தற்போது ஒரு நாளைக்கு இருமுறையோ அல்லது பயன்பாட்டைப் பொறுத்து பல முறைகளோ உங்கள் செல்போன்களை சார்ஜ் செய்கிறீர்கள். ஆனால், தற்போது மூன்று மாதங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே சார்ஜ் செய்து பயன்படுத்தும் அளவிற்கு விஞ்ஞானிகள் ஒரு உபகரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த உபகரணத்தைப் பயன்படுத்துவதால் செல்போன்கள் தற்போது இயங்குவதற்குப் பயன்படுத்தப்படும் சக்தியைவிட 100 பங்கு குறைவான சக்தியையே பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும்.
‘மெக்சிகன்’ மற்றும் ‘கார்நெல்’ பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காந்த மின்புல பல்முனைச் செயல் உலோகம் (Magneto Electric Multiferroic Material) ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமே உலகின் மொத்த மின் உற்பத்தியில் 5% பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்கின்றன. இது வருங்காலங்களில் இன்னும் அதிகமாகும் என்கிறார் லாரன்ஸ் பர்க்லி தேசிய ஆய்வகத்தின் (Lawrence Berkeley ) சக்தி தொழில்நுட்ப ஆய்வகத்தின் அசோசியேட் இயக்குநரான இராமமூர்த்தி ரமேஷ்.
2030ஆம் ஆண்டுவாக்கில் உலக மொத்த மின் உற்பத்தியில் 40 முதல் 50 சதவீத சக்தியை எலக்ட்ரானிக் பொருள்களே எடுத்துக் கொள்ளும் நிலை வரும். எனவே, இப்படி சக்தியை சிக்கனமாகச் செலவிடும் சாதனங்களின் கண்டுபிடிப்பு உலகளவில் தேவைப்படுவதாகும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.