Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தத்துவ மேதை ரூசோ பிறந்த நாள் 02.07.1778


‘மனிதன் உரிமையோடு பிறக்கிறான்; ஆனால் அவன் எங்கும் தளைகளால் கட்டுண்டு கிடக்கிறான்’ என்பது ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’ எனும் நூலில் காணப்படும் புகழ்வாய்ந்த தொடராகும்.

ரூசோவின் இந்தத் தொடர் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனைச் சுற்றி முழுமையான ஒரு பெரும் தத்துவம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.

பிரெஞ்சு சமுதாயத்திற்கு அதிர்ச்சியூட்டும் கண்டனமாக அது திகழ்கின்றது. இந்தக் கண்டனம் பிரான்சிற்கு மட்டும் உரியதாக வரையறுக்கப் படவில்லை. அய்ரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் இது உரியதாகும்.

கொத்தடிமைத் தனத்தின் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மக்களின் உழைப்பால், பல நூற்றாண்டுகளாக வளர்ந்த பல நிறுவனங்களின் சக்கரங்களுக்கிடையில் மக்களைக் கட்டிப்போட்டு, ஏழைகளின் உழைப்பில் (துயரில்) செல்வர்களுக்கு மகிழ்வூட்டிய இந்த நிறுவனங்கள் தூள்தூளாகத் தகர்த்தெறியப்பட வேண்டும்; சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் புதிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டும் என்னும் புரட்சிகரச் சிந்தனைக்கு முன்னறிவிப்புக் கொடுத்தது. மன எழுச்சி கொண்ட ஒரு மனிதனின் அஞ்சாநெஞ்சுரம், துணிவு இந்தத் தத்துவத்தைப் பரப்புவதற்குத் தேவைப்பட்டது.

ஏனென்றால், அய்ரோப்பாவின் அரசர்களும், அரசிகளும் தாங்கள் தெய்வீக ஆணையால் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர்களுடைய நடவடிக்கைகளை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது என்றும் கூறி வந்தனர்.

அன்றைய, செங்கோல் ஏந்திய அரசர்கள் வரம்பு மீறிய ஊதாரித்தனமான வாழ்க்கை நடத்திவந்தனர். மக்களின் வாழ்வையும் மரணத்தையும் முடிவு செய்யும் உச்சநிலை அதிகாரம் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

அவர்களின் தற்பெருமைக்கு ஊறு நேரும்பொழுது, மேலோட்டமான அக்கறை காட்டி, ஏளன இகழ்ச்சியோடு, மக்களைப் புறக்கணித்தார்கள்.

ஆற்றல் வாய்ந்த சொற்களால் இவர்களைக் கண்டித்து ஒரு மனிதன் குரல் எழுப்பும்போது, தளை அகற்றப்பட்டு ஊசலாடிக் கொண்டிருக்கும் அனைத்து அதிகாரங்களும் படைத்த இவ்வல்லாண்மையாளர்களைக் கண்டித்துக் குரல் எழுப்பும் அந்த மனிதனுக்கு மாபெருந் துணிவு தேவை. சரியான நேரத்தில் இந்தப் பணியைச் செய்வதற்கு ரூசோ கிடைத்தார்.