தனக்குத் தெரிந்தவையே சிறந்தவை என்று எண்ணக்கூடாது
தனக்குத் தெரிந்த மனிதர்; தனக்குத் தெரிந்த கருத்து; தனக்குத் தெரிந்த பொருள்; தனக்குத் தெரிந்த இடம்தான் சிறந்தது என்று எண்ணுவதும், அதற்கு மேல் இல்லை என்று நம்புவதும் கூடாது.
காரணம், அதைவிட சிறந்த கருத்து எவ்வளவோ இருக்கும்; சிறந்த மனிதர் பலர் இருப்பர்; உயர்ந்த பொருளும் சிறந்த இடமும் இருக்கும்.
எனவே, தான் அறிந்தவற்றை மட்டும் வைத்து எதையும் மதிப்பிடக் கூடாது. முடிவு கட்டக் கூடாது. இன்னும் உயர்வானது உள்ளதா? என்ற தேடலில் ஈடுபட்டால்தான் புதியன கிடைக்கும், உண்மை புலப்படும்.
உலகம் என்பதே கன்னியாகுமரிக்கும் இமய மலைக்கும் இடைப்பட்ட பகுதி என்று எண்ணினான் புராணக் கால மனிதன். உலகம் அவ்வளவுதானா? இல்லையே!
புராணத்தைப் புறந்தள்ளிப் புறப்பட்டதால் உலகின் பல நாடுகள் கண்டறியப்பட்டன. உலகத் தொடர்பால் அறிவியல் வளர்ந்தது. உலகம் செழித்தது. உலகம் ஒரு குடும்பமாக இன்று நெருங்கி வருகிறது. விண்ணிலுள்ள கோள்களிலும் வீடு அமைக்க முயற்சிக்கிறோம்.
எனவே, நமக்குத் தெரியாதது, நாம் அறியாதது நிறைய உண்டு என்று எண்ணி முயல வேண்டும்; அறிய வேண்டும்.
உண்மைகளை அறிய அஞ்சக் கூடாது
கண்ணதாசன் அவர்களின், ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற நூலுக்கு எனது 24ஆவது வயதில் நான் மறுப்பு எழுதி (நூல்: அர்த்தமற்ற இந்துமதம்) அது சிதம்பரம் மேலவீதியில் உள்ள முகுந்தன் அச்சகத்தில் அச்சாகிக் கொண்டிருந்தது.
மேலவீதியில் உள்ள தீட்சிதர் ஒருவர் அந்த அச்சகத்திற்கு வந்தபோது அதில் சில பக்கங்களைப் படித்துள்ளார். முதல் கட்டுரையே கடவுள் உண்டா இல்லையா? கட்டுரை சிந்தனையைத் தூண்டும்படியாகச் செய்திகள் இருந்ததால் வீட்டிற்கே கொண்டு சென்று படித்துள்ளார் தன் மனைவிக்குத் தெரியாமல்.
அன்றையிலிருந்து அவர் பேச்சில் மாற்றம் தெரிய, அவர் மனைவி, “என்னங்க, நேற்றிலிருந்து வேறு மாதிரி பேசறீங்க’’ என்று கேட்க, இவர் இந்த நூலைக் காட்டியுள்ளார். ‘முதல்ல இதைக் கொண்டு போய் கொடுத்துட்டு வாங்க’ என்று தீட்சிதரை விரட்ட அவர் நூலோடு முகுந்தன் அச்சக உரிமையாளர் ரகுபதியிடம் வந்து, “அய்யா இந்த நூலைப் பூரா படித்தா நான் மாறிடுவேனோன்னு எனக்குப் பயமா இருக்கு. இந்தாங்க’’ என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டாராம்.
இப்படித்தான் பலர்! உண்மை அறியவே தயங்குகின்றனர். தன்னிடம் உள்ள நம்பிக்கை தகர்ந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.
இது தவறு. எங்கு உண்மை கிடைத்தாலும் அறிய வேண்டும். எது சரியோ அதை ஏற்க வேண்டும். எது ஏற்புடையதல்லவோ அதை விட வேண்டும்.
மாறாக, உண்மைகளை ஒதுக்கிவிட்டுப் பழைய மூடநம்பிக்கையிலேதான் மூழ்கிப் கிடப்பேன் என்பது முட்டாள்தனமாகும். மனிதத் தன்மைக்கு எதிராகும்.
சுற்றியுள்ளவற்றில் கற்கத் தவறக்கூடாது
உலகில் நம் கண்ணில் படும் எல்லாமும் கற்பிக்கும் நூல்களே! ஒவ்வொன்றிலிருந்தும் நாம் ஒரு பாடம் கற்கலாம். இதனடிப்படையில் நான் ஒரு நூலே எழுதியுள்ளேன். ‘சுற்றி உள்ளவை கற்றுத் தருபவை!’’ என்பதே அது.
புளியம்பழம், பூனை, வண்டி, வில் என்று எல்லாவற்றிலிருந்தும் நாம் என்ன பாடம் கற்கலாம் என்பதே அந்த நூல். கோவை விஜய பதிப்பகம் வெளியிட்டுள்ள அந்த நூல் பரவலாகப் பலராலும் பாராட்டப்பட்டது. ‘பாக்யா’வில் மூன்று ஆண்டுகள் தொடராக வந்த பின் நூலாக வந்தது.
எனவே, நாம் நம்மைச் சுற்றியுள்ள பூக்கள், செடிகள், மரங்கள், பொருட்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்று எல்லாவற்றையும் கூர்ந்து நோக்க வேண்டும். இரசிக்க வேண்டும், கற்க வேண்டும்.
இது அறிவும் வளர்க்கும், நிறைவும் கொடுக்கும். பயணங்களின்போது இயற்கையை இரசித்துக் கொண்டு செல்கின்றவனுக்கு உலகும் தெரியும், உண்மையும் புரியும், பயணக் களைப்பும் இருக்காது.
வாழ்வும் அப்படித்தான். இலக்கு நோக்கி உழைத்தாலும் இடையிடையே பலதையும் காண வேண்டும்; இரசிக்க வேண்டும், மகிழ வேண்டும். மன இறுக்கம் அகலவும், மனமாற்றம் ஏற்படவும், மனச்சுமை நீங்கவும், புத்துணர்வு பெறவும், புதிய சிந்தனைகள் மலரவும் இது வழிவகுக்கும்.