மானமிகு தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கோவில்பட்டியில் இருந்து எஸ்.ஜெயா எழுதுவது. உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் ஒரு கிருஸ்தவ பெண்ணாக இருந்து பகுத்தறிவுச் சிந்தனைக்குள் வந்தவள். உங்களுடைய உண்மை இதழைப் படித்து அனேக விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.
நானும் ஒரு சிறு பெண்ணும் உங்களை 5.7.2016 அன்று சந்தித்தோம். ஆனால், அந்தப் பெண் சூர்யா இன்று உயிருடன் இல்லை.
அந்தப் பெண் உண்மை இதழை விரும்பிப் படிப்பாள். எங்களுடைய ஆலையில் 300 நபர்கள் பணி செய்கிறோம். ஒரு நாள் அய்யப்ப பூஜை நடந்தது.
ஆனால் அந்தப் பெண், “நான் ஒரு பகுத்தறிவுவாதி. மூடநம்பிக்கை விழாவிற்கு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன்’’ என்று பாக்டரி மேனேஜரிடம் மிகவும் தைரியமாகக் கூறி பணம் தரவே இல்லை. ஆனால், ஆண்டிப்பட்டி தோழர் செ.கண்ணன் வருடா வருடம் இரத்ததான முகாம் நடத்துவார். அதற்கு அந்தப் பெண் 500 ரூபாய் கொடுப்பாள்.
இந்த வருடம் ஆசிரியர் பிறந்த நாள் அன்று ஆண்டிப்பட்டியில் ஒரு கூட்டம் வைத்தார்கள். அதற்கு அந்தப் பெண் பணம் கொடுத்தாள். மே 5ஆம் தேதி திடீர் என்று வலிப்பு வந்து கோமா நிலையில் 4 நாள் இருந்து மே 9ஆம் தேதி எங்கள் எல்லோரையும் விட்டுப் பிரிந்து சென்றது அந்தப் பகுத்தறிவுப் பிஞ்சு.
இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், இந்த மாதம் வந்த 16_30 உண்மை இதழில், “வலிப்பு நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக் கூடாது.’’
என்று எழுதி இருந்தது. அந்தப் பெண் சூர்யாவிற்கு திடீர் என்று வலிப்பு வந்து கோமா நிலையில் இருந்து உயிர் இழந்தாள். அந்தப் பெண்ணுக்கு மூளையில் என்ன நடந்தது? என்றும், எப்படி மரணம் வந்தது? என்றும், யாருக்கும் தெரியவில்லை.
ஆனால், உண்மை இதழைப் படித்த பிறகுதான் வலிப்பு வந்தால் என்ன விஷயம் மூளையில் நடைபெறும் என்பதைத் தெரிந்துகொண்டேன். நான் மட்டும் அல்ல. எங்கள் ஆலையில் உள்ள அனைவருக்கும் ‘உண்மை’ இதழில் எழுதியுள்ளதை காண்பித்தோம். இனி இப்படி ஒரு உயிர் இழப்பை நேராது தடுப்போம்.
‘உண்மை’ இதழ் ஒவ்வொரு மனிதனையும், பகுத்தறிவுவாதியாக மட்டும் அல்ல, ஒரு சிறந்த சிந்தனைவாதியாகவும், மறக்கப்பட்ட உண்மை செய்தியும், மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், அரசியல் மற்றும் ஒரு பெண் தன் கண்களை இழந்தாலும், கால்களை இழந்தாலும் எப்படி தன்னம்பிக்கையோடு வாழலாம் என்றும் ‘உண்மை’ இதழ் சொல்கிறது.
“உண்மைக்கு நிகர் உண்மையே’’
கண்டிப்பாக ஆசிரியர் அவர்கள் இந்தக் கடிதத்தைப் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு,
எஸ்.ஜெயா,
கோவில்பட்டி