந்து அவை புனிதமுமல்ல புடலங்காயுமல்ல என்று எண்பித்த டாக்டர் அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?
ஒன்றும் இல்லாத பொருளாகிவிட்ட வேதங்களுக்கு அந்தம் (முடிவு) எனப்படும் வேதாந்தமும் வேதங்களின் சாரம் எனப்படும் இருபொருள் தரும் வேதாந்தம் வந்தது. உபநிஷத்களுக்கு வேதாந்தம் என்றும் பெயர். இத்தகைய உபநிஷத்களில் ஒன்றான கடோபநிஷத் கூறுவதைப் பார்க்கலாம்.’’ தந்தை தந்தையல்ல. தாய் தாயல்ல _ உலகங்கள் உலகங்களல்ல. கடவுள்கள் கடவுள்களல்ல. வேதங்கள் வேதங்களல்ல. வேள்விகள் வேள்விகளல்ல. அந்நிலையில் திருடன் திருடனல்ல. கருவை அழிப்பவன் கருவை அழிப்பவனல்ல. பவுலகசன் பவுலகசனல்ல. பக்தன் பகதனல்ல. புனிதனுக்கு புண்ணியத்துடனோ பாவத்துடனோ அனுகூலமான உறவோ அனுகூலமில்லாத உறவோ கிடையாது. ஏனென்றால் மனத்தின் துயரங்கள் எல்லாம் கடந்து விடுகின்றன’’ என்கிறது. (தொகுப்பு நூல் பாகம் 8, பக்கம் 85)
ஏதாவது விளங்குகிறதா? விளங்கினால் அது சித்தாந்தம். விளங்காவிட்டால் அது வேதாந்தம் என்றார் கவிஞர் கண்ணதாசன். இவர்தான் இந்து மதத்தை அர்த்தமுள்ள மதம் என்றவர். அவரே இப்படி எழுதினார் என்றால்… முகலாயர் ஆண்ட காலத்தில் அல்லா உபநிஷத் என ஒன்றைப் பார்ப்பனர்கள் எழுதினார்கள். என்றால் உபநிஷத்களின் பொய்மையைப் புரிந்து கொள்ளலாம். வேதப் பார்ப்பனர்கள் உபநிஷத்களுக்கு மிகக் குறைந்த மரியாதையை அளித்தார்கள் என்றும் வேதங்களும் உபநிஷத்களும் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன என்றும் டாக்டர் அம்பேத்கர் எழுதினார். இவர் எப்படி இந்துத்வர் ஆவார்?
யாகங்கள் செய்வது அவசியமா? ஆம்! என்கின்றன வேதங்கள் _ தேவையற்றது என்கின்றன உபநிஷத்கள். வேதம் படித்தவர்கள் யாகம் செய்யலாம். உபநிஷத்களைப் படித்தோர் யாகம் செய்வதுபற்றி அறியாதவர்கள். இப்படிக் கூறிய பாதராயணர் தம்முடைய வேதாந்த சாஸ்திரத்தில் உபநிஷத்களுக்குத் துரோகம் செய்துவிட்டார் என்கிற அம்பேத்கர் எப்படி இந்துத்துவ அம்பேத்கர் ஆவார்? (தொகுப்பு நூல், பாகம் 8, பக்கம் 91, 93).
(கேள்விகள் தொடரும்…)
– சு.அறிவுக்கரசு