“கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டில் வாழ்வதினும், கடும்புலி வாழும் காட்டில் வாழ்வதே மேல்’’ என்று ஒரு கூற்று உண்டு. இந்தக் கூற்று இன்றைய மோடி அரசின் குடிமக்களுக்கு மிகவும் பொருந்தக் கூடியதே! இவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அமல் செய்துவரும் சட்டங்களால் மக்கள் மீண்டதினும் மாண்டதே அதிகம். பசுப் பாதுகாப்பு, மாட்டுக்கறித் தடை, இறைச்சிக் கடைகளை இழுத்து மூடியதோடு, பசுப் பாதுகாவலர்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு கொக்கரித்து எழுந்தமையால், 25க்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் இரவு 8.00 மணி அறிவிப்பு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது. இந்த அறிவிப்பு நாட்டு மக்களின் அன்றாட வாழ்வையே நிலைகுலையச் செய்தது; அனைத்துச் செயல்பாடுகளும் தடைபட்டு நின்றன. திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளைக்கூட நிகழ்த்த முடியாது திண்டாடிய கொடுமை. ஆனால், இந்த அறிவிப்பின்மூலம் அவர்கள் சொன்ன எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஆனால், அதன் கேடுகள் இன்றளவும் தொடர்கின்றன.
இந்தச் சீர்குலைவில் ஜூலை 1ஆம் நாள் பிறக்கின்ற நேரமான நடுஇரவில் ஒரு நயவஞ்சக அறிவிப்பு நாட்டு மக்களின் நெஞ்சைத் தாக்கியது. ஆம்! அதுதான் ஜி.எஸ்.டி. என்ற வரித் திணிப்பு நடைமுறைக்கு வந்தது.
பன்முக இந்தியாவை படுபாதாளத்தில் புதைத்து. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒற்றை மதம் என்கிற பாஸிசத் திட்டமும் எதிர்ப்புகளையும் மீறி ஆதிக்க வெறியுடன் படிப்படியாய் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முந்தைய காங்கிரஸ் அரசு இதைவிடச் சுமை குறைந்த ஜி.எஸ்.டி. திட்டத்தை அமலாக்க முயன்றபோது, அன்றைய குஜராத் முதல்வரும், இன்றைய இந்தியப் பிரதமருமான இரட்டை வேட மோடி, அந்தத் திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தார். இதனால் மாநிலங்களின் உரிமை பறிபோகும் என்றும், மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்றும் வெறியாட்டம் ஆடினார். இன்றோ இதுதான் சர்வரோக நிவாரணி என்றும் நாங்கள் புத்துலகப் பொருளாதார மேதைகள் என்றும் கொக்கரிக்கிறார்கள்.
ஆனால், இதன் அவலத்தை பொருளாதார வல்லுநர்கள் சிலரே விலாவாரியாக விளக்குகின்றனர். இது அவசரகதியில் அள்ளித் தெளிக்கப்பட்ட கோலமே தவிர ஆழ்ந்து அனைத்தையும் சிந்தித்து வடிக்கப்பட்டதன்று என்று வகைப்படுத்துகின்றனர்.
இந்த வரிவிதிப்பு பணக்காரர்களுக்கு பயன் தருவதாயும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வைச் சீரழிப்பதாயும் உள்ளது.
1. காலையில் எழுந்ததும் பல்துலக்குவீர்கள் அல்லவா! அதற்குப் பற்பசையும் பிரஷ்ஷும் அவசியமல்லவா! இவற்றிற்கான வரி ஜி.எஸ்.டி.யில் 14.5%-_லிருந்து 28%மாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
2. பல்துலக்கியபின் காபி, டீ அருந்துவீர்களா? ஆம். எனில் அவற்றின் வரியும் 14.5%லிருந்து 28%ஆக உயர்வு. இவற்றில் பயன்படுத்தும் சர்க்கரை சுத்தகரிக்கப்பட்ட சர்க்கரையாயின் அதன் வரி 5%லிருந்து 28%ஆக உயர்த்தப்பட்டுள்ளது ஜி.எஸ்.டி.யில்.
3. அடுத்து முகம் மழிப்பீரா? அதற்கான கிரீம், (After Shave cream) 14.5%லிருந்து 28%ஆக உயர்வு.
4. அடுத்து குளிக்கப் போகிறீர்களா? சோப்பின்றியா, ஷாம்பூ இல்லாமலா குளிப்பீர்? அதிலேயும் கைவைத்து விட்டனரே இந்த இந்துத்துவ கும்பல். ஆம். அவற்றிற்குப் 14.5%லிருந்து 28%ஆக வரி.
5. முடிக்குப் போடுகிற கருவண்ணம் (Hair dye) மற்ற வாசனைப் பொருள்களுக்கும் 14.5%லிருந்து 28%ஆக உயர்வு.
6. பெண்கள் காலை எழுந்தவுடன் சமையல் செய்யவேண்டிய நிலையில் உள்ளனர். அதற்கான அடுப்பின் விலை (Gas Stove) 14.5%லிருந்து 28% ஆக உயர்வு. அடுப்பின் மீதேற்றும் அலுமினியப் பாத்திரத்திற்கு இதுவரை வரி இல்லை. ஆனால், இனி 12% ஜி.எஸ்.டி. கட்டாயம்.
7. வரியே இல்லாதிருந்த பருப்பு வகைகளுக்கு ஜி.எஸ்.டி.யில் 5% வரி. வரியே இல்லா புளிக்கு தற்போது 12% ஜி.எஸ்.டி. உணவு எண்ணெய்க்கு 12%லிருந்து 18%ஆக வரி உயர்வு. பேக் செய்யப்பட்ட கோழிக்கறி, வெண்ணெய் ஆகியவற்றிற்கு 6% ஆக இருந்தது ஜி.எஸ்.டி.யில் 12%மாக இரட்டிப்பாக உயர்வு. ரவை, மைதா வரியில்லா நிலையில் இருந்து 5% வரி ஜி.எஸ்.டி.யில்.
பாக்கெட் செய்யப்பட்ட தண்ணீருக்கு 18% ஜி.எஸ்.டி. இதனால் 20 லிட்டர் கேன் ரூ.10 வரை விலை உயர வாய்ப்புண்டு.
வீட்டில் உண்போர் நிலை இதுவானால் உணவு விடுதிகளில் உண்போர் நிலையோ அந்தோ பரிதாபம்! எல்லா உணவுப் பண்டங்களும் 20% உயர்வு கண்டுவிட்டது.
சில உணவகங்களில் 25 ரூபாய்க்கு விற்ற 2 இட்டலிகள் ஜூலை 1 முதல் 30 ரூபாயாகவும், தோசை 50_55 ரூபாயிலிருந்து 55_60 ரூபாயாகவும் , கார வகைகள் ஒரு கிலோவுக்கு ரூ.40ம் உயர்ந்துவிட்டன.
8. தொலைத் தொடர்பு சேவை, லாண்டரி சேவை, பாதுகாப்பு சேவை (Security Service) வங்கிச் சேவைகள், கூரியர் தபால் சேவை ஆகியவைகளின் சேவை வரி 15%லிருந்து 18%ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
9. அனைவரும் பயன்படுத்தும் செல்போன் வரி 5%லிருந்து 12%. ஆக ஜி.எஸ்.டி. நிர்ணயம்.
10. முதியவர்கள் மட்டுமன்றி சிறுவர்கள் முதல் அனைவரும் மழைக்கு மட்டுமன்றி வெயிலுக்கும், வெளியில் போகும்போது எடுத்துச் செல்லும் குடைக்கு 5%லிருந்து 12%ஆக ஜி.எஸ்.டி. நிர்ணயம்.
11. ஜவுளித்துறைக்கும், பட்டாசு தயாரிப்புத் துறைக்கும் திரைப்படத் துறைக்கும் விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி.யை எதிர்த்து திருப்பூர் ஜவுளியாளர்களும், பட்டாசுத் தொழிலாளர்களும், திரையரங்கு உரிமையாளர்-களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதே அத்துறைகளின் மீது ஜி.எஸ்.டி.யின் தாக்குதலை பறைசாற்றுகிறது!
12. கோவை மின் மோட்டார் தயாரிப்பாளர்களுக்கு மின்மோட்டாருக்கு 12% ஜி.எஸ்.டியும் உதிரி பாகங்களுக்கு 18% ஜி.எஸ்.டியும் என்பது மிகவும் பாதிக்கும் என்றும் இதனால் விவசாயிகள் பயன்படுத்தும் மின்மோட்டார் மற்றும் சாதனங்களின் விலை உயரும் என்றும் எச்சரிக்கின்றனர்.
13. ஏழைகளுக்கு உதவுவதாக எக்காளமிடும் இந்த அரசு முந்திரி பருப்புக்கு 5%லிருந்து 12%ஆக உயர்த்தி ஏழை பாழைகள், குழந்தைகள் உண்ணும் கடலை மிட்டாய்க்கு (வேர்க்கடலை + வெல்லம் கலந்தது) வரியில்லா நிலையிலிருந்து 18% ஜி.எஸ்.டி. விதித்திருப்பது என்னய்யா நியாயம். ஏழைகளின் அரசா?
சொந்த வீடு என்பது அனைவரின் ஆசை! பலருக்கும் அந்த ஆசை நிறைவேறவே வாய்ப்பில்லை! தப்பித்தவறி அதைப் பெற முனைபவர்களுக்கும் முட்டுக்கட்டையிடும் அறிவிப்புகளாக பெயிண்ட், வார்னிஷ், செராமிக் ஓடுகள் சிமெண்ட் இவைகளின் மீதான வரி 14.5%லிருந்து 28%ஆக இரு மடங்கு உயர்வு அமைந்துள்ளது.
பொதுமக்கள் குடிக்கும் தண்ணீருக்குக்கூட வரிபோட்ட இந்த வன்நெஞ்சினர், மதுப்பிரியர்-களான ‘குடிமக்கள்’ குடிக்கும் மதுவகை-களுக்கு எந்த வரி உயர்வும் இல்லை. ஜி.எஸ்.டி.யின் உள்ளேயே கொண்டு வரவில்லை! என்னே கரிசனம்? யார் மீது கரிசனம்? சாராய சாம்ராஜ்ய கொள்ளையர்கள் மீதல்லவா?
அது மட்டுமா? பணக்கார பிரபுக்கள் பயன்படுத்தும் கார்களுக்கான வரி குறைக்கப்-பட்டிருக்கிறது. ஏழைகளை வஞ்சித்து கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்கே இவர்கள் ஆள்கிறார்கள் என்பதற்கு இவற்றை-விட வேறு என்ன சான்று வேண்டும்?
வளர்ச்சி, வளர்ச்சி என்ற வாக்குறுதியில் மயங்கி வாக்களித்தோரே, வன்கனாளர்களை அரியணையேற்றி அழகு பார்ப்போரே இந்த ஜி.எஸ்.டி.யாவது உங்கள் கண்களைத் திறந்து உண்மையை உணர்த்துமா? வருங்காலத்தி லேனும் இவர்களைத் தோற்கடித்து பாடம் புகட்ட வேண்டாமா? சிந்தியுங்கள்! ஆதிக்கத்தை வீழ்த்த அநியாயத்தை அகற்றப் போராடுங்கள்!
-கெ.நா.சாமி