பி.ஜே.பி. ஆட்சியில் பெண்ணை எந்திரமாக்கி பிள்ளை உற்பத்தி பிஸ்னஸ்!

ஜூலை 01-15


பல துறைகளில் பெண்கள் முன்னேறி வந்தாலும் ஆண் சமூகம் இன்னமும் பெண்களை ஒரு போதைப் பொருளாகவே பார்ப்பதும், தான் விரும்புகிறவர்களை விரும்பும் நேரத்திலெல்லாம் அடைந்துவிடத் துடிப்பதும் இதனால் ஏற்படுகின்ற வன்புணர்வு, கொலை போன்ற சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

லட்சமி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும், காளி என்றும் இன்னும் பலபல அம்மன்களையும் தெய்வங்களாக ஒரு பக்கம் வழிபட்டுக்கொண்டே மறுபக்கம் அவர்கள் பாப யோனியில் பிறந்தவர்கள் என்றும், அடிமைத் தனத்திலேயே உழல வேண்டியவர்களென்றும் அழுத்தி வைத்திருக்கும் இந்த இந்துத்துவ வாதிகளின் ஆட்சியில் பெண்களை அடிமைகளாக விற்பதும் வாங்குவதும் பிள்ளை பெறும் எந்திரங்களாக ஆக்குவதும் தற்போது ஒரு தொழிலாகவே நடந்து வருகிறது.

“இந்த அடிமை வியாபாரத்திலிருந்து விடுவிப்பே இல்லை’’ (No escape from this slave trade ) என்ற தலைப்பில் மே 22 இதழில் ‘அவுட்லுக்’ ஏடு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

ஆயுதங்கள், போதைப் பொருட்களுக்கு அடுத்தபடியாக இந்தப் பெண்களைக் கடத்தி விற்பது என்பது இடம் பெறுவதாக புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது மலைவாழ் மக்களின் பெண் குழந்தைகள்தான் என்கிறது அந்த ஏடு. இது மிக அதிகமாக நடைபெறுவது பி.ஜே.பி. ஆளும் மாநிலமான -ஜார்க்ண்ட் மாநிலத்தில்தான்.

அடுத்து ஒரிசா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இந்தக் கொடுஞ்செயல்அதிக அளவில் நடைபெறுகிறது. அம்மக்களின் இல்லாமையையும், இயலாமை-யையும் பயன்படுத்தி முகவர்கள் அப்பெண்களை கடத்துவதோ அல்லது விலைகொடுத்து வாங்கிச் செல்வதோ நடைபெறுகிறது.

இப்படிக் கடத்தப்படும் பெண்கள் பெரும்பாலும் 17 வயதுக்குக் குறைவானவர் களேயாகும். இவர்களைக் கடத்திச் சென்று முதலில் பணம் படைத்தவர் வீடுகளில் வீட்டு வேலைக்காரிகளாக அமர்த்துகிறார்கள்.

பின் அவர்களை வன்புணர்வு செய்வதும் அதன் மூலமாக கருத்தரிக்கச் செய்வதும் நடை-பெறுகிறது. இந்தியத் தலைநகர் டெல்லியில் மட்டும் பல ஆண்டுகளில் கடத்தப்பட்ட 14 லட்சம் பெண்கள் உள்ளதாக அந்த ஏடு கூறுகிறது.

அப்படி கருத்தரிக்கச் செய்தபின் அவர்களை நல்ல போஷாக்கான நிலையில் பராமரித்து குழந்தையைப் பெற்றபின் குழந்தை பிடுங்கிக் கொண்டு அவர்களை விரட்டி விடுகின்றனர். அந்தக் குழந்தைகளை ரூபாய் 1 இலட்சம் முதல் 4 லட்சம் வரையில் விலைக்கு விற்று விடுகின்றனர். ஆக குழந்தை விற்பனை என்பது பெருமளவில் நடப்பதோடு அந்த முகவர்களுக்கு இது மிகப் பெரிய லாபம் தரும் தொழிலாக உதவுகிறது.

இதனால் அந்த முகவர்கள் எப்படியேனும் ஏழைகளை அணுகி அவர்களின் பெண்களை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி விடுவதோ அல்லது பெற்றோர்களிடமே பேரம் பேசி விலைக்கு வாங்கி விடுவதிலோ முனைந்து செயல்படுகின்றனர்.

இப்படிக் கடத்தப்படும் பெண்கள் பெரும்பாலும் ஓரான், முண்டா, சாந்தால், காரியா, கோண்ட் போன்ற மலைவாழ் இனப்  (Tribes) பெண்களேயாவர். கடத்தப்படு-பவர்-களில் 77 சதவீதப் பெண்கள் இந்த இனங்களைச் சேர்ந்தவர்களாகவும், 12 சதவீதப் பெண்கள் மற்ற தலித் இனப் பெண்களாகவும், 8 சதவீதம் பிற பிற்படுத்தப்பட்ட இனப் பெண்களாகவும், 3 சதவீதம் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பெரும்பாலோர் பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்திவிட்டவர்-களகவே உள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் தொடக்க நிலைக்குப் பிறகு 50 சதவீதத்துக்கு மேல் பெண்கள் பள்ளியை விட்டு நின்று விடுவது வழக்கமாக உள்ளது. இதுகுறித்து அந்த அரசு கவனம் எடுத்துக் கொள்ளாததோடு இந்தப் புள்ளி விவரங்களை ஒப்புக் கொள்ளவும் மறுக்கிறது.

இந்தப் பெண்கள் நகரங்களில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்ற இடங்களில் அவர்கள் சந்திக்கின்ற கொடுமைகள் சொல்லுந்தரமன்று. என்றாலும் எந்த அரசும் அடிமைத் தொழிலாளர் சட்டம்  (Bonded Labour Act) 1976–) 1976–ன்படி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இந்தப் பெண்களை எப்படியேனும் கருவுறச் செய்ய வேண்டும் என்பதே முகவர்களின் நோக்கமாக உள்ளது. கருத்தரித்த பின் அவர்கள்  நல்லவிதமாக கவனிக்கப்படுகின்றனர். கருத்தரித்த பெண்கள் எப்படியேனும் தப்பிச் சென்று விட்டாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து குழந்தையைப் பெற்றுத் தந்து விட்டுச் செல்லுமாறு கட்டாயப்படுத்து கின்றனர்.

அதற்கு உதவாத பெண்களில் பலர் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு அவர்களுடைய உறுப்புகள் அகற்றப்பட்டு தேவையான வர்களுக்கு நல்ல விலைக்கு விற்று விடுகின்றனர்.
இந்தக் கொடுமைகளின் பட்டியல் மிக நீண்டதாகவே இருக்கிறது. இந்த இருபத் தோராம் நூற்றாண்டிலும் வசதியுள்ளவர்கள் வசதியற்ற ஏழைகளின் மீது புரிகின்ற கொடுமை-கள் மனிதத் தன்மையற்றவையாகவே உள்ளன.

மனித நேயத்தைப் புகட்டவும், சேவை புரியவும் கணக்கற்ற சேவை நிறுவனங்கள் பரந்து கிடந்தாலும் எளியவர்களுக்கு அவர்களின் சேவைகள் எட்டாக் கனியாகவே உள்ளன என்பது குன்றிடையிட்ட விளக்கன்றோ!

இதில் மிகவும் வேதனையான செய்தி என்னவெனில் இந்த முகவர்களைக் கண்-காணித்து சட்டத்தின் முன் நிறுத்தி தன்டிப்-பதற்குப் பதில், ஜார்க்கண்ட மாநில அரசு அவர்களுக்கு உதவும் வகையில் ‘Placements Agents Act’ என்ற சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்ற வெட்கக் கேட்டை என்ன சொல்வது? பிளேஸ்மெண்ட் ஏஜண்ட்ஸ் என்பது வேலை தேடித் தரும் முகவர்கள் என்ற பொருளில் கையாளப்படுகிறது.

எனவே, அவர்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில் இந்தச் சட்டம் நிறைவேறிவிட்டால் இந்தப் பெண்கள் கடத்தி விற்கப்படும் தொழில் சட்டப்பூர்வமானது என்றாகி விடுகிறதே! இதுதான் ஓர் அரசு தன் குடிமக்களுக்குச் செய்யும் சேவையா?

ஆனால், இந்தச் சட்ட முன் வடிவுக்கு அம்மாநில ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை என்பது சற்று ஆறுதலளித்தாலும் இந்தக் கொடுமையை நிறுத்த அரசு ஏதும் நடவடிக்கை மேற்கொள்ள-வில்லையே என்பதைக் காண்கிற போது கவலை ஏற்படத்தானே செய்கிறது! ஜார்கண்ட்டை ஆளுவது ‘மேக் இன் இந்தியா’ புகழ் மோடியின் கட்சிதானே! இந்த அவலத்திற்கு மோடியின் பதிலென்ன? எதிர்பார்ப்போமா?

– கெ.நா.சாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *