ராபின் என்னும் 11ஆம் வகுப்புப் பயிலும் மாணவன் சீர்காழிக்குப் பக்கத்தில் பழையார் என்னும் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ரவியின் மகன். ரவி ஓர் எளிய மீனவர்.
ராபின் அவரது பள்ளியில் கடந்த மூன்றாண்டுகளாக கைப்பந்து விளையாடி வந்தார். சிலர் கடற்கரைக் கைப்பந்து விளையாட்டைப் பற்றிக் கூறியபோது அதை மேற்கொள்ள முயன்றார்.
அந்த முயற்சியைப் பற்றி அவர் கூறும்போது, “ஆரம்பத்தில் மணலில் விளையாடுவது மிகக் கடினமாக இருந்தது. அதற்கு மிகவும் ஆற்றலும், சக்தியும் தேவைப்பட்டது.
ஆனால், தற்போது பழக்கப்பட்டுவிட்டது. நாங்கள் நாகப்-பட்டிணத்தில் 10 நாட்கள் பயிற்சிக்காக விளையாடினோம்’’ என்கிறார்.
இந்தப் பயிற்சிகளின் விளைவாக, ‘பிரேசிலை’ எதிர்த்து ‘தஹிட்டி’யில் சர்வதேசப் பள்ளிகள் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் (International School Sports Federation) நடத்தப்பட்ட கடற்கரைக் கைப்பந்துப் போட்டியில் இவரது குழு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளது. இவரது குழுவில் ‘தருண்’, ‘சுவாகத்’ ஆகிய எளிய குடும்பத்துப் பிள்ளைகளும் அடங்குவர்.
தேசிய மீனவர் அமைப்பின் தலைவர் இளங்கோ, “இந்த மாணவர்கள் சர்வதேச அளவில் நம் நாட்டை பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்கள்.
எனவே, இந்த 16 வயதுக்குக் குறைவான பிரிவினரின் வெற்றியை முதலமைச்சர் கவுரவப்படுத்த வேண்டும். அப்படிச் செய்வது இவர்களை மேலும் ஊக்குவிக்கும்’’ என்கிறார். அவரோடு சேர்ந்து நாமும் இந்த மாணவச் செல்வங்களைப் பாராட்டுவதோடு, அவருடைய கோரிக்கையை நாமும் ஆதரிக்கிறோம்.
இல்லாதோர் ஆனாலும் இயலாதோர் அல்ல நாங்கள் என்று சாதித்தவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதும், உதவி செய்வதும் சமுதாயக் கடமையாகும்!