சிதம்பரம் தீட்சதர்கள் செய்யும் சட்டவிரோத குழந்தைத் திருமணந்காள்!அரசின் நடவடிக்கை என்ன?

ஜூன் 01-15

தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களும் இந்துசமய அறநிலைத்துறைக்கு உட்பட்டு பராமரிக்கப்படும் நிலையில், சிதம்பரம் கோயில் மட்டும் தீட்சதர்களுக்கு உரியது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு சிதம்பரத்தில் தீட்சதர்களின் அடாவடித்தனம் அதிகமாகி விட்டது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பில்கூட, சிதம்பரம் கோயில் தீட்சதர்களுக்கு சொந்தம் என்ற வாசகமில்லை; இந்து அறநிலையத் துறை குறுக்கீடு இல்லாமல் நிர்வகிக்கின்ற உரிமை என்றுதான் உள்ளது.

ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை தரிசனம் என்ற பெருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் தீட்சதர்களுக்குள் திருஉளச் சீட்டு மூலம் நிர்வாகக் குழு தேர்ந்தெடுத்து, அந்தந்த ஆண்டு நடைபெறும் தரிசனங்களில் கொள்ளை யடிக்கின்றனர்.

முன்பு தினசரி வாழ்க்கைக்கு கஷ்டப்பட்ட தீட்சதர்கள் இன்று செல்வச் செழிப்பில் மிதக்கின்றனர். இந்தியா முழுதும் ‘பால்ய விவாகம்’ எனப்படும் குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்ட பொழுதிலும், இன்றுவரை இச்செயல் சிதம்பரத்தில் தொடர்கிறது. இத்திருமணங்கள் 1930ஆம் ஆண்டே தடைசெய்யப்பட்டன.

தீட்சதர்கள் 2014ஆம் ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களை நடத்தினர்; நான்கு வீதிகளிலும் ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றைய சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் பாலகிருஷ்ணன், நகர மார்க்சிஸ்ட் செயலாளர் தோழர் இராமச்சந்திரன் முயற்சியால் ஊர்வலம் தடுக்கப்பட்டது.

தீட்சதர்களின் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் அனைத்தையும் அன்றுமுதல் இன்றுவரை வெளிச்சத்திற்கு கொண்டுவரும், தமிழக அரசின் முன்னாள் இந்து அறநிலையத் துறை அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் அவர்கள், தற்பொழுது தீட்சதர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

கடந்த 16.3.2017 வியாழன்று சிதம்பரம் கீழவீதி கோதண்டராமன் திருமண மண்டபத்தில் குஞ்சிபாத தீட்சதர் செல்வ-கணபதி என்ற குழந்தைக்கும், ரத்தினசபாபதி தீட்சதரின் பெண் குழந்தையான தாராபாய்க்கும் பத்திரிக்கை அடித்து வெளிப்படையாகத் திருமணம் செய்துள்ளனர்.

இச்செய்தியறிந்த முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் அவர்கள், ஆடுரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் இளங்கோவன் என்பவர் மூலம் காவல் துறைக்கும், சிதம்பரம் சார்_ஆட்சியருக்கும் புகார் மனு அளித்தார். 

சிதம்பரம் காவல்துறையினரும், வருவாய்த் துறையைச் சார்ந்த துணை தாசில்தார் பழனியப்பன் என்பவரும் புகார் கொடுத்த இளங்கோவன் அவர்களை அழைத்து மிரட்டியுள்ளனர். தீட்சதர்களின் இத்திருமணப் பத்திரிகை முன்னாள் நகர்மன்றத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் மூலம் கிடைத்தது.

இச்செயல்களைக் கண்டு கொதித்தெழுந்த முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடமும் கலந்துபேசிய பின், தீட்சதர்களின் சட்ட மீறலையும், புகார் கொடுத்தவரையே மிரட்டும் அதிகாரிகளையும் கண்டித்து, சிதம்பரத்திலுள்ள அனைத்துக் கட்சித் தோழர்களுடன் சார்_ஆட்சியருக்கு புகார் அளிக்க முடிவெடுக்கப்பட்டது.

அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு:

திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில், மாவட்ட தி.க. தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட தி.க.செயலர் அன்பு.சித்தார்த்தன், பாட்டாளி மக்கள் கட்சி மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான வி.எம்.எஸ்.சந்திர பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நகர செயலாளர் ஆர்.இராமச்சந்திரன் ஆகியோர் சுமார் 25 தோழர்களுடன் 08.05.2017 திங்களன்று, சிதம்பரம் சார் ஆட்சிரைச் சந்தித்து, சான்றுகளுடன் புகார் மனு அளித்தனர்.

சிதம்பரம் சார்_ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியாகத் தெரிவித்தார். அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையெனில், தமிழர் தலைவர் ஆசிரியரின் ஒப்புதல் பெற்று, மற்ற கட்சியினரையும் சேர்த்துக்கொண்டு, பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்-பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையைச் சார்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை தீவிரமாக இருக்கும்!

– பேராசிரியர் பூ.சி. இளங்கோவன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *