“சோறு போட்டு உதை வாங்கின கதை!”

செப்டம்பர் 01-15

இந்தியத் துணைக் கண்டத்தில் சமூகத்தின் சகல பரிமாணங்களையும் சரியான கண் கொண்டு பார்த்துக் கணித்த இரு பெரும் தலைவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கருமே!

இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் முன்னதாகவே தனித்தனியாகக் கூறிய கருத்துக்களை எடுத்துக் கொண்டாலும் அவை ஒரு நாணயத்தின் இரு பக்கமாகவே இருப்பதை அறிய முடியும்.
சைமன் கமிஷன் முன் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்:

“நான் இதுவரை பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் நிலையைக் குறித்து நிருவாகப் பயன்பாட்டின் அடிப்படையில் கருத்துச் செலுத்தினேன். பிற்படுத்தப்பட்ட ஜாதியாரின் பொது ஊழியங்களில் இடம் பெறுவதில் தார்மீக அடிப்படைகளும் உள்ளன.

வாழ்நிலையில் முன்னேறிய சமூகங்கள் பொது ஊழியங்களில் இடம் பெறுவதைத் தடுப்பது அறவழித் தவறு எனில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாய்ப்புகளைத் தடுப்பதும் அவ்வாறே தவறாகும்.

மேலே கூறப்பட்ட கருத்துப் பின்னணிகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் சாதகமாக என்னைப் பேசச் செய்தன. இந்திய மயமாக்குதலுக்குப் போராடியவர்கள், அதே கருத்துப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற் சென்று வரும்போது அதனை எதிர்ப்பது விந்தையாகவே இருக்கிறது. வேலைவாய்ப்புகளை இந்தியர்களுக்கென ஆக்க எந்தக் காரணங்கள் சொல்லப் படுகின்றனவோ அவை பிற்படுத்தப்பட்டோருக்குப் பொருந்தும்’’ என்று சைமன் கமிஷன் முன் சாட்சியம் அளித்தார் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களுக்காக மட்டுமே பாடுபட்டவர் என்று கூறி, அவரை ஜாதிக் குடுவைக்குள் அடைப்பது என்பது அறியாமையினால் அல்ல. அது ஒரு பார்ப்பன யுக்தியே! அவரின் அறிவு விசாலத்தையும் மன ஓட்டத்தையும் வேண்டுமென்றே இருட்டடிக்க முயலும் பார்ப்பனத் தனமாகும்.

அதேபோல தந்தை பெரியார் என்றால் அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபடக் கூடியவர் என்ற ஒரு பிரச்சாரத்தை செய்வது உண்டு.

உண்மைதானா அது? 1925ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் ‘குடிஅரசு’ இதழ் மூலம் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார்.

“பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களே யானால், நீங்கள் வடிகட்டின முட்டாள் ஆவீர்கள். மற்றும் பேசப் போனால், பறையன், சக்கிலி என்பதற்கு இன்னார்தான் உரிமையென்றும், அது கீழ் ஜாதி என்பதற்கும் இன்னது ஆதாரமென்றும் சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை, கை பலமே யொழிய, தந்திரமே யொழிய வேறில்லை.

உங்கள் சூத்திரப் பட்டங்களுக்கு கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஆகிய அனேக ஆதாரங்கள் உண்டு. இத்தனையையும் நாசமாக்கி, அடியோடு ஒழித்தால் அல்லாமல், உங்கள் தலையில் இருக்கும் சூத்திரப் பட்டம் கீழே இறங்காது.

ஆகவே யாருக்காவது மான உணர்ச்சி இருந்திருந்தால், “நீங்கள் ஜாதியை ஒன்றாக்குகிறீர்களே’ என்று நம்மைக் கேட்டிருக்க மாட்டீர்கள்.

ஆகவே ஆதிதிராவிடர் நன்மையைக் கருதிப் பேசப்படும் முயற்சிகளும், ஆதிதிராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்’’
(‘குடிஅரசு’ 11.10.1931)

என்ற தந்தை பெரியார் அவர்களின் கூற்று எதைக் காட்டுகிறது?

அண்ணல் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர். தந்தை பெரியார் பிற்படுத்தப்பட்டோரின் தலைவர் என்ற ஒரு கருத்தை உருவாக்குவதன் மூலம் இந்த இரு பெரும் தலைவர்களின் அறிவாற்றலையும், ஆளுமையையும் ஒட்டுமொத்தமான சமூகப் பார்வையையும் குறுக்கிச் சிறுமைப்படுத்திக் குடுவைக்குள் அடைக்கும் அயோக்கியத்தனமும் சூழ்ச்சியுமாகும்.

சென்னை வந்தபோது தந்தை பெரியார் அவர்களைப் பலமுறை சந்தித்தார் அண்ணல்அம்பேத்கர். மும்பை சென்றபோது அண்ணல் அம்பேத்கரின் விருந்தினராகவும் இருந்திருக்கிறார் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் பேசிய பொதுக் கூட்டத்திற்கு மும்பையில் தலைமை வகித்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ‘இது எனக்குக் கிடைத்த பெரும்பேறு’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மாநாட்டில் நீதிக்கட்சி _ திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்று, தேர்தல் அரசியல் பதவிக்குச் செல்லுவதில்லை. சமுதாயப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சென்னை வந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடினார். (1944 செப்டம்பர்)
சேலம் மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்கவும் செய்தார். இந்த நிலையில் சேலம் மாநாட்டுத் தீர்மானங்களை ஏற்காத, பிடிக்காத ஒரு சிலர் வேறு அமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு, அண்ணல் அம்பேத்கருக்கு ஒரு தேநீர் விருந்து அளித்தனர்.

விருந்து அளித்தவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களைக் கண்டித்துப் புத்திமதி சொல்லியும் ஒழுங்காக பெரியாரை மதித்துக் கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

இது குறித்து ‘குடிஅரசு’ (30.9.1944) எழுதிய  கட்டுரையின் தலைப்பு என்ன தெரியுமா?

“சோறு போட்டு உதை வாங்கின கதை’’ என்பதாகும். அவர்கள் மத்தியில் அம்பேத்கர் கூறிய கருத்து முக்கியமானவை. பார்ப்பன ஆதிக்கத்தை வீழ்த்துவது என்றால் என்ன? தலைவரை மதிக்கும் பான்மை எத்தகையது என்பதற்கான தெளிவுரையாகும். அவர் உரை இதோ:

“சோறு போட்டு உதை வாங்கின கதை”

அம்பேத்கர் கொடுத்த அடி

சென்னையில் தங்களையும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டு, ஆனால் திராவிடர் கழகம் என்று சொல்லிக் கொள்ள மாட்டோம், தென் இந்தியர் கழகம் என்றுதான் சொல்லுவோம் என்று சொல்லிக் கொள்ளும் சில நபர்கள், டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு ஒரு விருந்து நடத்தி அவரிடம் ஆசீர்வாதம் பெற்று விளம்பரம் பெறலாம் என்று கருதி ஒரு விருந்து செய்தார்கள். டாக்டர் விருந்தை சாப்பிட்டு விட்டு, விருந்து நடத்தியவர்களுக்கு நல்ல அடிகொடுத்து அழ வைத்துவிட்டுப் போய் விட்டார். விருந்து கொடுத்தவர்கள் டாக்டரை அனுப்பி விட்டு மூலையில் இருந்து முக்காடிட்டு  ஒப்பாரி வைத்து அழுத வண்ணம் கிடக்கிறார்கள். பாவம் அவர்களை அழாதீர்கள் என்று சொல்லி ஓய வைக்கவும் ஆளில்லாமல் அவர்களாகவே ஓய்வதற்கும் வெட்கப்பட்டுக் கொண்டு கிடக்கிறார்கள், இதுவும் அதிசயம்தான்.

அம்பேத்கர் பேச்சு

“நண்பர்களே! உங்கள் விருந்துக்கு நன்றி செலுத்துகிறேன்.

பார்ப்பனரல்லாதார் கட்சி தோற்றுவிக்கப் பட்டதானது சரித்திரத்திலேயே குறிப்பிடத் தகுந்ததாகும். ஆனால் அதை முன்பு கையாண்ட மக்கள் அதைத் தோற்றுவித்தவர்களின் கருத்துக்கு நேர் விரோதமாக யாரோ சிலர் உத்தியோகம் பெறவும், யாரோ சிலருக்கு உத்தியோகம் தேடிக் கொடுக்கவுமே பயன்படுத்தி வந்ததானது அக்கட்சியையே ஒழிந்து போகும்படி செய்துவிட்டது.

ஏன் தோற்றது?

20 ஆண்டு ஆட்சி செலுத்தி வந்தும் 1937ஆம்  ஆண்டு தேர்தலில் இக்கட்சி ஏன் தோல்வி அடைந்தது? வீழ்ச்சி அடைந்த உடன், கட்சித் தலைவர்கள், சீட்டுக்கட்டு வீசி எறிந்தால் அவை திக்குக்கு ஒன்றாய்க் காற்றில் பறந்து ஓடி விழுவதுபோல் கலைந்து மறைந்து விட்டதற்குக் காரணம் என்ன?  பார்ப்பனர் அல்லாதார் ஓட்டுகள் தானே அதிகமாயிருந்தது? அவர்களிடம் இக்கட்சிக்கு ஏன் செல்வாக்கில்லை? என்பதை யோசியுங்கள்.

காரணம் தெரியுமா?

இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு ஆகும்.

ஒன்று பார்ப்பனர்களுக்கும், இக்கட்சி யாருக்காக ஏற்பட்டதோ அந்த பார்ப்பன ரல்லாத மக்களுக்கும் எதில் எதில் என்ன என்ன வித்தியாசம் என்பதை இதன் தலைவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை. இதன் பேரால் பட்டம் பதவி உத்தியோகம் பெற்று பயனடைந்தவர்களும் நடந்து காட்டவில்லை. அவர்கள் தாங்களாவது உணர்ந்து கொள்ளவுமில்லை.

மற்றும் பிராமணீயத்தை வெறுக்கிறோம் என்று சொன்னார்களே ஒழிய, அப்படிச் சொன்ன தலைவர்கள் பிராமணீயத்தை தங்கள் வாழ்வில் வெறுக்கவில்லை. அவ்வளவோடு மாத்திரம் இல்லாமல் பிராமணீய அறிகுறிகளாகிய நாமம் முதலிய குறிகளை அணிந்து கொண்டு பிராமணர்களைப் போலவே நடித்து தங்களை (செகண்டு கிளாஸ்) 2ஆவது வகுப்புப் பிராமணர்கள் என்று தெரியும்படி நடை உடை பாவனைகளில் காட்டிப் பெருமையடைந்தும் வந்தார்கள். பார்ப்பனர்கள்மீது ஜஸ்டிஸ்கட்சி பார்ப்பனரல்லாத பிரமுர்களுக்கு இருந்து வந்த கோபமெல்லாம் பார்ப்பனர்கள் ஏன் நம்மை முதல் வகுப்பு (பஸ்ட் கிளாஸ்) பிராமணர்களாக ஒப்புக் கொள்ளவில்லை என்பதைத் தவிர பார்ப்பனியம் ஒழிக்கப்பட வேண்டுமே என்கின்ற கவலையே இல்லாமல் போனது பரிதாபகரமான காரியமாகும்.

பேதம் தெரிய வேண்டும்

ஒரு கட்சி இருந்தால் அக்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் அக்கட்சிக்கு எதிரிகளாய், அக்கட்சி பார்ப்பனரல்லாதவர்களாய் இருப்பவர்களுக்கு நன்றாய் பேதம் தெரியும் படியாய்க் கொள்கைகள், காரியங்கள் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்.

எதற்காக மற்றக் கட்சியை அல்லது நம் கட்சி அல்லாத மக்களை எதிர்க்கிறோம் என்பது நம் பாமர மக்களுக்கும் ஓட்டர்களுக்கும் தெரிய வேண்டாமா? இதில் பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர்களுக்கு சிறிதும் கவலை இல்லாததாலும் தாங்களும் பார்ப்பனர்கள் போலவே தங்கள் வாழ்வில் நடந்து தங்கள் வாழ்க்கையில் பார்ப்பணீயத்துக்கு மரியாதையும், பெருமையும் கொடுத்து வந்ததாலும் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு வேர் பூமியில் ஆழம்பட இறங்காமல் போனதோடு சிறியதொரு காற்றில் அது பெரியதொரு வீழ்ச்சியையும் அடைய நேரிட்டு விட்டது.

இரண்டாவது காரணம்

கட்சி வீழ்ச்சிக்கும் பாமர மக்கள் அவமதிப்புக்கும் இரண்டாவது காரணமென்ன வென்றால், அதன் குறுகிய அரசியல் நோக்கமேயாகும், என்னவெனில் கட்சியின் எதிரிகள் இக்கட்சியாரை உத்தியோக வேட்டைக்காரர்கள் கட்சி என்று சொல்லி வந்ததை அறிந்தும் அவர்களுக்கு தக்க பதில் சொல்லும்படியாக நடந்துவரவில்லை. இக்கட்சியாரைவிட இக்கட்சியின் எதிரிகள் அதிகமான உத்தியோக வேட்டைக்காரர்களாக இருந்தும், அவர்கள் தங்களை பாமர மக்கள் அப்படிச் சொல்ல முடியாமல் நடந்து கொண்டு வந்திருக்கிறார்கள்.

அரசியல் திட்டம்

பார்ப்பனரல்லாத கட்சியில் உள்ள அரசியல் திட்டம் சர்க்காரை ஆதரிப்பதும்; தலைவர்கள் உத்தியோகம் பெறுவதும், இளைஞர்களுக்கு வாங்கித் தருவதும் போதுமா? இது குற்றமில்லை என்றாலும் இது மாத்திரம் இருந்ததாலேயே அது பயன்படாமல் போனதோடு கட்சி வீழ்ச்சிக்கும் இது உதவி செய்யும் காரணமாய் இருந்துவிட்டது.

20 ஆண்டு உயர்ந்த பதவிகள் பெற்று ஆட்சி நடத்தி, அநேக பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்கு உத்தியோகம் கொடுத்தும் ஏன் வீழ்ச்சி பெற்றது. பதவி பெற்றவர்களும், உத்தியோகம் பெற்ற இளைஞர்களும் கட்சியின் நன்மதிப்புக்கு யாதொரு நன்மையும் செய்யவில்லை. கட்சியினால் நாம் முன்னுக்கு வந்தோம், நம் பிள்ளை குட்டி அண்ணன் தம்பி பந்து குடும்பத்தாருக்கு உதவி உத்தியோகம் அளித்தோம் என்ற விஸ்வாசமோ நன்றி அறிதலோ நினைவோகூட இல்லாமல் இருந்துவிட்டார்கள். பட்டம் பதவியில் உத்தியோகத்தில் வந்தவர்களும் தங்களையும் தங்களைச் சுற்றியும் பார்த்துக் கொண்டார்களே தவிர பாமர மக்களை, கிராம மக்களை கவனித்து அவர்கள் விவகாரங்களிலும் லேவாதேவிக்காரர்களிடமும், முதலாளிகளிடமும் சிக்கி அல்லல்படுவதை சிறிதாவது கவனித்தவர்கள் அல்ல. இவர்களுடைய இப்படிப்பட்ட காரியங்களை எதிரிகள் பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள்.

நிருவாகம் கையில் இருக்க வேண்டும்

நிருவாகம் நம் கையில் இருக்க வேண்டியது அவசியமாகும். நிருவாகம் இருந்தால் எப்படிப்பட்ட சட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அது எப்படிப் பட்டவர்கள் கைக்கு வர வேண்டும் தெரியுமா? வெறும் பிறவியில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொண்டு தனது நலத்துக்கு அதை ஏணியாய் வைத்துக் கொண்டு பார்ப்பனர்போல் நாமம் போட்டு நடித்துக் கொண்டிருப்பவன் கைக்குப் போனால் பயனில்லை. பதவிக்குப் போனவர்கள், உத்தியோகத்தில் இருப்பவர்கள் பார்ப்பனரல்லாதார் நலத்திற்காக என்று சொல்லி இதைப் பெற்றோம். பார்ப்பன ரல்லாதார் என்ற முறையில் இதைப்  பெற்றோம். ஆதலால் இப்பதவியை இவ்வுத்தியோகத்தை அதற்குப் பயன்படுத்த வேண்டியது மனிதத் தன்மையாகும் என்றும், நமக்கும் பார்ப்பனருக்கும் இன்ன பேதம் இருக்கிறது அதற்கு இன்னபடி நடக்க வேண்டும் என்றும் நன்றியறிதலும் நாணயமும் அறிவும் கடமையும் கொண்டவர்கள் பதவியில் உத்தியோகத்தில் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் பார்ப்பனர்களில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பதவிகளை இழக்காமல் இருக்கிறார்கள். பார்ப்பன ரல்லாதார்களில் அதை மறந்து விடுபவர்கள் தான் அதிகமாக பதவி உத்தியோகங்களில் இருக்கிறார்கள்; அவர்களாலேயே தான் இக்கட்சி பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டது. உத்தியோக வேட்டைக் கட்சி என்பதை அவர்கள் மெய்ப்பித்தும் விட்டார்கள்.

கட்சித் தலைவர்

கட்சி என்றால் கட்சிக்கு ஒரு நல்ல தலைவரும் நல்ல திட்டங்களைக் கொண்ட அமைப்பும் வேண்டும். கட்சிக்கு பொது மேடைகள் வேண்டும்.தலைவரைக் குறைகூறுவது நல்ல காரியமல்ல; அது கூடாது.

1.    அவருக்கு முன் யோசனை கிடையாது.
2.    பகுத்தறிவு போதாது.
3.    விஷய அனுபவம் இல்லாதவர்.
4.    அவரது வாழ்வு முழுவதும் தோல்விலேயே ஆழ்ந்திருப்பவர்.
5.    சிறிதும் யோசியாமல் கரணம் அடிப்பவர்.

இப்படிப்பட்ட ஒருவரை வேறு எந்த நாட்டிலாவது  தலைவராகக் கொள்வார்களா? குறை கூறாமல் இருப்பார்களா?

பாகிஸ்தானை ஒரு பாபச் செயல் என்றார். அந்த பாவச் செயல் ஒரு பூதமாக வந்து மிரட்டினதும் இப்போது நடுநடுங்கி அதை நீயே கதி என்று இறுகத் தழுவிப் பிடித்துக் கொண்டார். இப்படியெல்லாம் இருந்தும் காங்கிரசில் யாராவது காந்தியாரைக் குற்றம் சொல்லுகிறார்களா? அவரோடு மாறுபட்ட காங்கிரசாராவது குற்றம் பேசித் திரிகிறார்களா? இன்னமும் காந்தியார் காங்கிரசுக்கு சர்வாதிகாரத் தலைவராகக் கருதப்பட்டு வருகிறார். அவர்மீது எவரும் குற்றப் பத்திரிகை படிப்பதில்லை, அவரை மாற்ற யாரும் நினைப்பதில்லை.

ஜனாப் ஜின்னாவோ லீகில் ஒரு சர்வாதிகாரியாய் இருக்கிறார். லீக்கை அவர் தன் இஷ்டப்படி ஆட்டி வருகிறார். ஆனால் முஸ்லிம்களுக்கு அவரிடம் நம்பிக்கை, நன்றி அறிவு இருக்கிறது. காந்தியாரைக் குற்றம் சொல்லுவது காங்கிரசைக் குற்றம் சொல்லுவதாகும். காங்கிரசை ஒழிப்பதாகும் என்கின்ற கொள்கைக் கொண்டு இருக்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.ஆதலாலேயே ஜனநாயகத்துக்கு எதிராக ஜனநாயகத்துக்குப் பொருந்தாத காரியங்கள் எதை காந்தியார் சர்வாதிகாரமாய் பேசினாலும் செய்தாலும்  காங்கிரசார் வாய்மூடி பணிந்து ஏற்று வருகிறார்கள். ஆகவே, பார்ப்பன ரல்லாதாருக்கு நான் சொல்லுவது என்னவென்றால் தலைவர், ஒற்றுமை, தலைவரிடம் மரியாதை ஆகியவைகளில் மற்றக் கட்சிகளைப் பார்த்துப் படித்துக் கொள்ளுங்கள்.

காலங்கடவா முன்னர் கற்றுக் கொள்ளுங்கள்.ஆதலால், இன்றைய உங்கள் தலைவரைக் குறைகூறுவதோ மாற்றுவதோ சிறிதும் புத்திசாலித் தனமான காரியமாகாது. காங்கிரஸ்காரர்களுக்கு தலைவர் விஷயத்தில் உள்ள புத்தி உங்களுக்கு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மதிக்கப்படுவீர்கள் என்றும்,

சேலம் மாநாட்டுத் தீர்மானங்கள் மிக அவசியமானது என்றும், தலைவரோடு ஒத்துழைத்து தீர்மானங்களை மதித்து நடந்து கொள்ளுங்கள் என்றும் வலியுறுத்துகிற மாதிரியில் பேசினார்.
விருந்து அளித்தவர்கள் சார்பில் தோழர் பாலசுப்ரமணியம் என்பவர் பேசுகையில், டாக்டர் அம்பேத்கர் அறிவுரைக்கு நன்றி செலுத்துவதாகவும், தலைவரிடத்தில் (பெரியாரிடத்தில்) முழு நம்பிக்கை கலந்து மறுமொழி கூறாமல் பின்பற்றுவதுதான் எங்களுடையவும் எங்கள் கட்சியுடையவும் சம்பிரதாயம் என்றும் ஜனநாயகத்தை வலியுறுத்துகிறோமே ஒழிய வேறு பிளவு இல்லை என்றும் கூறியவருக்கு நன்றி செலுத்தினார்.

– ‘குடிஅரசு’, 30.09.1944

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்.                 – குறள் 892

 

 

 

 

 

 

                                                                                                                 -கவிஞர் கலி.பூங்குன்றன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *