விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகாவில் உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தில் பிறந்தவர் அந்தோணியம்மாள். கடந்த மார்ச் 19 மற்றும் 20 தேதிகளில் தென்னாப்பிரிக்காவின் மொரிஷியஸ் தீவில் நடைபெற்ற முதல் சர்வதேச பீச் (கடற்கரை) கபடியில் தங்கம் வென்றார். இவர் தன்சாதனை பற்றிக் கூறுகையில்,
“எங்க குடும்பம் ரொம்ப ஏழ்மையான குடும்பம். எங்க அப்பா சவரிமுத்து ஒரு பால் வியாபாரி. அம்மா ரீத்தாமேரி வீட்லதான் இருப்பாங்க. அப்பப்ப எதாச்சும் கூலி வேலைக்குப் போவாங்க. என் கூடப் பொறந்தவங்க மூன்று பேர். ஓர் அக்கா, இரண்டு தம்பிங்க. அக்காவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. தம்பிங்க இரண்டு பேரும் படிச்சுட்டு வீட்லதான் இருக்காங்க. இதுதான் எங்கக் குடும்பம்.’’
“எங்கக் குடும்பம் பொருளாதாரத்துல ரொம்பக் கஷ்டப்படுற குடும்பம்தான். சின்ன வயசுல இருந்து எங்க அப்பாவோட ஒரே வருமானம்தான் எங்கக் குடும்பத்துக்கு. அதுவும் ரொம்பக் குறைவுதான். மூணு வேளை சாப்பாடு சாப்பிடுறதே எங்களுக்குக் கஷ்டம். பள்ளிக்குப் போகும் போதெல்லாம் என்னோட ஃபிரண்ட்ஸ் கொண்டு வர்ற சாப்பாட்டதான் நான் சாப்பிடுவேன். அந்த அளவுக்குக் கஷ்டமான குடும்பம்தான். ஆனாலும் கபடி மேல எனக்கு இருந்த ஆர்வத்தால எங்க குடும்பத்தோட கஷ்டம், வறுமை எல்லாம் என் கண்ணுக்குத் தெரியல.’’
“நான் அஞ்சாவது வரைக்கும் எங்க ஊர்ல இருந்த அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். ஆறாவதுக்கு எங்க ஊர் பக்கத்துல இருந்த அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். இந்தப் பள்ளிக்கூடம்தான் நான் கபடி விளையாட்டுல நுழைய காரணமா யிருந்துச்சு. ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை அரியூர் ஸ்கூல்லதான் படிச்சேன். ஆறாவதுல இருந்து 12ஆம் வகுப்புவரை நான் ஸ்கூல் கபடி டீம்ல விளையாடுனேன்.
அப்போ நிறைய மாவட்ட அளவு போட்டிகளுக்கு எல்லாம் போயிருக்கேன். 11ஆவது படிக்கும்-போது தேசிய அளவிலான போட்டி பெங்களூருவுல நடந்துச்சு. அதுல கலந்துக்-கிட்டேன். ஆனா பரிசு எதுவும் வாங்கலை. மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் மட்டுமே பங்கெடுத்துட்டு இருந்த என்னை தேசிய அளவுக்குக் கொண்டு வந்தது சங்கராபுரத்துல நடந்த தமிழ்நாடு ஸ்டேட் சாம்பியன்ஷிப் என்ற போட்டிதான். இந்தப் போட்டியில பங்கெடுக்கும்போதுதான் மதுரையில் இருந்து வந்திருந்த தேவா சார், ஜனார்த்தனன் சார் என்ற இரண்டு பேரும் என்னுடைய திறமையைக் கண்டுபிடிச்சு என்னை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்தாங்க. அவுங்க இல்லேனா நான் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. என்னுடைய எல்லா உயர்வுக்கும் அவங்கதான் முழுக்காரணம்.’’
“12வதுல அக்கவுண்ட்ஸ் குரூப் எடுத்து படிச்சேன். அதுல 847 மார்க் வாங்கினேன். எனக்குப் படிப்பைவிட கபடிதான் உயிர். எனவேதான் தேவா சார், ஜனா சார் சொன்னதுபோல யாதவா கல்லூரியில சேர்ந்தேன். பி.ஏ. தமிழ் படிக்க கல்லூரியில் சேர்ந்ததுமே என்னுடைய நோக்கம் எல்லாம் கபடிதான். தேவா சார், ஜனா சார் கல்லூரியில எனக்கு நல்ல பயிற்சி கொடுத்தாங்க. கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி, பல்கலைக்கழகப் போட்டி எனப் பல போட்டிகளில் பங்கெடுத்தேன். அவங்க இரண்டு பேரும் எதிர்பார்த்த மாதிரி நான் நல்லா விளையாடி நிறைய போட்டிகள்ல வெற்றி பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்தேன். அப்பதான் எனக்குத் தேசிய அளவிலான டீம்ல இடம் கிடைச்சது.’’
“பீச் கபடின்னு ஒன்ன நான் தங்கம் வென்றதுக்கு அப்புறம்தான் தமிழ்நாட்டுல நிறையப் பேர் தெரிஞ்சுக்கிட்டாங்க. கபடியின் இன்னொரு பரிணாமம்தான் இந்தப் பீச் கபடி. வழக்கமான கபடிக்கு 12 பேர் இருப்பாங்க. 7 பேர் மெயின் பிளேயர்ஸ், 5 பேர் சப்ஸ்டியூட். ஆனால் பீச் கபடிக்கு வெறும் 6 பேர்தான். அதுல 4 பேர் மெயின் பிளேயர்ஸ், 2 பேர் சப்ஸ்டியூட். வழக்கமான கபடியில போனஸ் லைன், என்டு லைன் இருக்கும். அதுல நாம போனஸ் லைன் தொட்டாலே போதும் வந்துடலாம். ஆனா பீச் கபடியில அப்படி இல்ல. நமக்கு 30 செகன்ட் நேரம் கொடுப்பாங்க. அதுல யாரையாவது அவுட் பண்ணிட்டுதான் வரணும். அவுட் பண்ணாம வந்தா எதிரணிக்கு பாயிண்ட் போயிடும்.’’
“இந்தப் பீச் கபடி 2008லிருந்துதான் ஆசியா அளவுல நடக்குது. அதுல 2016ஆம் ஆண்டு வியட்நாம்ல நடந்த ஆசிய பீச் கபடியில இந்திய அணிதான் கோப்பை வாங்குச்சு. அதுதான் வெளிநாட்டுல விளையாடி நான் வாங்குன முதல் தங்கம். அடுத்து இந்த வருஷம்தான் ஆசிய அளவைத் தாண்டி சர்வதேச அளவுல முதல் பீச் கபடி போட்டி தென் ஆப்பிரிக்காவின் மொரீஷியஸ் தீவுல நடந்துச்சு. இந்த முதல் சர்வதேசப் போட்டியிலேயே இந்திய அணிக்குத் தங்கம் வாங்கிக் கொடுத்ததுல எனக்கு ரொம்பச் சந்தோஷம்.’’
“நான் பி.ஏ., எம்.ஏ., முடிச்சுட்டு அதே யாதவா கல்லூரியில எம்.பில் பண்றேன். படிப்புல எனக்கு ஆர்வம் இல்லைனாலும் இந்தக் காலத்துல ஏதாச்சும் ஒரு டிகிரியாவது வாங்கினாதான் மரியாதை. அதனால நான் யாதவா காலேஜ்லயே எம்.ஏ தமிழ் பண்ணிட்டு இப்போ எம்.பில்., பண்ணிட்டு இருக்கேன். படிப்பு சும்மா பெயருக்குத்தான். எனக்கு எல்லாமே கபடிதான்.’’
“யார் யாருக்கு எதுல இன்ட்ரஸ்டோ அதுலதான் முன்னேற முடியும். ஒரு சிலர் மியூசிக்ல இன்ட்ரஸ்டா இருக்கலாம். எனக்குக் கபடிதான் இன்ட்ரஸ்ட். எனக்குப் புடிச்ச கபடியில சாதிக்க முடியும்னு நான் நம்புனேன். அதுக்குத் தேவையான பயிற்சியும், முயற்சியும் செஞ்சேன். வெற்றி பெற்றேன். எல்லாரும் படிக்க முடியாது, எல்லாரும் விளையாட முடியாது, எல்லாரும் பாட முடியாது, எல்லாரும் ஆட முடியாது, யார் யாருக்கு எது வருமோ அதுலதான் நாம வெற்றி பெற முடியும். எனக்குக் கபடிதான் வரும். அதுதான் எனக்கு பிடிச்சது. அதுல என்னால வெற்றி பெற முடிஞ்சது.’’
“எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. என்னுடைய பெற்றோரைவிட ஊர் மக்கள் இரண்டு மடங்கு சந்தோஷப்பட்டாங்க. ஏன்னா, இதுவரைக்கும் எங்க ஊரு யாருக்கும் தெரியாது. ஆனால், நான் இந்தச் சாதனையை படைச்சதால எங்க ஊரு பேரு தமிழ்நாடு முழுவதும் தெரிஞ்சிடுச்சு. எங்க ஊருக்கு இந்தப் பெருமையைக் கொடுத்ததால ஊர் மக்கள் எல்லாரும் என்னை பெருமையா பார்த்தாங்க.’’
“பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் என்னைப் போல மிகவும் பின்தங்கிய குடும்பச் சூழலில் இருந்து வர்றவங்களுக்கு பாராட்டு மட்டும் போதாது. நிச்சயம் பொருளுதவி ஏதாவது செய்யணும். அப்பதான் நாங்க இன்னும் மேலவர உதவியா இருக்கும். ஆசிய அளவுல போன வருஷம் தங்கம் வாங்கினப்ப தமிழ்நாடு அரசு 5 இலட்சம் பரிசு கொடுத்தது. எங்கக் குடிசை வீட்டை அதிகாரிங்க வந்து பார்த்துட்டுப் போனாங்க. வீடு கட்டிக் கொடுக்கு-றோம்னு சொன்னாங்க. அரசாங்க வேலைக்கு ஏற்பாடு செய்றோம்னு சொன்னாங்க. ஆனா இதுவரைக்கும் எதுவும் செய்யல.’’
“என்னுடைய அடுத்த இலக்கு அல்லது ஒரே இலட்சியம் வரவிருக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கம் வெல்லணும். இப்போதான் முதல் சர்வதேசப் போட்டி நடந்து இருக்கு. அதுல தங்கம் வாங்கிட்டோம். அடுத்து உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் நடத்த ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு. அப்படி உலகக் கோப்பை நடக்கும்போது நிச்சயம் தங்கம் வென்று நம் நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பேன். அதுதான் என்னுடைய ஒரே இலக்கு, இலட்சியம்.’’
“வாழ்க்கையில் எல்லோரும் சாதிக்கலாம். அதுக்கு நாம் செய்ய வேண்டியது நம்முடைய தனித்திறமை என்னன்னு கண்டுபிடிக்கணும். அதைக் கண்டுபிடிச்சுட்டு அதுல முழு கவனமும் செலுத்தினா நிச்சயம் வெல்ல முடியும். நமக்கு எதன்மேல் ஆர்வம் இருக்கோ அதுல முழுக் கவனத்தையும் செலுத்தினா நிச்சயம் சாதிக்க முடியும். என்னுடைய குடும்ப வறுமையும், சூழலும் என்னை எந்த விதத்திலும் பாதிக்காம பார்த்துக்கிட்டேன்.
நம்முடைய கிராமச் சூழல், குடும்பத்தின் வறுமை இதையெல்லாம் பின்னால வச்சிட்டு நம்முடைய இலக்கை முன்னிறுத்திப் பயணிக்கும்-போது நிச்சயம் நாம் சாதிக்கலாம். இதைத்தான் இன்றைய மாணவச் சமுதாயத்துக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.’’