இந்த நாட்டில் இந்தி வரக்கூடாது என்பதற்காக நாம் 1938ஆம் ஆண்டு முதல் நம்முடைய எதிர்ப்புணர்ச்சியைக் காட்டி வருகின்றோம். அப்படி இருந்தும் இப்பொழுது தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் இந்தி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது.
இந்தத் தமிழ்நாடு என்றும் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று வடக்கே இருப்பவர்கள் கருதுகின்றனர். அந்த எண்ணத்தை முறியடிக்கத்தான் போர்க்கொடி உயர்த்துகிறோம்.
இந்த நேரத்தில் நம்மைப் பார்த்துச் சிலர் ‘மொழி வெறியர்கள்’ என்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லுகிறேன் _ “நாங்கள் இந்தியின் மீது ஆதிக்கம் செலுத்த எண்ணவில்லை’’ என்று கூறுவதை அவர்கள் நன்றாகச் சிந்தித்துணர வேண்டும்.
தமிழிலே கார்டு, அவர் அச்சிட்டு வடநாட்டில் கொடுத்தால் அந்த அஞ்சலகங்கள் அங்கு கொளுத்தப்படும் _ அதிகாரிகள் கொல்லப்படுவார்கள் _ அந்த அளவுக்கு வடநாட்டில் மொழிவெறி நிறைந்திருக்கிறது என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.
உண்மையில் இந்தி திணிக்கப்பட்டு விட்ட இந்த நேரத்தில்கூட நாம் அறவழியில் நின்றுதான் நமது எதிர்ப்புணர்ச்சியைக் காட்டுகிறோம்.
இந்தி பிறந்த நாட்டில் எல்லா இடங்களிலும் இந்தியே இருக்கட்டும்; நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நமக்கு அந்த இந்தி ஒரு துளியும் வேண்டாம். இங்குள்ள தமிழ் மக்களோடு தொடர்பு கொள்ளத் தமிழ் போதும். பிற மாநிலங்களோடும், பிற நாடுகளோடும் தொடர்பு கொள்ள ஆங்கிலம் போதும்.
நமது அவசியத்துக்காக இந்தி இப்போது இங்கு வரவில்லை. வடவரின் ஆதிக்கத்தின் பேரால் வருகிறது. இதை நாம் எதிர்த்துத் தடுத்தே தீரவேண்டும்.
– பேரறிஞர் அண்ணா, 4.7.1960 (சென்னை 79ஆவது வட்டப் பொதுக்கூட்டத்தில் பேசியது.