நீயா-நானா?

ஜூலை 01-15

தொலைக்காட்சிகளில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள்! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சமே கிடையாது. இருக்க வேண்டியதுதான். அதில் பொருளும் இருந்தால் பயனாக இருக்குமே!

பொருள், கருத்து என்று பேசுவதெல்லாம் பொருளற்றது; ஜாலியாக இருக்க வேண்டும் என்று ஜாலியாகப் பேசுவோர் உண்டு.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி _ மறக்க முடியாத நிகழ்ச்சி!
ஜூன் 4ஆம் தேதி அது அரங்கேற்றியது. “நீயா நானா?’’ நிகழ்ச்சிதான் அது. வழக்கம்போல் கோபிநாத்துதான் ஒருங்கிணைப்பாளர்.

பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் தொங்குவது பற்றிய சர்ச்சை அது.

விறுவிறுப்பானது _ விவேகம் நிறைந்தது என்பதுதான் அதன் தனிச்சிறப்பு.

இரண்டு பக்கம் இரண்டு பிரிவினர். ஜாதிப் பெயர் வைக்க வேண்டும் என்ற பிரிவினரில் முதல் சுற்றில் முன்வைக்கப்பட்டவை, “என்னுடைய குடும்ப அடையாளம் இது. இடையில் அது இல்லாமல் இருந்தது. அதற்குக் காரணம் திராவிடர் கழகம் காரணமாக இருக்கலாம்.’’

என்றும், “பொதுவாக ஆண்கள்தான் தன் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை வைத்துக் கொள்வார்கள். “என் முன்னோர்களின் பெருமைக்காக வைத்துக் கொண்டேன்.’’ என்றும், “இதை வைத்துக்-கொள்ளவில்லையென்றால் ஜாதி அழிந்து-விடும்’’ என்றும், “ஜாதி அரசியலுக்காக வைத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றும், “ஜாதியை அடிப்படை அடையாளமாகக் கருதுகிறேன்’’ என்று ஒரு பார்ப்பனப் பெண்ணும், “வெறுமனே ஒரு நிக்நேமுக்காக வைத்திருக்கிறேன்’’ என்று ஒருவருமாகக் கூறினர்.

வைத்துக் கொள்ளக் கூடாது என்ற பக்கத்தில் பேசியவர்கள் முதல் சுற்றில் முன் வைத்தவை, “ஜாதிப் பெயரைச் சொன்னால் சட்டென்று ஈகோ பாதிக்கப்படுகிறது’’ என்றும், ஜாதி பற்றிய உணர்வேயில்லாமல் இருக்கும் சூழலில் தேவையில்லாமல் ஓ… இவர்கள் அந்த ஜாதியா? என்று தோன்றும்’’ என்றும், இவர்களால் சமத்துவமாக நடந்துகொள்ள முடியாது என்று தோன்றும்’’ என்றும், “ஜாதிபேதம் பார்க்காமல் பழகும் நண்பர்கள் மத்தியில் இவனுமா? என்று தோன்றும்’’ என்றும், 

“அவர்கள் ஆதிக்க ஜாதியாக இருப்பதால்தான் அந்தப் பெயரைப் போட்டுக்கொள்ள முடிகிறது. ஒடுக்கப்பட்ட ஜாதிகளால் போடமுடியாது’’ என்றும், “மற்ற சமூகங்களை பயமுறுத்து-வதற்காக இப்படிப் பயன்படுத்துகிறார்கள்’’ என்றும், “நான் உன்னைவிட மேலானவன் என்று காட்டவே இந்த ஜாதிப்பெயரைப் போடுகின்றனர்’’ என்றும் கூறினர்.

விவாதங்களில் ஒருவர் பேசும்போது, “நான் மேலாளராகப் பணிபுரிகிறேன். அங்கு ஏதாவது பணியிடங்கள் இருந்தது என்றால் என் ஜாதிக்காரங்களுக்குத் தகவல் கொடுப்பேன்’’ என்று ஜாதியை நியாயப்படுத்திப் பேசினார்.

