தனது மகன் இராஜாவின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு கனகவேல் சோதிடரைப் பார்க்கக் கிளம்பினார். செல்லும் வழியில் சோதிட ஆய்வு நிலையம் என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்தார். இந்தச் சோதிடரிடமே பார்த்துவிடலாம் என்று கருதிய அவர் அந்த வீட்டிற்குள் நுழைந்தார்.
சோதிடர் கனகவேலை உட்கார வைத்து வந்த விவரம் கேட்டார்.
“அய்யா, என் மகனுக்கு மோரூரிலிருந்து ரம்யா என்ற பெண்ணின் ஜாதகம் வந்துள்ளது. என் மகனின் ஜாதகத்தையும் ரம்யாவின் ஜாதகத்தையும் பார்த்து நீங்கள் பொருத்தம் சொல்ல வேண்டும்’’ என்று கூறியபடியே கனகவேல் இரண்டு ஜாதகங்களையும் கொடுத்தார்.
இரண்டு ஜாதகங்களையும் பார்த்த சோதிடர் ஒரு தாளில் எதேதோ எழுதிப் பார்த்துவிட்டு “ரொம்பப் பொருத்தமான ஜாதகம். கல்யாணம் செய்யலாம். பத்துக்கு எட்டுப் பொருத்தம் இருக்கு. பேஷா முடிங்க’’ என்றார். தாளில் எழுதியும் கொடுத்தார்.
கனகவேல் மிகவும் மகிழ்ச்சியுடன் சோதிட நிலையத்தை விட்டுக் கிளம்பினார். உண்மையில் அவருக்கு ஜாதகத்தின் மீது துளியும் நம்பிக்கை கிடையாது. ஆனால், அவரது துணைவியார் கமலாவுக்காக இதை-யெல்லாம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தார். பின்னாளில் ஏதாவது கோளாறு என்றால் தன்னைக் குற்றம் சொல்வாளே என அஞ்சியே ஜாதகம் பார்த்தார்.
* * *
வீட்டிற்குள் நுழையும்போதே துணைவி கமலாவை அழைத்தார்.
“கமலா, மோரூர் பெண் ஜாதகம் ஜோரா பொருத்தப்படுது. ஜோசியர் சொல்லிட்டார். பொண்ணு பார்க்க நாளைக்கே போகலாம். இராஜாகிட்ட சொல்லிடு. நான் மோரூருக்கு தகவல் சொல்லிடுறேன்’’ என்றார்.
“அப்படியா, ரொம்ப நல்லதாப் போச்சி. ஜாதகம் பொருத்தமா இருந்தா போக வேண்டியதுதானே’’ கனகவேலிடம் மகிழ்ச்சியுடன் சொன்னாள் கமலா.
மறுநாள் கனகவேலும் கமலாவும் தங்கள் மகன் இராஜாவை அழைத்துக்கொண்டு மோரூர் சென்றனர்.
பெண்ணின் வீட்டிற்குச் சென்றதும் ரம்யாவின் பெற்றோர்கள் அன்புடன் வரவேற்றனர். மாப்பிள்ளை இராஜாவை அனைவருக்கும் பிடித்துவிட்டது.
சிற்றுண்டிக்குப் பின் ரம்யாவை அவளது அம்மா அழைத்து வந்தார். முதல் பார்வையிலேயே அவளை இராஜாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இராஜாவின் குடும்பத்தைப் பற்றி ஏற்கனவே ரம்யா கேள்விப் பட்டிருந்ததால் அவளுக்கு இராஜாவை மிகவும் பிடித்துவிட்டது. இந்தத் திருமணம் நடக்க வேண்டும் என மனதார விரும்பினாள். அந்த எண்ணத்தில் கமலாவின் பாதங்களை நன்கு குனிந்து தொட்டு வணங்கினாள். கமலா அவள் தோள்களைப் பிடித்து எழச் செய்தாள். எழுந்த ரம்யா கமலாவை ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் தெரிந்தன.
“என்னை உங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ளுங்கள்’’ என அவள் கண்கள் கெஞ்சின. அவள் முகம் கமலாவின் மனதில் ஆழமாக பதிந்தது.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கனகவேலும் ரம்யாவை மருமகளாக்க முடிவு செய்துவிட்டார்.
சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அனைவரும் மோரூரிலிருந்து கிளம்பி தங்கள் ஊருக்கு வந்தனர்.
“இராஜா, பெண் எப்படி?’’ என மகனிடம் கேட்டார் கனகவேல்.
“நல்ல குடும்பம் அப்பா. ஒரு பையன், ஒரு பெண் உள்ள குடும்பம். எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு’’
“நீ என்ன சொல்றே கமலா?’’
“எனக்கும் பிடிச்சிருக்கு. முடிவு பண்ணிடலாம். ஆனா, அதுக்கு முன்னாடி இன்னொரு தடவை நல்லா ஜோசியம் பார்த்துடணும். உங்க தங்கைகூட ஒரு நல்ல ஜோசியரைச் சொல்லி இருக்காங்க. அந்த ஜோதிடரைப் பார்த்துட்டு வர்றேன். பிறகு சொல்லிடலாம்’’ என்றாள்.
இதைக் கேட்ட கனகவேல் திடுக்கிட்டார். தான் பார்த்த சோதிடரைப் பிடிக்காமல் வேறு சோதிடரைப் பார்க்கச் சொல்வது அவருக்குப் பிடிக்கவில்லை. அதுவும் இரம்யா வீட்டிற்குச் சென்று வந்ததுக்குப் பிறகு! ஆனாலும் கமலாவின் முடிவை அவரால் தடுக்க இயலாது.
“சரி, சரி. ஏதாவது செய். இதை பெண் பார்க்கச் செல்வதற்கு முன்பே செய்திருக்கலாம் அல்லவா! பெண் பார்க்கப் போய் டிபன் எல்லாம் சாப்பிட்டுவிட்டு ஜோசியம் பார்க்கச் சொல்றீயே, இது நல்லாயில்லை’’ என்று கோபப்பட்டுக் கூறினார் கனகவேல். ஆனால், அதை கமலா கொஞ்சம்கூட சட்டை செய்யவில்லை.
* * *
மறுநாளே இரண்டு ஜாதகங்களையும் எடுத்துக் கொண்டு கனகவேல் தங்கை சொன்ன ஜோதிடர் வீட்டுக்கு வந்தாள் கமலா.
அவரிடம் இருவர் ஜாதகங்களையும் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொன்னார்.
சோதிடர் இரண்டையும் வாங்கித் திருப்பித் திருப்பிப் பார்த்தார். தாளில் ஏதேதோ எழுதினார். பஞ்சாங்கத்தையும் பார்த்தார்.
ரம்யாவின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.
அதைக் கவனித்த கமலா பதட்டத்துடன், “என்ன ஜோசியர் அய்யா, பொருத்தம் எப்படி? நல்லாத்தானே இருக்கு?’’ எனக் கேட்டாள்.
“அம்மா, சொல்றேன்னு வருத்தப்படாதீங்க. இந்தப் பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் இருக்காது’’ என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.
திடுக்கென்றது கமலாவுக்கு. “நல்லா பாருங்க’’ என்றாள்.
“எத்தனை முறை பார்த்தாலும் பதில் ஒன்றுதான். இந்தப் பெண்ணுக்கு புத்திர பாக்கியம் இல்லை’’ என்று தீர்மானமாகச் சொன்னார் சோதிடர்.
மனம் சோர்ந்த நிலையில் வீட்டிற்கு வந்தாள் கமலா.
“என்ன ஆச்சு?’’ எனக் கேட்டார் கனகவேல்.
கமலா சோதிடர் சொன்ன விவரங்களைச் சொன்னாள். கனகவேலுக்குக் கோபம் வந்தது.
“இது என்ன பைத்தியக்காரத்தனம்! யாரோ சொல்வதைக் கேட்டு திருமணத்தை நிறுத்துவதா? நல்ல இடம், நல்ல பெண் இப்பவும் அந்த பெண்ணின் முகம் என் கண்ணிலேயே இருக்கு’’ என்றார்.
“குழந்தை பாக்கியம் இல்லைன்னு சொன்னதுக்குப் பிறகு எப்படி கல்யாணம் செய்வது? வேண்டவே வேண்டாம்’’
கமலா இப்படிச் சொன்னதைக் கேட்டு கனவேல் மட்டுமல்ல, இராஜாவும் அதிர்ச்சி அடைந்தான்.
“இராஜா, எனக்கு மட்டுமல்ல. உனக்கும் குழந்தைகள் மீது பாசம் அதிகம்னு எனக்குத் தெரியும். இந்த வீட்டுல குழந்தை இல்லைன்னா, உன்னை அப்பான்னு கூப்பிட யாரும் இல்லைன்னா என்னடா ஆவது? வம்ச விருத்தி இல்லைன்னு ஜாதகத்தில் இருக்கும்போது எப்படி கல்யாணம் பண்ணி வைக்க முடியும்? வேற பெண் பார்க்கலாம்’’ என்று கூறியபடி வந்திருந்த வேறு சில ஜாதகங்களைப் புரட்ட ஆரம்பித்தாள்.
ரம்யா வீட்டிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். ஜாதகம் சரியில்லை என்ற பதிலையே சொன்னாள் கமலா. ஆனால், அதை அவர்கள் நம்பாமல் மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டார்கள். ஆனால், கமலா கொஞ்சம்கூட இரங்கவே இல்லை. ஜாதகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தாள்.
இராஜா எதுவும் பேசவில்லை. அம்மா சொல்வதை அப்படியே நம்பிவிட்டதைப்போல் அவன் செயல் காணப்பட்டது.
ஆனால், கனகவேல் மட்டும் ரம்யாவையே தன் மருமகளாக கற்பனை செய்துகொண்டார். இருப்பினும் அனைவர் கருத்தும் ஒன்றாக இருந்தால் நல்லது என எண்ணி எதுவும் பேசாமல் இருந்துவிட்டார்.
* * *
மறுநாளே சாந்தா என்ற பெண்ணின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு முன்பு பார்த்த சோதிடர் வீட்டிற்குச் சென்றாள். தான் கொண்டுவந்த ஜாதகங்களைக் கொடுத்துப் பொருத்தம் பார்க்கச் சொன்னாள்.
“நல்லா பாருங்க அய்யா. இந்தப் பெண்ணிற்குக் குழந்தை பாக்கியம் கிடைக்குமா?’’ என்றாள்.
“பேஷா இருக்கு. சொல்லப்போனா நெறைய புள்ளங்களுக்குத் தாயாவாள்’’ என்று பதில் சொன்னார் சோதிடர்.
கமலா மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்து கனகவேலிடமும், இராஜாவிடமும் செய்தியைச் சொன்னாள்.
கனகவேல் மட்டும் மனக்குழப்பத்தில் இருந்தார். இருந்தாலும் மகனும் அம்மா பேச்சை கேட்பதால் அவர் எதுவும் பேசவில்லை.
மறு மாதமே திருமணம் நடைபெற்றது.
* * *
இருபத்தைத்தாண்டுகளுக்குப் பிறகு,
ஒரு நாள் கமலா சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.
தனது மருமகள் சாந்தாவுக்கு நிறைய குழந்தைகள் பிறக்கும் என்று சோதிடர் சொன்னாரே! ஆனால், ஒரு பிள்ளைகூட பிறக்கவில்லையே! ஜாதகத்தை நம்பியது தவறா? ஜாதகம் பொய்தானா!
திடீரென அவருக்கு ரம்யா நினைவு வந்தது. அவளுக்கு எந்த ஊரில் திருமணம் ஆயிற்றோ! சோதிடனை நம்பி அவளை வேண்டாம் என்று கூறியதை நினைவுபடுத்திப் பார்த்தார்.
இப்படிப் பலவாறாக எண்ணிக் கொண்டிருந்தபோது கனகவேல் அங்கு வந்தார்.
“என்ன யோசனை பண்றே. நாளைக்கு நம்ப பேரனுக்கு பெண் பார்க்க விழுப்புரம் போகணும். ஜாதகம் நல்லா பார்த்துக்கோ. அப்புறம் ஏதாவது சொல்லி எல்லோரையும் குழப்பாதே’’ என்றார்.
“ஜாதகத்தில் எனக்கு பாதி நம்பிக்கை போய்விட்டது. வயதான காலத்தில் விழுப்புரத்திற்கு நாமும் போகவேண்டுமா?’’ என்று சோர்வுடன் சொன்னார் கமலா.
ஜாதகம் பார்த்து திருமணம் செய்து வைத்த தன் மருமகள் சாந்தாவுக்கு குழந்தை இல்லை. அதனால் குழந்தைகள் மீது மிகுந்த பற்று கொண்ட அவரது மகன் இராஜா ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தான்.
அந்தக் குழந்தை பெரியவனாகி படித்து ஒரு நல்ல நிறுவனத்தில் பணியிலும் சேர்ந்து-விட்டான். அந்த வளர்ப்புப் பேரனுக்குத்தான் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. இராஜா தனது அம்மாவும் அப்பாவும் கண்டிப்பாக பெண் பார்க்க வரவேண்டுமென்று கூறிவிட்டான்.
* * *
விழுப்புரத்தில் பெண் வீட்டில் அனைவரும் வந்து அமர்ந்தனர். தங்கள் வளர்ப்புப் பேரனுக்கு இந்த இடம் நல்லதாகப் பட்டது கனகவேலுக்கு. ஆனால் கமலா ஜாதகம் பார்த்து கெடுத்து விடுவாளோ என எண்ணி பயந்தார்.
பெண் வீட்டில் அமர்ந்த கமலா நாலா திசையிலும் கண்களை சுழலவிட்டார். பெண்ணின் அம்மாவைக் காணவில்லை. அவரைப் பார்க்க வேண்டும் என அவர் மனம் ஏனோ விரும்பியது.
அதேநேரத்தில் வீட்டிற்குள்ளிருந்த பெண்ணின் அம்மாவானவள் சிறிது நேரம் கமலாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ பழைய நினைவுகளால் உந்தப்பட்ட அவள் மெல்லத் தலைகுனிந்தவண்ணம் வந்து கமலாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினாள். கமலா அவள் தோளைத் தொட்டு எழுப்பி அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.
அதிர்ச்சியில் “ஆ’’ என்றார். அதற்கு மேல் பேச முடியவில்லை. கண்களைக் கசக்கியபடி மீண்டும் அவளைப் பார்த்தார்.
ஆம்! ரம்யாவேதான். குழந்தைப் பேறு இருக்காது என்று சோதிடன் பேச்சை நம்பி தன் மகனுக்கு வேண்டாம் என்று ஒதுக்கிய அதே ரம்யாதான். இன்று அவள் ஒரு பெண்ணிற்கும் இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் தாய். அவள் பெண்ணிற்குத்தான் திருமண ஏற்பாடு செய்கிறார்.
“இந்தத் திருமணம் நடந்தாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி. அது மற்றவர்கள் விருப்பம். ஆனால், ஜாதகத்தின் மீது எனக்கிருந்த பாதி நம்பிக்கையும் போய்விட்டது. ஜாதகம் பார்ப்பது அயோக்கியத்தனம். ஜாதகம் பார்ப்பதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப் போகிறேன்’’ என்று மனதிற்குள் நினைத்து அறிவுத் தெளிவு கொண்டார் கமலா.
-ஆறு.கலைச்செல்வன்