Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உ.பி.வாரணாசியில் சமூக நீதி விழா – யுத்தத்தில் வெற்றி பெறுவோம்!

உத்திரபிரதேச மாநிலத்தின் பிற்படுத்தப் பட்ட பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் சார்பில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று அய்.ஏ. எஸ்., அய்.பி.எஸ். பதவிகளுக்கு இவ்வாண்டு தேர்வு பெற்றோருக்குப் பாராட்டு விழாவும் அதனுடன் இணைந்து தந்தை பெரியாரின் 1950ஆம் ஆண்டு வகுப்புரிமை ஏன்? சொற்பொழிவின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீட்டு விழாவும் ஆகஸ்டு 7ஆம் தேதி மாலை வாரணாசி ஓட்டல் கிளார்க்ஸ் ஆவத் மாநாடு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு காசி வித்யபீத் பல்கலைக்கழகத் தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எஸ்.குஸ்வாகா தலைமையேற்றார். யூனியன் வங்கி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவர் ரவீந்திரராம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாநில கூட்டமைப்பின் செயலாளர் அமிர்தான்சு அமைப்பின் பணியினையும், வாரணாசியில் இரண்டாவது ஆண்டாக பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் குறிப்புரையாக அளித்தார்.

துவக்கத்தில் தந்தை பெரியாரின் வகுப்புரிமை ஏன்? ஆங்கில நூலை பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா வெளியிட, யூனியன் வங்கி உத்திரபிரதேச மாநில பொது மேலாளர் பி.கே.பன்சால் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, குடிமைப் பணித் தேர்வில் (அய்.ஏ.எஸ்.) வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை, பூங்கொத்து நினைவுப்பரிசு மற்றும் பெரியாரின் சிந்தனைகள் என்ற ஆங்கில நூல் ஆகிவற்றை ஒவ்வொருவருக்கும் அளித்து, சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி சிறப்பு செய்தனர்.

விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆற்றிய சிறப்புரையில், சமூகநீதி, இடஒதுக்கீடு என்பது பிச்சையல்ல; நம் உரிமை. யாரிடமும் நாம் கையேந்தவில்லை. தட்டிக் கேட்டுப் பெறுவதற்கு நமக்கு உரிமையும் நியாயமும் உண்டு; அரசியல் சட்டப்படி தான் நாம் அதைக் கேட்கிறோம்.

முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் தந்தை பெரியார் போராட்டத்தால்தான் வந்தது. அதன் வரலாறு தான் இன்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தந்தை பெரியாரின் வகுப்புரிமை போராட்டம் ஏன்? என்ற நூல் என்பதை விளக்கி, மண்டல் கமிஷன் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதற்கும் அமல்படுத்துவதற்கும் திராவிடர் கழகம், 42 மாநாடுகளை 16 போராட்டங்களை உ.பி. உட்பட பல மாநிலங்கள், சந்திரஜித் யாதவ் போன்றவர்கள் துணையோடு கர்ப்பூரிதாக்கர், போன்றவர்களோடு நடத்தியுள்ள வரலாற்றை புதிய தலைமுறைக்கு எடுத்துக் கூறினார்.

சுமார் 90 ஆண்டுகளுக்குமுன் எனது தலைவர் ஆசான் தந்தை பெரியார் சந்நியாசியாகிட காசி வந்து வெறுத்துத் திரும்பி பிறகு சுயமரியாதை இயக்கம் துவக்கி, சமூகப் புரட்சிக்கு வித்திட்டார்; இன்று அவரது தொண்டன் நான் இங்கே உங்களால் தலைமை விருந்தினராக அழைத்துச் சிறப்பிக்கப்படுகிறேன் என்றால் பெரியார் வாழ்கிறார். பெரியாரால் நாம் வாழுகிறோம் என்றும் வாழ்வோம் என்று ஒப்பிட்டுக் காட்டினார்.

ஜோதிபா பூலே, சாகுமகராஜ், நாராயண குரு போன்ற சமுதாய போராளிகளில் தந்தை பெரியார் மிகவும் மதித்த  அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர் கூறிய கருத்துகள், ஜாதிபேத அடக்குமுறைகள், அதைத் தாண்ட சமூகநீதிக் களத்தில் கல்வி, உத்தியோகம், பகுத்தறிவு, பெண்கள் சமூக அதிகாரம் பெறும் நிலை எல்லாம் நமது அஜண்டாக்களாக இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் 30 நிமிடங்கள் பேசியதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

உரையின் இறுதியில், நாம் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம்; அடைய வேண்டிய இலக்குகள் ஏராளம். சில சிறு சண்டைகளில் (Battles) வெற்றி பெற்றுள்ளோம். யுத்தத்தில் (War) வெற்றி பெற்றால் தான் அது உண்மை யான நிலைத்த நீடித்த வெற்றியாகும் என்று குறிப் பிட்டேன். உ.பி. மாநிலம் 7ஆம் தேதி திருவிழா வழிகாட்டு கிறது; புதுகணக்கைத் திறந்து, புதுவெள்ளத்திற்கான மடை திறந்து விடப்பட்டுள்ளது. பெரியார் இப்போது வடபுலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் என்று குறிப்பிட்டார். மேலும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினரும், நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான எஸ். கே. கார்வேந்தன் உள்பட பலர் உரை நிகழ்த்தினர்.

அசோகா கல்வி நிறுவனத் தலைவர் அசோக் ஆனந்த் விழா நிகழ்ச்சி நிரலை கவிதைபட சிறப்பாக தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களுக்கு விழா குழுவினர் சார்பாக சால்வை, நினைவுப் பரிசு, பெரியாரின் சிந்தனைகள் நூல் அளித்து சிறப்பு செய்யப்பட்டது.  விழாவில், அமைப்பின் உறுப்பினர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டது மிகவும் குறிப்பிடத்தக்கது.

காசியில் முக்கியமான கோவில் விழா நடைபெறும் அதே நாளில் இந்துச் சமூக நீதிக்கான விழா சிறப்பாக நடைபெற்றது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு, வாரணாசிக்கு வருகை தந்த -திராவிடர் கழகத் தலைவரின் 30 நிமிட உரை சமூக நீதி, பெரியாரின் உழைப்பு, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு, சமூக ஏற்றத் தாழ்வு என அனைத்தையும் உள்ளடக்கியதை அனைத்துப் பெருமக்களும், சிறப்பு செய்யப்பட்ட மாணவர்களும் கவனத்துடனும், மகிழ்வுடனும் கேட்டறிந்தது விழாவின் சிறப்பான அம்சமாகும்.

சமூக நீதி இயக்கத்துக்கு அகில இந்திய அளவில் தலைமையேற்று வழி நடத்தித் தருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டனர்.