ஒரு பெரிய செல்வந்தன், தன் வேலைக்காரனை அழைத்து, “வெளியில் இரண்டு காக்கைகள் ஒன்றாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் சொல். அவற்றை நான் பார்த்தால் நன்மை கிடைக்கும்’’ என்றான்.
வெளியே சென்று பார்த்த வேலைக்காரன், செல்வந்தனிடம் வந்து, இரண்டு காக்கைகள் ஒரே இடத்தில் இருப்பதாகச் சொல்லி அழைத்தான். அவனுடன் செல்வந்தனும் வெளியே சென்று பார்க்க, ஒரேயொரு காக்கை மட்டும்தான் அமர்ந்திருந்தது.
கோபம் அடைந்த செல்வந்தன், “என்னை ஏன் காலதாமதமாக அழைத்தாய்? ஒன்று பறந்து போய்விட்டது. இரண்டையும் ஒரே நேரத்தில் பார்த்திருந்தால், எனக்கு இன்று அதிக நன்மை கிடைத்திருக்கும்’’ என்று சொல்லி, வேலைக்காரனை அடித்தான்.
அடிதாங்க முடியாத வேலைக்காரன், “முதலாளி, இரண்டு காக்கைகளைப் பார்த்தால் நன்மை விளையும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இரண்டு காக்கைகளையும் ஒன்றாக பார்த்த எனக்கு தங்களிடம் அடியல்லவா கிடைத்தது’’ என்று சொன்னான் அழுதபடி.
இதைக் கேட்ட செல்வந்தன், தன் மூடநம்பிக்கையை உணர்ந்து வேலைக்காரனைப் பாராட்டினான்!
Leave a Reply