இன்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்டவர். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் ஒப்பற்ற நூலை ஆங்கிலத்தில் எழுதி, தமிழ் மொழிக்கு உலக அரங்கில் ஈடு இணையற்ற அழகைச் சேர்த்தவர். பண்டைத் தமிழர் தம் வரலாறு, பண்பாடு குறித்துப் பற்பல ஆய்வுகளையும், அகழ்வாராய்ச்சிகளையும் மேற்கொண்டவர். அதன்மூலம் உலக மொழிகளிலெல்லாம் மூத்ததாய் இருக்கக் கூடும் என உலகிற்கு அறிவித்தவர்.
24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 ஜனவரி 8ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது பணியைத் தொடங்கினார். தனது பணிக்குத் தமிழ்மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.
தான் வந்த பணி சமயப் பணியாக இருந்தாலும் தமிழ்ப் பணியைத் தன் தலைப்பணியாக இன்பச் சுமையேற்றார். அயல் மொழிகளில் வெளியான தமிழர் குறித்த நூல்களை ஆய்ந்தார். மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகள் அவருக்குக் கைகொடுத்தன. அதனைப் படித்தபோதுதான் தமிழ்நாடு பன்னெடுங்காலமாக அயல்நாடுகளான கிரேக்கம், ஹீப்ரு ஆகிய மொழிகளோடும் அம்மக்களோடும் உறவு வைத்திருப்பதை அறிந்தார். உதாரணத்திற்கு ஹீப்ருவில் துகி என்பது தமிழில் தோகை, கிரேக்கத்தில் அருசா என்பது தமிழில் அரிசி போன்றவற்றை ஆய்ந்தறிந்தவருக்கு அப்போதுதான் தமிழின் தொன்மமும் அதன் காலத்தால் அது மூத்த மொழியாக இருப்பதும், இதர திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், துளு, கன்னடம், குடகு தமிழிலிருந்தே பிறந்திருப்பதும் மட்டுமல்லாமல் நீலகிரி, ஒரிசா மற்றும் நாகபுரி ஆகிய மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மொழிகளும் மற்றும் வடக்கே பலுசிஸ்தானத்தில் பேசப்படும் பிராகி மொழியும் தமிழ் மொழியிலிருந்து பிறந்த திராவிட மொழிகளே எனத் தம் ஆய்வின் மூலம் அறியப்படுத்தினார்.
ஏறத்தாழ பதினெட்டு மொழிகளில் புலமை பெற்றிருந்த கால்டுவெல் கிட்டத்தட்ட அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப்பணி செய்து இறுதிக் காலத்தில் நீலமலையில் தங்கி ஓய்வெடுக்கும் காலத்தில் கண்மூடினார். அவரது நினைவு நாள்: ஆகஸ்ட் 28 (1891)
Leave a Reply