கடவுளுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை என்று கூறும் ஆத்திகர்கள் _ நம்பிக்கை யாளர்களின் நகைமுரண்பாடு எது தெரியுமா?
பிறக்காத கடவுளுக்கு (சரியாகச் சொல்ல வேண்டுமானால் இல்லாத கடவுளுக்கு) பிறப்புக் கொண்டாடியும் இறப்புக்கான புராணக்கதை கூறுதலும் ஆகும்!
விநாயகருக்கு _ “சதுர்த்தி’’ (பிறந்த நாள்)
கிருஷ்ணருக்கு _ “அஷ்டமி’’
ராமனுக்கு _ “நவமி’’
கந்தனுக்கு _ “சஷ்டி’’
பிள்ளையார் சதுர்த்தியாம்! _ செப். 25இல் முன்பு ஆண்டுதோறும் ஒருநாள். அதுவும் வெறும் மூடநம்பிக்கை மட்டும்தான்; களிமண் பிள்ளையாரை, செய்யும் இடத்திற்கே சென்று, கையில் உள்ள காசுக்கேற்ப வாங்கிவந்து, கொழுக்கட்டைப் படையல் வைத்து, பிறகு குளத்திலோ, கிணற்றிலோ, ஆற்றிலோ போட்டுவிடுவார்கள். பக்தர்களின் ஆக்கலும் அழித்தலும்தான் அது!
விநாயகர் பிறப்பு ஆபாசம்! அறுவறுப்பு. (கதைகள் தனியே தரப்பட்டுள்ளன! படியுங்கள்!) இப்படி வெறும் மூடநம்பிக்கைப் பண்டிகையாகக் கொண்டாடப்பட்ட இந்தப் பண்டிகையை, விபரீதமான மதவெறிக்குத் திருப்பியவர், மஹாராஷ்டிர மாநில பாலகங்காதரதிலகர் என்ற மராத்திப் பார்ப்பன வெறியர்.
மராத்திய பகுதியான முந்தைய பம்பாய் மாகாணத்தில், திலகர் இதை ‘கணேஷ் திருவிழா’ என்று சில அடி உயரப் பிள்ளையார் உருவச் சிலைகளை உருவாக்கி அதை முச்சந்தி, நாற்சந்திகளிலும், வீடுகளின் திண்ணைகளில் அல்லது வெளிப்புறங்களில் வைத்து பக்தி போதையை ஏற்றி, வெள்ளையர்களுக்கு எதிராக இதனை ஆயுதமாகப் பயன்படுத்தினார்.
பிளேக் பரவியபோது, அதை ஒழிக்கத் தீவிரம் காட்டி, பல எலிகளைக் கொன்று பிளேக்கிலிருந்து அம்மக்களைக் காப்பாற்றிய வெள்ளைக்கார கலெக்டரைப் பாராட்டுவதற்குப் பதிலாக, சுட்டுக் கொன்றார்கள். காரணம், பிரிட்டிஷ்காரன் நமது விரோதியானபடியால், நமது விநாயகர் வாகனங்களை ஒழிக்கிறார் என்று பிரச்சாரம் செய்து, அப்பாவி மக்களை அவருக்கு எதிராக ஏவிவிட்டவர் இந்தத் திலகர்.
இப்போது வடநாட்டிலிருந்து பிள்ளையார் பொம்மைகளை பெரும் அளவில் செய்து (வடநாட்டு முதலாளிகளின் பணத் திருவிளையாடல் காரணம்) இங்கே 2000, 3000, 5000 என்று பொம்மை விளையாட்டு விளையாடி, பார்ப்பன சனாதன ஹிந்து வெறியை ஊட்டி, இஸ்லாமியர்களின் மசூதிக்குப் பக்கம் ஊர்வலம் சென்று, அங்கே “பிரச்னைகளை உருவாக்கி, மதக் கலவரத்தை விதைக்கின்றார்கள்.
எனவே, இப்போது _ இன்றைய காலகட்டத்தில், அந்தப் பண்டிகை, பிள்ளையார் பின்னால் காவிக் கொடியும், கலகம் செய்வோரும், காலிகளும், கூலிகளும்தான் உள்ளனர்.
முன்பு, வெறும் மூடநம்பிக்கை மட்டும். அதனால், சமூகம் ஒருங்கிணைப்புக்கு ஆபத்தில்லாத அறியாமைச் செயலாக மட்டுமிருந்தது. இப்போதோ, ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி என்ற காவிக் கலவரக் கும்பல்களின் மதவெறி தூண்டும் வம்புகள் காரணமாக, மதக் கலவரமும், சமூக நல்லிணக்கப் பாதிப்பும் ஏற்படுகின்றன.
கூடுதலாக, பலவித சாயங்கள் கலந்து மாசுக் கட்டுப்பாட்டுக்கு எதிராய் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் பேரபாயமும் ஏற்படுகிறது!
உயர்நீதிமன்றம் சுற்றுச்சூழல் மாசுபடக் கூடாது என்பதில் கண்டிப்பான உத்தரவுகளை வழங்கியும் அவற்றைப் புறந்தள்ளி, ஆட்சியாளர்கள், மக்கள் வரிப் பணத்தில் ஒரு லட்சம் காவலர்களைப் பாதுகாப்புப் பணிக்கு ஒதுக்கி, அரண் அமைத்து கலவரம் நிகழாது தடுத்து நிற்பதும், நீர்நிலைகளில், கடலில், இரசாயனம் கலந்த பிள்ளையார் சிலைகளைக் கரைக்க அனுமதிப்பதும் சரியா? தேவையா? மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் அரசும் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியது கட்டாயக் கடமையல்லவா?
பூஜைக்குப் பின்னே கலவரம் ஒளிந்துள்ளது!
சில ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணி மசூதி வழியே செல்ல ஒரு முயற்சி. அதனால் வெடித்த கலவரத்தால் துப்பாக்கிச் சூடுவரை சென்றதை மறக்க முடியாதே!
மதவெறி மாய்ப்போம்!
மனித நலம் காப்போம்!
கி.வீரமணி,
ஆசிரியர்.