பாரதிதாசன் நாடகங்கள் ஒர் ஆய்வு

ஜூலை 01-15


பழங்கதைகள் – ஒரு புதிய பார்வை

தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சியால் பகுத்தறிவுக் கொள்கைகள் தமிழகத்தில் வேரூன்றின. அதன் விளைவாகப் புராண இதிகாசங்களை விமர்சிக்கும் அறிவாண்மை உருவாயிற்று. பழங்கதைகளுக்குப் புதிய விளக்கங்கள் தரும் போக்குகள் வளர்ந்தன.

இவ்வாறு புதுவிளக்கம் தர எடுத்துக் கொள்ளப் பெற்ற கதைப் பகுதிகள் மக்கள் நன்கறிந்த நிகழ்ச்சிகளாகவே இருந்தன.

தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாகப் புராணங்களைப் பக்தியோடு விளக்கம் செய்யும் நாடகங்களே செல்வாக்குப் பெற்றிருந்தன; சக்திலீலா, குமாரவிஜயம், வள்ளித் திருமணம், பவளக்கொடி, வீர அபிமன்யு முதலிய புராண நாடகங்களையே மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

இங்ஙனம் வழிவழி வரவேற்கப்பட்டு வந்த புராண நாடகங்கள் ஒருபுறமிருக்க, சிலர் புராணங்களை விமர்சித்துக் காலத்திற்கேற்ற சிந்தனைகளைப் புகுத்தி, வாழுங்கால மக்களுக்கு இயற்பண்புமிக்க நிதிகளை வழங்கினர்.

துறையூர் கே.மூர்த்தியின் இலங்கேஸ்வரன், அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம், நடிவவேள் ராதா நடித்த ‘கீமாயணம்’ முதலானவை புராண மறுப்புகளைப் புதிய உத்திகளில் வெளியிட்டன.

இப்பிரிவில் அடங்குகின்ற பாரதிதாசனின் நாடகம் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ ஒன்றேயாகும். திராவிட இயக்கத்தார் இராவணனையும் இரணியனையும் தமிழர்கள் _ திராவிடர்கள் எனக் கருதும் எண்ணமுள்ளவர் ஆவர்.

இவ்விருவரையும் ஆரியர்கள் பல்வகைச் சூழ்ச்சிகளால் வென்றதைப் பெருமைப்படுத்தியே ஆரியப் புராணக் கதைகள் அமைந்துள்ளன. இருபதாம் நுற்றாண்டில்தான் இவர்களின் பெருமைகள் உணரப்பட்டுப் புதிய முயற்சிகள் இலக்கிய உலகில் எழுந்தன.

புலவர் குழந்தை இராவணனைக் காவியத் தலைவனாக்கி, ‘இராவண காவியம்’ இயற்றினார். புலவர் அ.கு.வேலன் இராவணனைத் தலைமகனாக்கி ‘இராவணன்’ என்னும் நாடக நூலை இயற்றினார். மற்றொரு தலைவனான இரணியனின் இணையற்ற வீரத்தைப் பெருமைப்படுத்தி நாடகமாக்கினார் பாரதிதாசன்.

பாரதிதாசனின் ‘இரணியன்’ தமிழகத்தின் பல பகுதிகளில் நடிக்கப்பட்டு மக்கள் செல்வாக்கைப் பெற்ற பெருமைக்குரியது. திராவிட இயக்கத்தார் நாட்டு மக்களின் அறியாமை இருளை நீக்குவதற்கு இந்நாடகத்தை ஒரு கருவியாகக் கொண்டனர்.

ஆரிய இனத்தின் சூழ்ச்சியையும், தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையையும் ‘இரணியன்’ தமிழ் மக்களுக்கு எடுத்துக்-காட்டியது. நாடக இலக்கணங்களைப் போற்றி, மிகத் திறம்பட ‘இரணியன்’ நாடகத்தை உருவாக்கியுள்ளார் ஆசிரியர்.

