தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு என்பது இனி குதிரைக் கொம்புதான்!
மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, மத்திய அரசு, அரசியல் சட்ட விரோதமாக அப்பட்டமான வகையில் நடந்துகொள்கிறது.
‘நீட்’ தேர்வு பற்றி முந்தைய காலங்களில் பேச்சு வந்தபோது எழுந்த அய்யங்களைப் போக்க நாடாளுமன்ற நிலைக்குழு (Standing Committee) போடப்பட்டது. அவர்களது பரிந்துரைகளில் முக்கியமானது, ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வினை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதாகும்!
இந்திய அரசியல் சட்டத்தின் பொதுப் பட்டியல் (Concurrent list) என்ற இரண்டு அரசுகளும் சட்டமியற்றும் அதிகாரத்துறை எல்லை என்ற பகுதிக்குக்கூட “ஒப்புமை பெற்ற பட்டியல்’’ என்பதுதான் சரியானது!
அதாவது மாநில அரசின் ஒப்புதல் பெற்றே அச்சட்டம் _ அத்துறைக்கு வருதல் வேண்டும் என்பதே, அரசியல் சட்டம் வகுத்த அதன் கர்த்தாக்களின் எண்ணம் ஆகும்!
உச்சநீதிமன்றம் _ இந்தப் பிரச்சனையில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது, எல்லா உயர்நீதிமன்றங்களுக்கும் இனி இது சம்பந்தமாக எந்த வழக்கையும் விசாரிக்கவோ, தீர்ப்பளிக்கவோ கூடாது என்று கூறியதுகூட, இந்திய அரசியல் சட்டம் அளித்த உயர்நீதிமன்ற ரிட் அதிகார எல்லை, உச்சநீதிமன்ற அதிகாரத்திலுள்ளது என்பது சட்டநிலைப்படி சரியாக இருக்கலாம்; ஆனால் உரிய சமூகப் பிரக்ஞையோடு இதனைப் பார்க்க வேண்டாமா?
மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு கேள்வித் தாள்களுடன் ‘நீட்’ பொதுத் தேர்வு என்பது ஏற்கத்தக்கதா? குளறுபடி அல்லவா?
இதைவைத்து சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய 6 கேள்விகளுக்கு எந்த பதிலும் சி.பி.எஸ்.இ. தேர்வுக்குழு தராத _ தரமுடியாத நிலையில் _ உச்சநீதிமன்றம் அவர்களைக் காப்பாற்றுவதுபோல, அவ்வழக்கை விசாரிக்கக் கூடாது என்ற நிலையால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைபற்றி யோசிக்க வேண்டாமா?
மேலும், வெளியிடப்பட்ட முடிவுகள்படி சேர்க்கும்போது இடஒதுக்கீட்டில் S.C., S.T.,
O.B.C., என்பவர்களுக்கு 49.5 சதவீதமும், எஞ்சிய 50.5 சதவீதம் என்பது ‘திறந்த போட்டி’யாகும். அதில் அனைவரும் போட்டியிடலாம் என்பதை மாற்றி, ‘கபளிகரம்’ செய்து, ‘ளிtலீமீக்ஷீs’ ‘மற்ற முன்னேறியவர்கள்’ என்பதுகூட சட்ட விரோதம். கடைபிடித்த இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானது.
தமிழ்நாட்டு அரசு இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி, அய்ந்தரை மாதம் ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கிடக்கும் நிலையில், அரசியல் சட்டப்படி கடமையை மத்திய அரசும், உள்துறை சம்பந்தப்பட்ட சட்டத்துறை, சுகாதாரத்துறையும் செய்துள்ளனவா?
‘நீட்’ தேர்வுக்கு விலக்கு ‘அறவே கிடையாது’ என்ற மத்திய சுகாதார அமைச்சர் கூற்று யதேச்சதிகார அரசியல் சட்ட விரோத கூற்று அல்லவா?
தமிழ்நாட்டு அரசின் அரசியல் சட்ட உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.
எஜமானன் _ அடிமை போன்ற ஒரு தோற்றம் ஜனநாயக அரசியலில் ஏற்புடையதல்ல.
– கி.வீரமணி
ஆசிரியர்