Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சாதி இல்லா ஜனநாயகம்

(ஈரடி விருத்தம்)

ஏணிப்படி சாதிகளின் நாடு – மேலே
ஏறியவன் இறங்குவ தெப்போது?
சாணிப்பால் திணிப்பவரின் நாடு – இதுபோல்
காணத்தகு நாடுளதோ வேறு?

பொய்க்கதை புராணப்புதர் காடு – ஆரியர்
புகுமுன்னர் இருந்ததாயிக் கேடு?
வெய்யில்புழு மாந்தரின் பாடு – மடிந்து
வீழ்பவர் நோய்பசியில் யாரு?

நாதியற்ற மனிதர்பெரு வாரி – “கோடி
நாற்பதிற்கு’’ இல்லைவேளை சோறு!
சாதிமதச் சண்டைகளில் நாறி – செத்த
சவத்திற்கும் “குழிதேடும்’’ சேரி!

“சுதந்தரத்தின் வயதெழுபது’’ ஆண்டில் – மக்கள்
சமத்துவமாய் வாழ்வதெந்த ஊரில்?
நித்தநிதம் ஒடுக்குமுறை கூண்டில் – சாதி
மதமெனும் “பேயரசா’’ நாட்டில்?

அறிவென்னும் சம்மட்டியைத் தூக்கு – சாதி
அவமான “ஏணியை’’ நொறுக்கு!
அறிவாளன் வள்ளுவனை நோக்கு – தமிழன்
ஆசான்சொல் “பிறப்பொக்கும்’’ வேதமாக்கு!

“வெண்தாடி சுடரொளியாம்’’ நூறு – வீரம்
விளைகின்ற இளைஞர்களை சேரு!
எண்திசையும் “பகுத்தறிவு’’ போரு – வென்று
“சாதியில்லா ஜனநாயகம்’’ சாதிப்பீரே!

– கவிஞர் சா.கோவி, விளாத்திகுளம், தூத்துக்குடி