இரணியன் அல்லது இணையற்ற வீரன்

கருத்து:

இரணியன் திராவிட இன வழியில் வந்த மாவீரன்; அவன் ஆரிய நாகரிகத்தையும் மதநெறியையும் எதிர்த்துப் போரிட்டு மடிந்தவன் என்னும் கருத்துகளை மையமாக்கி இந்நாடகம் எழுதப்பட்டுள்ளது. ‘குறிஞ்சித் திட்டு’ நூல் போல, இந்நாடகமும் ஆரியரின் படையெடுப்பு, தமிழ் நாகரிகத்தைச் சிதைத்த பாங்கினை உணர்த்துகிறது.

கதை:

ஆரிய நாகரிகத்தையும் பழக்கவழக்கங்களையும் எதிர்க்கும் தமிழ் மன்னான இரணியனின் ஒரேமகன் பிரகலாதன். அவன் பொருட்டு ஓர் உலகச் சுற்றுலாவினை ஏற்பாடு செய்கிறான் மன்னன். ஆரிய இளவல் காங்கேயன் பிரகலாதனுக்குத் துணையாகி, அவனைத் தன்வயப்படுத்த முனைந்தான்.

பிரகலாதன் ஆரிய நங்கை சித்ரபானுவைச் சோலையொன்றில் கண்டு காதல் கொள்கிறான்.
சித்ரபானு, காங்கேயனின் தங்கை என்பதையும், ஆரியர் ஆட்சியைத் தமிழகத்தில் ஊன்ற முயல்பவள் என்பதையும் பிரகலாதன் அறியான். முன்னர் இவள் சேனாதிபதியைக் காதலித்ததையும் அவன் அறியாமல் இருந்தான்.

சித்ரபானுவின் தந்தை கஜகேதுவின் தலைமையில் இரணியனை வீழ்த்த சூழ்ச்சி வலை விரிக்கப்படுகிறது. மகன் பிரகலாதனும், சேனாதிபதியும் சித்ரபானுவின் மையலால் சூழ்ச்சிக்குத் துணையாகின்றனர்.

இராஜபாட்டையில் கொட்டமடிக்கும் ஆரியத் துறவிகளின் தலைகளைக் கொய்யுமாறு சேனாதிபதிக்கு இரணியன் கட்டளை யிடுகிறான்.

சித்ரபானுவின் அழகில் மயங்கிய சேனாதிபதி அவர்களைச் சிறைப்படுத்தவில்லை. ஆரியரின் மந்திர சக்தியால்தான் மயக்கமுற்றதாகவும், உடன் வந்த கொலையாளிகள் மாண்டதாகவும், ஆரியத் துறவிகள் தப்பிவிட்டதாகவும் இரணியனிடம் சேனாதிபதி பொய் உரைத்தான்.

இரணியன் பள்ளியறையில் துயின்றிருந்தபோது மாறுவேடம் புனைந்த சித்ரபானு அவனை ஈட்டியெறிந்து கொல்ல முயன்றாள். அவள் முயற்சி தோல்வியடைந்தது. காவலர்கள் சித்ரபானுவைப் பிடித்துவரப் ‘பெண்ணைக் கோறல் தமிழ் மரபன்று’ எனக் கருதி அவளை விடுதலை செய்தான் இரணியன்.

பிரகலாதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுதற்கு விழா நடைபெறுகிறது. அவ்விழாவில் அமைச்சன், பிரகலாதனிடம் இரணியன் பெயரை வாழ்த்தி உறுதிமொழி எடுக்குமாறு கூறுகிறான்.

ஆனால் பிரகலாதனோ ஆரியரின் தெய்வமான நாராயணன் பெயரை வாழ்த்தி உறுதிமொழி எடுக்க முனைகிறான். சினமுற்ற இரணியன் தன் மகனை வாளால்வெட்டி வீழ்த்த முனைந்தான். அரசி பத்மாவதி தடுத்து விடுகிறாள்.

இரணியனைக் கொன்றுவிட ஆரியர்கள் துணிந்து முடிவெடுக்கின்றனர். பிரகலாதனின் அறைக்கு வந்த இரணியன், “நீ சொல்லும் நாராயணன் எங்கே இருக்கிறான்?’’ என்று மகனைக் கேட்டான். அவன் “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’’ எனப் பதிலளித்ததைக் கேட்ட இரணியன், “இந்தத் தூணில் இருப்பானா?’’ எனக் கேட்டுத் தன் எதிரில் இருந்த தூணை உதைத்தான்.

தூணின் பின்னால் சிங்கத் தோலைப் போர்த்துக்கொண்டு நின்ற காங்கேயன் “நான்தான் நாராயணன்’’ என்றான். “தூணை உதைத்தேன்; நீ வந்தாய்! உன்னை உதைத்தால் தூண் வருமா?’’ எனச் சொல்லிக் காங்கேயனை உதைக்க அவன் வீழ்ந்து இறந்தான்.

ஆரியர்கள் பலர் மன்னனைப் பின்புறமாகக் குத்திக் கொலை செய்து விடுகின்றனர். மன்னன் இறந்ததால் மன்னி பத்மாவதியும் தற்கொலை செய்துகொள்கிறாள்.

சித்ரபானுவின் தூண்டுதலால் சேனாதிபதியை ஒழிக்கப் பிரகலாதன் முயல்கிறான். ஆனால் சேனாதிபதி முந்திக் கொண்டு பிரகலாதனை ஒழித்து-விடுகிறான்.

ஆணுடையில் மறைந்திருந்த சித்ரபானுவையும் சேனாதிபதி தீர்த்துக் கட்டினான். இறுதியில் சேனாதிபதி தன்னால் நிகழ்ந்த தவறுகளை எண்ணி வருத்தமுற்றுத் தற்கொலை செய்துகொள்கிறான்.

அமைப்பு:

பதினைந்து காட்சிகளில் இந்நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இடம், உறுப்பினர் ஆகிய விவரங்கள் மட்டும் ஒவ்வொரு காட்சி முகப்பிலும் முறையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கு இசை சார்ந்த பாடல்கள் தரப்பட்டுள்ளன. நாடகத் தலைமை மாந்தர்கள் அனைவருடைய வாழ்வும் கொலையிலோ, தற்கொலையிலோ முடிவதால் இது அவலப் படைப்பாகத் தோற்றமளிக்கிறது.

பாரதிதாசனின் தொடக்ககாலப் படைப்பாக இந்நாடகம் இருப்பதால் இதில் வடசொற்கள் மிகுதியாகக் கலந்துள்ளன. அரை நூற்றாண்டிற்கு முன்பு தமிழ் நாடக உரையாடல் போக்கும் பாடல் திறமும் எங்ஙனம் அமைந்திருந்தன என்பதை உணர்த்தும் உரைகல்லாக இது திகழ்கிறது.

சிறப்பு:

பாரதிதாசன் எழுதி அரங்கேற்றப்-பட்ட நாடகங்களுள் முதன்மையானது ‘இரணியன்’ ஆகும். “சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் 9.9.1934இல் தோழர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தலைமையிலும், சென்னை ராயல் தியேட்டரில் 20.3.1935இல் கனம் மந்திரி சர்.பி.டிராஜன் தலைமையிலும், வடஆர்க்காடு அம்பலூர் நடன விலாசத்தில் 4.7.1936இல் தோழர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தலைமையிலும், சேலம் சென்ட்ரல் கொட்டகையில் 10.12.1938இல் சி.ஜி.நெட்டோ தலைமையிலும் மற்றும் அன்பில், பூவாளூர் ஆகிய இடங்களில் தோழர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தலைமையிலும் ‘இரணியன்’ நடிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை வி.வி.ஹாலில் இந்நாடகம் நடந்தபோது குத்தூசி குருசாமி இரணியாகவும், திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் பிரகலாதனாகவும், சம்பந்தம் காங்கேயனாகவும், ரங்கநாதன் சேனாதிபதியாகவும், டி.என்.ராமன் கஜகேதுவாகவும், தங்கராசு ரிஷியாகவும், கே.கிருஷ்ணசாமி லீலாவதியாகவும்,

எம்.எஸ். முத்து சித்பரபானுவாகவும் நடித்தார்கள். இந்நாடக அரங்கேற்றத்தில் பெண்கள் எவரும் பெண் பாத்திரம் ஏற்காமல் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்திருப்பது தமிழ் நாடக வரலாற்றின் தொடக்க நிலையை அறிவிப்பதாக உள்ளது.

அப்போது தந்தை பெரியார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

“நாடகமாக நடிக்கப்படும் கதைகளின் விஷயம் தற்கால உணர்ச்சிக்கும் தேவைக்கும் சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாய் இல்லாமல், பழமையைப் பிரச்சாரம் செய்யவும், மூடநம்பிக்கை, வருணாசிரமம், ஜாதி வித்தியாச உயர்வுதாழ்வு, பெண்ணடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும் அவைகளைப் பாதுகாக்கவுந்தான் நடிக்கப்-படுகின்றதே ஒழிய வேறில்லை.’’

“அரிச்சந்திரன் கதை, நந்தனார் கதை முதலானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அரிச்சந்திரன் கதையில் சத்தியம் பிரதானம் என்று சொல்லப்பட்டாலும் சத்திய _ அசத்திய விஷயம் நடக்காமல் கதையில் அலட்சியமாய் இருக்கிறது.

ஜாதி வித்தியாசம், தீண்டாமை, பெண்ணடிமை, பார்ப்பன ஆதிக்கம், பலாத்காரத் தன்மை, எஜமானத்தன்மை ஆகியவைகள்தான் தலைதூக்கி நிற்கின்றன. அதுபோலவே நந்தன் கதையிலும் ஆள் நெருப்பில் விழுந்து வெந்துபோனதுதான் மிளிர்கின்றதே தவிர, உயிருடன் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக இல்லவே இல்லை. இராமாயணமும் சீதையைப் படுத்தின பாடு பெண் ஒரு சொத்துபோலப் பாவிக்கப் படுகிறதாக உணர்த்துகிறது. இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட வேண்டும். சுயமரியாதையும் சீர்திருத்த வேட்கையும் உள்ளவர்கள் அதை நடிக்கக் கூடாது.’’

“இரணியன் கதையில் வீரரசம், சூழ்ச்சித்திறம் சுயமரியாதை ஆகியவைகள் விளங்கினதோடு பகுத்தறிவுக்கு நல்ல உணவாகவும் இருந்தது. அதனால் சில விஷயங்களில் தலைகீழ் மாறுதலாகவும் கடின வார்த்தையாகவும் காணலாம். மாறுதலுக்கு அவசியமானதும் பதிலுக்குப் பதிலானதுமான வார்த்தைகள் இருந்தால்தான் பழமை மாறச் சந்தர்ப்பம் ஏற்படும்.’’

பெரியாரின் இச்சொற்கள் ‘இரணியன்’ நாடகத்தின் தேவையை நன்கு உணர்த்து-கின்றன.
‘இரணியன்’ நாடகம் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நாடகக் குழுவினரால் நடிக்கப்படும் போதும் பாரதிதாசன் பொறுப்புணர்ச்சியோடு உரிய திருத்தங்களைச் செய்தார்.

30.5.1944 அன்று தஞ்சை பள்ளியக்கிரகாரத்தில் இரணியன் ஒத்திகை நடந்தபோது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாவலர் பாலசுந்தரத்துடன் வந்திருந்து நாடகப் பாடல்களைச் சொல்லிக் கேட்டும் நடிக்கக் கண்டும் திருத்தங்களை உரிய முறையில் சொல்லி ஒழுங்கு செய்திருக்கிறார்.

பாரதிதாசன் நாடகங்களுள் ‘இரணியன்’ ஒன்றே ‘திருமுன்’ படைக்கப்பட்ட நிலையைக் கொண்டுள்ளது:

“சுயமரியாதை இயக்கங் கண்டாரும் பார்ப்பனரல்லாத மக்கட்கு உழைப்பதே தன் கடனெனக் கண்டாரும் ‘ஜஸ்டிஸ்’ என்ற நீதிக்கட்சித் தலைவரும் தற்போது தமிழுக்காகச் சிறையில் இருப்போருமாகிய தமிழர் திலகம் _ அறிவின் அம்சம் _ புரட்சியின் சிகரம் _ பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கட்கு இந்நூல் ஏற்புடையது.’’

எனப் பெரியாருக்குப் படைக்கப் பட்டுள்ளதாக அதில் விளக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் படைப்புகளில் ‘இரணியன்’ நாடகமே 1948ஆம் ஆண்டு சென்னை மாநில அரசால் நடிக்கக்கூடாத நாடகமாகத் தடை செய்யப்பட்டது. தடைவிதித்த அரசாணையின் தமிழ் வடிவம் பின்வருமாறு:

“சென்னை மாகாண ஆளுநர் கருத்துப்படி, பாரதிதாசனால் எழுதப்பட்ட ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’’ என்ற நாடகம் நடைபெறுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்நாடகமானது மிகத் தீவிரக் கொள்கையும் சமூகத்தைக் கெடுக்கக் கூடியதாகவும் நல்லொழுக்கத்திற்கு முரணானதாகவும் உள்ளது என்பதால் தடுக்கப்பட்டுள்ளது. 1876ஆம் ஆண்டின் மத்திய அரசுச் சட்டத்தின்படி நாடகத்தை மூன்றாம் பிரிவின்படி, இந்த நாடகம் சென்னை மாகாணத்தின் எந்த இடத்திலும் நடைபெறக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தமிழ் நாடகத்தின் பெயர் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’. இதை இயற்றியவர் பாரதிதாசன். அவர் சிறந்த தமிழ்க் கவிஞர். திருவல்லிக்கேணி தமிழ் நூல் நிலையம் இந்நாடகத்தை வெளியிட்டுள்ளது.

இந்நூல் பெரியாருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இவர் அந்தணர்களுக்கு எதிராக ஓர் இயக்கத்தைத் தொடங்கிய ஒரு கட்சித் தலைவர். இந்நாடகம் 1934இலும், 1938இலும் முறையே ஈ.வெ.ரா.பெரியார் முன்னிலையிலும், பி.டி.ராஜன் முன்னிலையிலும் நடத்தப்பட்டுள்ளது. முழு நாடக நூலாக 1939இல் வெளியிடப்பட்டது.

இந்நாடகத்தின் கதைச் சுருக்கம் என்னவென்றால், புராணத்தில் வரும் இரணியன் பிரகலாதன் கதையேயாகும். இந்துக்களுக்கு இக்கதை மிகவும் அறிமுகமான ஒன்றே. இதில் இரணியன் தமிழரில் தலைசிறந்த பிரதிநிதியாகப் படைக்கப்பட்டுள்ளான்.

தமிழரைப் பாதுகாப்பவனாகவும், ஆரிய இனத்தை அழிக்கும் கொள்கையுடைய தலைசிறந்த மன்னனாகவும் உருவாக்கப்பட்டுள்ளான். இவன் மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவன். வேதங்களில் கூறப்பட்டுள்ளபடி ஆரிய இனம் உயர்ந்த இனம் என்ற கொள்கைக்கு முற்றிலும் மாறானவன். இவற்றை நம்புகின்ற தன் மகன் பிரகலாதனை எதிர்ப்பவனாகத் திகழ்கிறான்.

ஆரியர்கள் தேசபக்தி அற்ற துஷ்டர்களாகவும் குற்றவாளிகளாகவும் படைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மந்திரசக்தியால் ஒரு பெண்ணை ஏவி, இரணியன் மகனையும் சேனாதிபதியையும் தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர். அந்த ஆரியப் பெண்ணின் தொழில் இதுவாகவே சுட்டப்பட்டுள்ளது. ஆரியர் விருப்பங்களை நிறைவேற்றவும் இரணியனை வீழ்த்தவும் மையக் கருவியாகவே இப்பாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நாடகத்தின் முக்கியக் குறிக்கோள் ஆரியரைத் தீயவராக்கி அவர்களின் புகழை அழிப்பதேயாகும். இரண்டாவது, இன உணர்ச்சியைத் தூண்டிவிடுவதாகவும் இருக்கிறது. இக்காரணங்களால் இந்நாடகம் மக்கள் மேடையில் நடிக்கத் தடைவிதிக்கப்-பட்டுள்ளது.’’

இந்நாடகத்தடை வேறொரு நிகழ்ச்சியை நினைவூட்டுகிறது. மிகவும் புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்ட பெர்னார்ட் ஷாவின் ‘திருமதி வாரனின் தொழில்முறை’ (Mrs.
Warren’s Profession) என்ற நாடகம் 1893இல் அரங்கேற்றப்பட்ட உடனே பிரிட்டிஷ் அரசு அதற்குத் தடை விதித்தது. ஒன்பதாண்டு-களுக்குப் பின்னரே (1902) இத்தடை நீக்கப்பட்டு நாடகம் மீண்டும் நடத்தப் பெற்றது. அப்போது பெர்னார்ட்ஷா,

  “என் கடுமையான உழைப்பின் மூலம் பத்து வருடத்தில் எனக்குக் கிடைக்கக் கூடிய புகழை பிரிட்டிஷ் அரசின் தடை காரணமாய் நாடகம் நடந்த அந்த ஒரே நாளில் (முதல் நாளிலேயே) பெற்றுவிட்டேன். அரசாங்கத்திற்கு என் இதயப்பூர்வமான நன்றி உரித்தாகும்!’’

என்றார். இதேநிலை ‘இரணியன்’ நாடகத் தடைக்குப் பின்னர் ஏற்பட்டது.

அரசின் தடையை மீறி வடஆர்க்காடு மாவட்டம் திருவத்திபுரம் என்னும் ஊரில் காஞ்சி சீர்திருத்த நாடக சபையின் அமைப்பாளர் வெ.சம்பந்தன் முயற்சியால் ‘இரணியன்’ நாடகம் நடத்தப்பட்டுள்ளது. அப்போது பாதியிலேயே நாடக நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது அரசு தொடுத்த வழக்கின் முடிவில் மூன்று வாரம் முதல் மூன்று மாதம் வரை சிறைத்தண்டனை தரப்பட்டது.

தண்டனை முடிந்து வெளியே வந்த கலைஞர்களுக்கு காஞ்சிபுரத்தில் சேலம் சித்தையன் தலைமையில் 25.12.1948இல் பெரும் வரவேற்புக் கொடுக்கப்-பட்டது. அவர்களை வரவேற்று அறிஞர் அண்ணா சிறப்புரையாற்றினார். ‘குடிஅரசு’ இதழில் தடையைக் கண்டித்துக் கட்டுரைகள் வெளிவந்தன.

அறிஞர் அண்ணா ஆட்சியேற்று முதலமைச்சராக அமர்ந்த பின்னரே இந்நாடகத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது.

பேராசிரியர் க.கணபதிப் பிள்ளை சங்கிலி மன்னன் பற்றி இத்தகையதொரு நாடகம் தீட்டியுள்ளமை ஈண்டு நினைத்தற்பாலது. இரணியன் நாடகத்தைப் போன்று சங்கிலி நாடகமும் அமைந்துள்ளது.

பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் பகுதியை ஆண்ட சங்கிலி கொடுங்கோலனாகவும் கயவனாகவும் பல இலக்கியங்களில் காட்டப்பெற்றான். ஆனால் இவ்வாசிரியர் சங்கிலியை மிகப் பெரும் வீரனாகவும், நற்பண்புகளின் உறைவிடமாகவும், சிறந்த நாட்டுப்பற்றாளனாகவும் வைத்து ஒரு நாடகப் படைப்பினை உருவாக்கினார்.

பதிப்பு: பல்வேறு இடங்களில் நடிக்கப்பட்ட இந்நாடகம், ஈரோடு குடிஅரசு பதிப்பகத்தாரால் 1939ஆம் ஆண்டு முதன்முதல் வெளியிடப்-பட்டது. 1943, 1945, 1952 ஆகிய ஆண்டுகளில் இந்நுல் மீண்டும் பதிப்பிக்கப்பட்டது.

புதுச்சேரி பாரதிதாசன் பதிப்பகம் 1952இல் இதன் நான்காம் பதிப்பை வெளியிட்டுள்ளது. 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *