“ஜெய் அனுமன்’’, “ஜெய் அனுமன்’’
வீட்டு வாசலிலிருந்து வந்த வித்தியாசமான குரலைக் கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தான் கோமகன்.
அவனது நண்பன் புகழேந்திதான் கோமகன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தான்.
“என்னடா புகழேந்தி, என்ன ஆயிற்று உனக்கு? திடீரென ஏதோ பிதற்றிக்கொண்டு வர்ரீயே!’’ நண்பனைக் கேட்டான் கோமகன்.
“நண்பா, உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்ற திருமூலர் கூற்றை படித்திருக்கிறாயா?’’ என வினவினான் புகழேந்தி.
“ஆமாம். படிச்சிருக்கேன். நமக்குத்தான் நல்லா தெரியுமே.’’
“நான் உடலை வளர்க்கப் போறேன்’’
“ஆனால், அதுக்கும் ஜெய் அனுமன்னு பிதற்றுவதற்கும் என்னடா சம்பந்தம்?’’
“நான் பிதற்றலே. உண்மையை உணர்ந்து கிட்டேன். அனுமன்கிட்ட வேண்டிகிட்டு சக்தியை உடம்பிலே ஏத்திக்கப் போறேன்.’’
“நேற்று வரைக்கும் நல்லாத்தானே இருந்தே! என்னடா ஆச்சு உனக்கு? யாரோ உன்னோட மனசக் கெடுத்திருக்காங்க. யாரடா அது?’’
“நண்பா, கீழத்தெருவில் இருக்கிற அனுமன் கோயில் உனக்குத் தெரியும்தானே!’’
“ஆமாம்டா புகழேந்தி. நல்லாத்தான் தெரியுமே. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு குரங்கு லாரியில அடிபட்டு செத்துப் போச்சு. அத எடுத்து ஒருத்தன் ரோட்டு ஓரமா புதைச்சான்.’’
“அப்புறம் என்னா ஆச்சு கோமகன்?’’
“தெரியாதது போல் கேட்கறீயே! அதுல ஒருத்தன் சின்னதா ஒரு கோயில் கட்டினான். இப்ப அது பெரிய கோயில் ஆயிடுச்சு. ஒரு பார்ப்பன சாமியார் பூசை செஞ்சிக்கிட்டு வர்றார்.’’
“அந்தச் சாமியாரை நான் பார்த்துப் பேசினேன். அனுமன் மகிமை பற்றி விலாவாரியா சொன்னார். அதிலேயிருந்து எனக்கு ஒரு சக்தி வந்துடுச்சி.’’
“சரி, சரி, உன்னை மனநோய் மருத்துவர்கிட்ட அழைச்சிக்கிட்டுப் போகவேண்டியதுதான்! அதுசரி புகழேந்தி! நேத்து நாம் என்ன பேசிக்கிட்டு இருந்தோம். மறந்துட்டியா?’’
“மறக்கல. இளங்கோ மாஸ்டர்கிட்ட போய் கராத்தே கத்துக்க இருந்தோம். ஆனா, அது தேவையே இல்லை. ஏன் உடம்பை வருத்திப்பானேன்? ராமஜெயம் எழுதி அனுமன் கோயிலுக்குப் போனா போதும். உடம்பில சக்தி தானா வந்திடும்.’’
“அப்படி என்னதான் நீ அனுமன்கிட்ட கண்டுட்டே. இதெல்லாம் வேணாம். விட்டுடு.’’
“அனுமனுக்கு பறக்கும் சக்தியே இருக்கு. கிரகங்களிலிருந்து சூரியனுக்கே பறப்பார். சூரியனையே ஒரு பழம்னு நெனைச்சி தின்னப் போனாருன்னா பார்த்துக்கேயேன்.’’
“அந்த சாமியார் சொன்னாரா?’’
“ஆமாம். அனுமன் ஒரு சூப்பர் மேன். ஒருமுறை லட்சுமணன் இந்திரஜித்தோடு போரிட்டு காயம்பட்டான். அவனை குணப்படுத்த சஞ்சீவினி மூலிகை தேவைப் பட்டது. மலையில் இருந்த அந்த மூலிகையை அனுமனால் அடையாளம் காண முடியவில்லை. அதனால அந்த மலையையே தூக்கிக்கிட்டு பறந்தான் அனுமன். நீயும் என்னோட வா. அனுமன் அருள் உனக்கும் கிடைக்கும்.’’
“வேண்டாம், வேண்டாம். நான் இளங்கோ மாஸ்டர்கிட்டயே போறேன்.’’
“சரி. நீ ஒத்துவரமாட்ட. நான் போய் எலுமிச்சம் பழம், தேங்காய், பூவெல்லாம் வாங்கிட்டு அனுமன் கோயிலுக்குப் போறேன். இன்னைக்கு அனுமன் ஜெயந்தி. ஜெய் அனுமன், ஜெய் அனுமன்…’’ என்றபடி கோமகன் வீட்டை விட்டுப் புறப்பட்டான் புகழேந்தி.
* * *
மூன்று மாதங்கள் சென்றன. கோமகன் கடுமையாக கராத்தே பயிற்சியை மேற்கொண்டான்.
தற்காப்புக் கலை என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன? எவ்வாறு தோன்றியது? எந்தச் சூழ்நிலையில் பயன்படும் என்பதையெல்லாம் விரிவாகக் கற்றறிந்தான்.
அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி; ஓட்டப் பயிற்சி மேற்கொள்வான்.
ஒருநாள் வேகநடைப் பயிற்சியை முடித்தபோது எதிரே புகழேந்தியைக் கண்டான்.
பனிக்காலத்திலும் வியர்வை சொட்டச் சொட்ட நின்று கொண்டிருந்த கோமகனைப் பார்த்து புகழேந்தி ரொம்பவும் அனுதாபப் பட்டான்.
“கோமகன், உடம்பை நீ ரொம்பவும் வருத்திக்கிறீயே. என்னைப் பார். உடம்பை எப்படி மினுமினுப்பா வைச்சிருக்கேன் பார்.’’
“புகழேந்தி, நடைப் பயிற்சி உடம்புக்கு ரொம்ப நல்லது.’’
“என்ன பெரிய நன்மை?’’ கேட்டான் புகழேந்தி.
“நடைப்பயிற்சி இதயத்தை வலுப்படுத்தும். நோய் வராமல் பாதுகாக்கும்.’’
“நான்கூட அனுமன் கோயிலுக்கு நடந்துதானே போறேன்.’’
“புகழேந்தி, நடைப்பயிற்சின்னா எங்கும் நிற்காமல் ஒரே வேகத்தில் ஒரு மணி நேரமாவது நடக்கணும். நடைப் பயிற்சியால் நம் உடல் எடை குறையும். கால்கள் வலுப்படும். உடலுக்கு வைட்டமின் ‘டி’ கிடைக்க ஊக்கப்படுத்தும். இன்னும்…’’
“போதுமப்பா… போதும்… இதுவெல்லாம் ராமஜெயம் எழுதினாலே கிடைக்கும்னு சாமியார் சொன்னார்.’’
“சரி, சரி. நீ திருந்தப்போறது இல்ல. எப்படியாவது போ. வேறு ஏதாவது சேதி உண்டா?’’
“நாளைக்கு நாம் மயிலாடுதுறை வரைக்கும் போயிட்டு வரலாம். வேலை விஷயமா அங்கு ஒருத்தரைப் பார்க்கணும். எனது பைக்கை எடுத்துகிட்டு வர்றேன். நீயும் வா. நம்ம பழைய நண்பர்களையும் பார்த்துட்டு வரலாம்.’’
“நாளைதானே! போகலாம்.’’ என்று கூறிய மோமகன், புகழேந்தியை அனுப்பிவிட்டு, கராத்தே பயிற்சி மேற்கொள்ள விரைவாக நடந்தான்.
* * *
மயிலாடுதுறை சென்று விட்டு கோமகனும் புகழேந்தியும் இரு சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் தாமதமாகக் கிளம்பியதால் இரவு நேரமாகி விட்டது. புகழேந்தி வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான். நகரை விட்டு நீண்ட தூரம் வந்துவிட்டனர்.
நல்ல இருட்டு. சென்று கொண்டிருந்த வண்டி திடீரென நின்று விட்டது. இருவரும் இறங்கி வண்டியைச் சோதித்தனர். புகழேந்தி பெட்ரோல் செல்லும் குழாயைப் பார்த்தான். பெட்ரோல் சுத்தமாக வரவில்லை. குழாயில் துவாரம் ஏற்பட்டு பெட்ரோல் சேதமாகியிருந்தது.
“என்னடா இது, இந்த இடத்தில் இப்படி ஆயிடுச்சு’’, சலிப்புடன் சொன்னான் புகழேந்தி.
கோமகன் சுற்றுப்புறத்தைப் பார்த்தான். சற்று தூரத்தில் மின் விளக்கு தென்பட்டது. வீடாகத்தான் இருக்கும் என நினைத்தான்.
“புகழேந்தி, நீ இங்கேயே இரு. அதோ ஒரு வீடு தென்படுகிறது. நான் போய்க் கொஞ்சம் பெட்ரோல் கிடைக்குமா என பார்த்து வருகிறேன்’’ என்று கூறியபடி நடந்தான் கோமகன்.
கோமகன் இருட்டில் மறைவதை பார்த்துக் கொண்டிருந்தான் புகழேந்தி.
அப்போது ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. இரண்டு பேர் தன்னை நோக்கி வருவதை புகழேந்தி பார்த்தான். வந்தவர்கள் புகழேந்தி கையில் இருந்த வண்டிச் சாவியைப் பிடுங்கினர். அவர்கள் வண்டித் திருடர்கள் என்பதை அறிந்த புகழேந்தி சாவியைத் தர மறுத்தான். கோபமடைந்த ஒருவன் புகழேந்தியை பலமாக நெட்டித் தள்ளவும் தாடலென விழுந்தான் புகழேந்தி.
பிறகு சமாளித்து எழுந்த புகழேந்தி, “ஜெய் அனுமன், ஜெய் அனுமன்’’ எனக் கத்தினான்.
“என்னடா காமெடி பண்றே’’, எனக் கூறிக்கொண்டே இன்னொருவன் புகழேந்தி முகத்தில் ஒரு குத்து விட்டான். இரண்டு பற்கள் சிதறி விழுந்தன.
வாயிலும் மூக்கிலும் இரத்தம் பீறிட்டு அடித்தது. மேலும் அவன் புகழேந்தியின் கைகளை முறுக்கி எட்டி உதைத்தவுடன் எலும்புகள் முறிய “ஆ’’வென அலறியபடி கீழே விழுந்தான் புகழேந்தி.
அவன் போட்ட சத்தம் கோமகன் காதுகளிலும் கேட்டது. ஏதோ அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்து ஓடிவந்தான். நடந்த சம்பவத்தை ஒரு நொடியில் உணர்ந்தான்.
வண்டித் திருடர்கள் கோமகனைத் தாக்க முற்பட்டனர். கோமனுக்கு கற்ற கராத்தே கை கொடுத்தது. நன்றாக பயிற்சி எடுத்துள்ளோமா என்பதைச் சோதிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
முகக்குத்து, வயிற்றுக்குத்து, முன் உதை, பின் உதை என அனைத்தையும் பயன்படுத்தி அவர்களை வெளுத்து வாங்கினான். விட்டால் போதுமென்று இருவரும் தலைதெறிக்க ஓடினர்.
===
ஒரு மாதம் சென்றது. மருத்துவமனையில் இருந்த புகழேந்தியைப் பார்க்க கோமகன் வந்தான்.
கை, கால்களில் போடப்பட்டிருந்த கட்டுகள் அன்றுதான் பிரிக்கப்பட்டன. அவனது பெற்றோர்களும் வந்திருந்தனர்.
மருத்துவர்கள் புகழேந்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் எனக் கூறிவிட்டனர்.
அனைவரும் காரில் புகழேந்தியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினர். கார் அனுமன் கோயில் வழியாகச் சென்றது. கோயிலில் நிறுத்தச் சொல்வான் என கோமகன் எதிர்பார்த்தான். ஆனால் புகழேந்தி எதுவும் பேசாமல் உட்காந்திருந்தான்.
“புகழேந்தி, கோயிலுக்குப் போகணுமா? காரை நிறுத்தவா?’’ என வேண்டுமென்றே கேட்டான் கோமகன்.
“வேண்டவே வேண்டாம். அனுமனை நம்பி வாங்கின உதை போதும். நேரா கராத்தே மாஸ்டர் இளங்கோ வீட்டுக்குப் போ. நானும் உன்னைப் போல் உண்மையில் உடலுக்கு வலுவூட்டப் போறேன்.’’ தீர்மானமாகச் சொன்னான் புகழேந்தி.
புகழேந்திக்குப் புத்தி வந்ததை நினைத்து கோமகன் மகிழ்ந்தான்.
– ஆறு. கலைச்செல்வன்