அதற்கு எதிர்தரப்பிலிருந்து பேசிய ஒரு தோழர், “1980களில் தமிழ்நாட்டில் மருத்துவத்துறை இடஒதுக்கீட்டில் நேர்காணல் நடைமுறை இருந்தது. அதில்கேள்வி கேட்பவர் தன் ஜாதிக்காரராக இருந்தால், அந்த குறிப்பிட்ட ஜாதிக்காரர் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவேதான் ஒற்றைச்சாளர முறையைக் கொண்டு வந்தார்கள். ஜாதிப் பிரிவுகளாக இருந்ததை ஒரு குரூப்பாக மாற்றினர்.

உதாரணமாக எஸ்.சி., பி.சி. இது ஒரு வளர்ச்சியென்று நான் பார்க்கிறேன். இது சமத்துவத்தை நோக்கிய வளர்ச்சிதான். நீங்கள் மீண்டும் ஜாதிப்பெயரைப் போட்டு மறுபடியும் எல்லாவற்றையும் மாற்ற நினைக்கிறீர்கள்’’ என்று பதிலளித்தார்.

மற்றொருவர், “நீங்களும் ஜாதிப்பெயரைப் போட்டுக்கங்க. முன்னேறிக் காட்டுங்க. ஏன் பயப்படறீங்க? என்றும், ஜாதிச் சான்றிதழ் வைச்சிருக்கீங்கதானே? என்றும் கேட்டதற்கு, “ஜாதிப் பெயரை உயர்ஜாதிக்காரங்கதான் போட்டுக்க முடியும்.

மற்றபடி ஜாதிச் சான்றிதழ் வைச்கிருக்கீங்கன்னு ஏன் கொச்சைப் படுத்தறீங்கன்னா ஒடுக்கப்பட்டவங்களுக்கு இடஒதுக்கீட்டுனால கிடைச்ச நீதி உங்களுக்-கெல்லாம் எரிச்சலாக இருக்கிறது.

இரண்டு அல்லது மூன்று தலைமுறையாக ஒரு சமூகத்தை கல்வி வேலைவாய்ப்பு இல்லாமல் வச்சிருந்தா அந்தச் சமூகம் என்னாகும்? அதனால அவங்களுக்கு இந்த மாதிரி வாய்ப்பெல்லாம் கொடுப்பபது சரிதான்’’ என்று பதிலளித்தார்.

ஜாதிப் பெருமையை விரும்புகிறவர்கள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்து-கிறார்கள் என்று மதுரையைச் சேர்ந்த இளைஞர், ஜாதியை விரும்புகிறவர்கள் சத்தமில்லாமல் வரலாற்றையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டுக்குழைத்த தலைவர்களை ஜாதி வட்டத்துக்குள் கொண்டு-வந்து பொதுவானவற்றையே ஜாதிக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்.

இப்படித்தான் பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றபோது இணையத்தில் தேடுபொறியில் அதிகமாக தேடப்பட்டது அவருடைய ஜாதியைத்தான். இது மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்கும். ஜாதிப்பெயர் என்பது விளையாட்டான விசயமல்ல. அரசாங்கமே பயப்படக்கூடியது’’ என்று பதிலளித்தார்.

இவ்வாறு ஜாதிப்பெயர் கூடாது என்பவர்கள் தங்கள் வாதங்களை தர்க்கரீதியாக மிகவும் ஆழமாக வைத்துக் கொண்டிருந்தனர். எதிரணியினர் மேலோட்டமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இப்படியெல்லாம் பேசியதும் ஜாதிப் பெயர் போடுவதில் தவறில்லை என்று பேசிக் கொண்டிருந்த ஒரு பார்ப்பனப் பெண், பி.வி.சிந்து பற்றிய தகவலைக் கேட்டதும், “அது முட்டாள்தனம்’’ என்று வெளிப்படையாக அறிவித்தார். ஒருங்கிணைப்பாளர், அது முட்டாள்தனம் என்றால், நீங்க ஜாதிப்பெயரைப் போட்டுக் கொள்வதற்கு என்ன பெயர்?’’ என்று கேட்டார்.

அந்தப் பெண்ணிடமிருந்து அதற்குப் பதிலில்லை. ஜாதிமாறிக் கல்யாணம் செய்து கொண்டால் ஒரு ஜாதி அழிந்துவிடுகிறது என்றே ஜாதிப்பெயர் வேண்டுமென்றவர்களில் ஒருவர் குற்றம் சாட்டினார்.

