நீட் – மத்திய அரசின் நடவடிக்கை நம்பவைத்துக் கழுத்தறுப்பு!

செப்டம்பர் 01-15

 நம்பவைத்துக் கழுத்து அறுப்பது என்ற வழக்கு நம் நாட்டில் உண்டு. இதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமானது – தமிழ்நாட்டுக்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற வழக்கில் மத்திய பிஜேபி அரசு நடந்துகொண்டதாகும்; நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காத நிலையில், ஓர் அவசர சட்டம் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப் பட்டால் அதற்கு ஒப்புதல் தர மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  சொன்னார்.  அதனை வழிமொழியும் வகையில் மற்றொரு தமிழக இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும் கூறினார். தமிழ்நாடு அரசு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிய நிலையில், மத்திய அரசின் கடமை என்ன? அந்தச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளிப்பது தானே சரியானது – அறிவு நாணயம் கூட!

17க்கும் 22க்கும் இடையில் நடந்தது என்ன?

அவசர சட்டத்தில் மேலும் பல தகவல்கள்  தேவை என்று மத்திய அரசு சொன்ன நிலையில் அதனை நம்பி தேவையான தகவல்களையும் தந்தது தமிழ்நாடு அரசு.
கடந்த 17ஆம் தேதி தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் 5 நாள்களுக்குள் கருத்தை மாற்றிக் கொண்டதன் மர்மம் என்ன? பிஜேபி தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டது ஏன்? ஏன்?கடந்த 17ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தபோது கூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை  என்று மத்திய அரசு சார்பில் சொல்லப்படவில்லை. இவ்வழக்கில் மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். நீட்’ அவசர சட்டத்திற்கு கோர்ட் தடை விதிக்க முடியாது என மத்திய – மாநில அரசுகள் வாதாடின.சட்டச் சிக்கல் ஏதும் இல்லை என்பதால், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. சட்டத்திற்கு உட்பட்டே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன சொன்னார்கள்?

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் என இரு தரப்பினரும் பாதிப்படையாத வகையிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் செவ்வாயன்று அந்தத் திட்டத்தோடு வருமாறும் உத்தரவிட்டனர்.

அதன்படி ஒரு திட்டம் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டதா? உச்சநீதிமன்ற நீதிபதிகளும் அது குறித்து கேள்வி எழுப்பாதது அதைவிட ஆச்சரியமும் அதிசயமும் ஆகும்.

இதைப்பற்றி எல்லாம் ஒரு வார்த்தையும் பேசாமல் வழக்கு விசாரணை தொடங்கிய முதல் நிலையிலேயே, மத்திய அரசின் சார்பில் ஏற்கனவே ஒப்புக்கொண்டவைகளுக்கு முற்றிலும் எதிராக, அதிர்ச்சியூட்டும் வகையில்  தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் இல்லை என்று சொன்ன அந்த மாத்திரத்திலேயே அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழக்கு முடிக்கப்பட்டது அசாதாரணமானது அதிர்ச்சிக்குரியது.எதிர் மனுதாரர் வழக்குரைஞருக்கு ஒரு வாய்ப்பும் அளிக்கப்படாமல்  வாயடைத்ததை எல்லாம் பார்க்கும் பொழுது சமூகநீதி என்றாலே இந்தக் காலகட்டத்தில் அதிகாரம் படைத்தவர்களுக்கு உகந்ததாக இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

2013இல் 69 சதவீதத்திற்கு தமிழகத்திற்கு

மட்டும் விதிவிலக்கு அளித்த உச்சநீதிமன்றம் 2017இல் மறுப்பது ஏன்?

சமூகநீதி மறுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இந்தக் கேள்வி எழுந்து நிற்கிறது. ஆனால் ஒன்று! சமூகநீதிக்கு எதிராக எந்த அதிகாரபீடம் நிமிர்ந்து நின்றாலும் வீதியில் திரளக்கூடிய பெரும்பான்மை மக்களுக்கான சமூகநீதியே வென்று தீரும்!இதற்கு முழுக் காரணமான இன்றைய அதிமுக எடப்பாடி அரசும், மத்திய அரசும் கூட்டாக இப்படி நமது மருத்துவக் கல்லூரிகளில் மற்ற மாநிலத்தவருக்கு கதவுகளை அகலமாகத் திறந்து, தமிழகப் பிள்ளைகளின் வயிற்றில் அடிக்கலாமா? இதற்குப் பிறகும் பாஜக ஆட்சியை பாராட்டுவதா? இவர்களுக்கு எதிர்காலத்தில் தக்க நேரத்தில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்பது உறுதி!

தீர்ப்புகள் திருத்தப்படும்

இந்த அடிப்படையில் எத்தனையோ சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன, தீர்ப்புகளும் திருத்தப்பட்டுள்ளன! நீட் எதிர்ப்பிலும் வெற்றி பெறுவோம் என்பதில் அய்யமில்லை.தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் வலியுறுத்திய சமூக ஜனநாயகம் என்பதற்கும் அர்த்தம் அதுவாகத்தான் இருக்க முடியும்.

– கி.வீரமணி,
ஆசிரியர்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *