திராவிட மொழியும் கிளைமொழியுமான ஒவ்வொன்றின் இலக்கண அமைப்பையும் அதன்தன் தகுதிக்கும் ஆசிரியர்க்கு அதிலுள்ள பயிற்சிக்கும் தக்கவாறு மிகவோ குறையவோ ஆராய்ந்து விளக்கும்போதே, தாம் முப்பத்-தேழாண்டுகட்கு மேலாகப் பயின்று வந்ததும் தம் மதத் தொண்டிற்குப் பயன்படுத்தியதும் திரவிட மொழிகளுட் பெரும்பாலும் முதன்முதற் பண்படுத்தப் பெற்றதும் தலைசிறந்த முறையில் வளர்க்கப் பெற்றதும் பலவகையிலும் திரவிடக் குடும்பத்திற்குப் பதின்மை தாங்கு-வதுமான, தமிழமைப்பை அடிக்கடி எடுத்துக்காட்டுவது ஆசிரியரின் சிறப்பு நோக்கமாகும்.
இக்குடும்பம் (திரவிடம்) ஒரு காலத்தில் அய்ரோப்பிய ஆசிரியரால் தமிழியம் (Tamulian or Tamulic) என அழைக்கப்பட்டது. ஆனால், தமிழ் பெரும்பாலும் இக்குடும்பத்தில் மிகத் தொன்மையானதும் மிகவுயர்வாகப் பண்படுத்தப் பெற்றதும் இக் குடும்பத்திற்குரிய வடிவங்களிலும் வேர்களிலும் பெரும்பாலானவற்றைப் பெற்றிருப்பதுமான மொழியாயிருந்தாலு…
தமிழ்_இம்மொழி திரவிட மொழிகளுள் பெரும்பாலும் முதன்முதல் பண்படுத்தப் பெற்றதும் மிகுந்த வளமுள்ளதும் அய்யமறப் பழைமையான வடிவங்களுள் பெரும்பகுதியையும் மிகப்பல வகைகளையும் கொண்டுள்ளது-மானதாதலின், தன் தகுதிக்கேற்றபடி, பட்டியில் முதலில் குறிக்கப்பெற்றுள்ளது.
எவ்வகையிலும் திரவிட மொழிகளுக்குள் தலைசிறப்பப் பண்படுத்தப் பெற்ற தமிழ் வேண்டுமாயின், வடமொழித் தொடர்பை அறவே விலக்குவதுடன் தனித்து வழங்குதல் மட்டுமன்று; அதன் உதவியின்றித் தழைத்தோங்கவும் இயலும்.
( திரவிட ஒப்பியல் இலக்கணம் நூலிலிருந்து…)