அடிப்படையே தெரியாமல் இருக்கிறார் என்று அதற்கு எதிரணியிலிருந்து பதில் கொடுக்கப்பட்டது. இறுதிக் கட்டமாக கேரளாவைச் சேர்ந்த நடிகை பார்வதி நாயர், தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநரும் நடிகருமான கரு.பழனியப்பன் இருவரும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர்.

பார்வதி நாயரிடம் ஒருங்ணைப்பாளர் கோபிநாத் கேள்வியைத் தொடங்கினார். அதாவது, “கேரளா என்பது எல்லா வகையிலும் முற்போக்காக இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அங்கே ஆட்சியில் இருக்கிறது. இருந்தாலும் அங்கு ஜாதிப் பெயர் போடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் போடமுடியவில்லையே. ஏன்?’’ என்று கேட்டார். அதற்கு பார்வதி நாயர், தமிழ்நாட்டைப் போல இல்லாததற்குக் காரணம், சில விசயங்களில் கேரளாவிலுள்ள உயர் ஜாதியினர் அவ்வளவு முற்போக்காக இல்லை.

அது மட்டுமல்லாமல் ஜாதி என்பது தொழில் சார்ந்துதான் இருக்கிறது. எல்லா ஜாதிக்காரரும் சமம்தான்’’ என்று சொன்னார். அதற்கு இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்-போது, “தொழில்வாரியாக பிரித்திருந்தனர் என்று சொன்னார்.

ஒருவர் ஆசிரியராக இருக்கிறார், மற்றொருவர் பொறியாளராக இருக்கிறார், வேறோருவர் மருத்துவராக இருக்கிறார். இவர்களெல்லாம் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிகளை போட்டுக் கொள்ளலாம்.

ஆனால், கக்கூஸ் எடுக்கிறானே அவன் எப்படிப் போடுவான்? அவனை மறுபடி மறுபடி அதே வேலையைச் செய்யச் சொன்னீர்களே அவன் எப்படிப் போடுவான்?’’ என்று எதிர்கேள்வி கேட்டார். கேரளாவில் ஜாதிப் பெயரை போடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் போடுவதில்லை. காரணம், இங்கே ஒரு பெரியார் இருந்தார். அங்கே பெரியார் இல்லை. அவ்வளவுதான்’’ என்று சொன்னதும், பலத்த கைத்தட்டல் எழுந்தது. பார்வதி நாயரிடம் இதற்கு பதில் இல்லை.

ஜாதிப்பெயர் போடுவதில் தவறில்லை என்று பேசியவரின் பார்வையைப் பற்றியும் கரு.பழனியப்பன், “இங்கொருவர் கோவை மாவட்டத்தில் நாயக்கர் தோட்டம் இருக்கு, கவுண்டர் தோட்டம் இருக்கு. ஆனால் அங்கெல்லாம் பிரச்சினை எதுவுமில்லையே? என்று சொன்னார். அதெல்லாம் சரி, அங்கே சக்கிலியத் தோட்டம் இல்லையே ஏன்? ஏன்னா? அவனிடம் நிலம் இல்லை.

நம்மைப் பொறுத்தவரையில், ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள். நம்ம ஊர்ல, “பார்க்க வைச்சிட்டு சாப்பிடாதீங்க’’ன்னு சொல்லுவாங்க. ஏன்னா? அவன் பசியோட இருந்துட்டான்னா? இதுதான் நமது முதல் பண்பாடு! என்று கூறிவிட்டு, “நான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பசியோடு இருக்கிறேன். என் ஜாதியை என்னால போட முடியலீங்க.

உங்க உயர்ஜாதிப் பெருமையை நீங்க போட்டுக்கிட்டே இருக்கிறீங்க. என்னை பார்க்க வச்சிட்டு சாப்பிடறீங்க. இப்படி செய்யலாமா நீங்க?’’ என்று கேட்டதும், எதிரணியினருக்கு சுருக்கென்று பட்டு, “சார், ஜாதிப் பெயரை போடறதால உங்க மனசு புண்படும்னா, எனக்கு அந்த ஜாதியே தேவையில்லை சார்’’ என்று பளிச்சென்று சொல்லிவிட்டார்.

உடனே, கரு.பழனியப்பன், “அப்படியின்னா, நீங்க இந்தப் பக்கம் வாங்க’’ என்று அழைத்ததும், சிறிதும் யோசிக்காமல் எழுந்து வந்துவிட, திடீரென்று அந்தப் பக்கத்தின் கூடாரமே காலியானதுபோல, 25 பேரில் 8 பேர் போக மீதமுள்ள அனைவரும் ஜாதி கூடாது என்பவர்கள் பக்கம் வந்து விட்டனர்.

அதில் ஒரு பார்ப்பனப் பெண்ணும் அடக்கம். இறுதியில் கோபிநாத், “ஜாதிப் பெயரை போடாமலிருப்பதுதான் சரி! கேட்டாலும் சொல்லாமல் தவிர்ப்பதுதான் சரி! இதுதான் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்பதற்கு அடையாளம். அந்த அடையாளத்தை விட்டுக் கொடுத்து விடாதீர்கள்! என்று முடித்தார்.

இறுதியில் ஜாதிப்பெயர் போடக்கூடாது என்ற அணியில் சிறப்பாக கருத்துகளை எடுத்துவைத்த மதுரையைச் சேர்ந்த பண்டியராஜன், ஜெகன்நாதன் கருணாநிதி என்பவருக்கும், கரு.பழனியப்பன் கேட்டதும் உடனே எழுந்து வந்த மனிதருக்கும் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இன்னும் கொஞ்சம் ஆழமாக அமைந்திருக்கலாம் அந்த விவாதப்போர்.

ஜாதி _ ஒரு ஸ்டைல், ஓர் அடையாளம். அதனால் மற்றவர்களுக்கு என்ன நோக்காடு என்று பேசுவதெல்லாம் சரியானதுதானா?

ஜாதி என்றாலே பிறப்பின் அடிப்படையிலே ஏற்படுத்தப்படும் பிளவுதானே _ ஏற்றத்தாழ்வு தானே!

அதையும் தாண்டி வருணத்தைப் பற்றியும் ஓர் அலசு அலசியிருக்க வேண்டாமா?
தன்னைப் பிராமணன் என்று பறை-சாற்றுவது சகோதரத்துவத்திற்கான சமதர்ம வெளிப்பாடா? அல்லவே! தான் பிராமணன் என்பதைவிட மற்றவர்களைப் பார்த்து சூத்திரன் என்று இழிவுபடுத்தும் இறுமாப்புதானே.

பார்ப்பனர் பூணூல் தரிப்பது எதற்காக? இரு பிறவியாளன் துவிஜாதி என்று காட்டும் துடுக்குத்தனம் தானே?

கேரளாவைச் சேர்ந்த நடிகை பார்வதி நாயருக்கு ஒரு சேதி தெரியுமா? நாயர் வீட்டுப் பெண்களிடத்தில் முதலிரவைக் கழிப்பவன் நம்பூதிரிப் பார்ப்பனன்தானே.

எந்த நேரத்திலும் நாயர் வீட்டுக்குள் ஒரு நம்பூதிரி நுழைய முடியுமே _ பெண்களிடம் உறவு கொள்ள முடியுமே. இந்தத் தகவல் எல்லாம் பேசப்பட்டிருக்க வேண்டாமா?

நாயர் பெண்களுடன்…

“நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திப்படுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் _ எதிர்ப்பவர்கள் _ தெய்வக் குற்றத்திற்கு ஆளாவர்’’.

இதுபோன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தைகளைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப்பூர்வமாக விரும்பி-யிருந்தனர்.

“சூத்திரப் பெண்கள் பத்தினித் தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்.’’

(சி.அச்சுதமேனோன் _ கொச்சின் மாநில கையேடு _ 1910. பக்கம் 193. – – C.Achchutha
Menon – Cochin State Manual – 1910 Page No.: 193.)

தோள்சீலைப் போராட்டம் பற்றி எல்லாம் பேசப்பட்டிருக்க வேண்டாமா? ஒடுக்கப்பட்ட பெண்கள் இரவிக்கை அணியக் கூடாதே! திறந்த மார்போடுதானே திரிய வேண்டும்; அதோடு விட்டார்களா? அதற்கும் வரி (முலை வரி) என்ன கொடுமை!

இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் ஜாதி ஓர் அடையாளம் என்று பேசுவதெல்லாம் சுத்தப் பிதற்றல் அல்லவா?

– மின்சாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *