Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இனி சான்றிதழ்கள் தொலையாது….

இந்திய அரசின் டிஜிட்டல் லாக்கரில் பத்திரப்படுத்தலாம்

அரசு நிர்வாகத்தை மேலும் எளிமையாக்கி, காகித வடிவிலான ஆவணங்கள் பயன்பாட்டின் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் லாக்கர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வங்கிகளில் லாக்கர் வசதியைப் பயன்படுத்துவது போல இணையத்தில் இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியைப் பயன்படுத்தலாம்.
இந்திய மக்கள் மட்டுமே இந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.

உங்களது சான்றிதழ்கள், அரசு வழங்கும் டிஜிட்டல் ஆவணங்கள் போன்றவற்றை இந்த டிஜிட்டல் லாக்கரில் சேமிக்கலாம். இந்த லாக்கரில் 1 ஜி.பி. வரை இலவசமாக சேமிக்க வசதி உண்டு.

இதற்காக பிரத்யேகமாக இணையதளம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்று உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதில் உங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அத்துடன் ஆதார் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நடப்பு செயல்பாட்டில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, உங்களுக்கான டிஜிட்டல் லாக்கர் உருவாக்கப்படும்.

அதன் பிறகு, அந்த லாக்கரில் சான்றிதழ்களை ஸ்கேன் செய்தோ ஜேபிஜி (போட்டோ) ஃபைலாகவோ, பி.டி.எப்., ஃபபைலாகவோ பதிவேற்றி சேமிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு, பள்ளி, கல்லூரி சான்றிதழ், பாஸ்போர்ட், அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இதில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

சான்றிதழ்களை யாருக்கேனும் சமர்ப்பிக்க விரும்பினால், லாக்கரிலிந்து இ-_மெயில் வழியே அனுப்பி வைக்கலாம். இதன்மூலம் சான்றிதழ்களை கையில் எடுத்துச் செல்வதைக் தவிர்க்க முடியும்; ஆவணங்களை இணைய கையெழுத்திட்டு (E Signature) பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது.

சான்றிதழ் தொலைந்துவிடும் எனும் கவலை இல்லாமலும் இருக்கலாம். இவைதவிர, பல்வேறு அரசு அமைப்புகளால் டிஜிட்டல் வடிவில் வழங்கப்படும் ஆவணங்களையும், இதில் சேமித்து வைக்கலாம்.

மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த லாக்கரை எளிதாகக் கையாள முடியும்.

இணைய முகவரி: http://digitallocker.gov.in