‘ஹம்பி நகரம்’ கிருஷ்ணதேவராயருடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி.1509 _ 1529) செல்வச் செழிப்பில் மிந்தது. அவருடைய ஆட்சியில் ராணுவம் பலம் வாய்ந்ததாக இருந்தது.
கி.பி.1522ஆம் ஆண்டு, விஜயநகரத்திற்கு விஜயம் செய்த போர்ச்சுக்கல் நாட்டுப்பயணி டொமின்கோ பேயஸ் இதனைப் பதிவு செய்திருக்கிறார். கிருஷ்ணதேவராயர் படையில் ஒன்றரை லட்சம் படை வீரர்கள் இருந்ததாகக் கூறுகிறார்.
இதே, ஹம்பி நகரில், கிருஷ்ணதேவரா-யருடைய ஆட்சிக் காலத்தில் அரசவையில் நடந்த ஒரு ஆய்வு வேடிக்கையானது; சிந்தனைக்குரியது. மன்னர் கிருஷ்ணதேவராயர் மக்களின் பழக்கவழக்கங் களையும், நம்பிக்கைகளையும் கூர்ந்து கவனித்தார். மக்களின் செயல்பாடுகளைப்பற்றி பிரதம மந்திரியான அப்பாஜியிடம் விமர்சனம் செய்தார். மக்கள் சுயமாக சிந்தனை செய்யாது, வழிவழியாக வந்த மத, சமூக பழக்க வழக்கங்களையே கடைபிடிக்கிறார்கள். அவை மூடத்தனமாக இருந்தாலும், அறிவுக்குப் பொருத்தமற்றதாக இருந்தாலும் அவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார்கள். இதை விமர்சனம் செய்யும் தொன்மையான மூதுரையை மன்னர் நினைவுபடுத்தினார். பழக்க வழக்கங்கள் கேலிக்குரியனவா? அல்லது மக்கள் கேலிக்குரியவர்களா? என்ற கேள்வியை மன்னர் அமைச்சரிடம் கேட்டார். இச்சொற்றொடர் உணர்த்தும் மெய்ப்பொருளைத் தனக்கு விளக்க முடியுமா என்று மந்திரியிடம் கேட்டார். மன்னரின் கேள்விக்கு பதிலையும், மன்னரின் சந்தேகத்தையும் சில தினங்களுக்குள் தீர்த்து வைப்பதாக மந்திரி அப்பாஜி சொன்னார்.
மந்திரி அப்பாஜி வீட்டுக்குச் சென்று மன்னர் எழுப்பிய கேள்வியையும், சந்தேகத்தையும் எவ்வாறு தீர்ப்பது என்று தீவிரமாகச் சிந்தித்தார். ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தார். தன்னுடைய ஆடுகளை மலையடிவாரத்தில் மேய்க்கும் குருபா என்பவனை அழைத்து வரச்செய்தார்.
அவனைத் தனியிடத்திற்கு அழைத்தச் சென்று, அவனிடம் தான் சொல்லியவாறு சில நாள்கள் செயல்பட வேண்டுமென்று கட்டளை இட்டார். அவன் சந்நியாசி(காவி) உடை அணிய வேண்டும். உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக்கொள்ள வேண்டும். அருகில் ஏழு கணுக்கள் கொண்ட மூங்கில் குச்சியையும், தண்ணீர் குடுவையையும் வைத்துக்கொள்ள வேண்டும்.
மலையடிவாரத்திலுள்ள குகையில் மான்தோலை விரித்து, அதன்மீது சம்மணமிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும். ஒரு கையால் மூக்கைப் பற்றிக் கொள்ள வேண்டும். மற்றொரு கையைத் தலையில் வைத்து தியானம் செய்வது போல் உட்கார்ந்திருக்க வேண்டும். அசையக் கூடாது. எவரிடமும் பேசக் கூடாது. எவர் கேள்விக்கும் பதில் சொல்லக்கூடாது.
எவர் வந்தாலும், மன்னர் வந்தாலும், தானே நேரில் வந்தாலும், எத்தனை மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்தாலும் ஆடாமல், அசையாமல் ஒரே நிலையில் தரையை நோக்கி பாறை போல் உட்கார்ந்திருக்க வேண்டும். உடலிலுள்ள மயிரைப் பிடுங்கினாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும். கோபப்படக் கூடாது. தன்னையும் யாரென்று காட்டிக்கொள்ளக் கூடாது.
இக்கட்டளைப்படி சரியாக நடந்தால், மதிப்புமிக்க பரிசு அளிப்பதாக வாக்களித்தார்.
அடுத்தநாள் அவர் சொன்னபடி சந்நியாசி உடையணிந்து, சாம்பலைப் பூசிக்கொண்டு குகையில் மான்தோல் விரித்து, அதில் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கச் சம்மதித்தான்.
மறுநாள் காலை மந்திரி அரண்மனைக்குச் சென்றார். மேலோகத்திலுள்ள விஷ்ணுவின் உறைவிடத்திலிருந்து செய்த பாவச் செயல்களுக்காக வருந்தும் ஒருவர் பூலோகத்திற்கு இறங்கி வந்து ஹம்பியின் மலையடி-வாரத்திலுள்ள குகையில் தங்கியிருக்கிறார்;
தேவலோகத்திலிருந்து விஜயம் செய்துள்ள அவர் எந்நேரமும் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார். அவர் உணவு உண்பதில்லை. காற்றை மட்டும் சுவாசித்து ஜீவிக்கிறார். அய்ந்து உணர்வுகளும் இன்றி இருக்கிறார். உடல் மட்டும் இவ்வுலகில் இருக்கிறது. அவருடைய ஆன்மா, சிந்தனை, உணர்வு போன்ற அனைத்தும் மேலுகத்திலுள்ள தெய்வீக சக்திகளுடன் இணைந்திருக்கின்றன. இத்தெய்வீக மனிதன் இங்கு வருகை தந்தது ‘கடவுள்கள்’ மன்னர் மீதும், இந்த ராஜ்யத்தின் மீதும் கொண்ட நல்லெண்ணத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்துகிறது என்றார்.
பிரதம மந்திரி அப்பாஜி சொன்னவற்றை மன்னரும், அரசவை உறுப்பினர்களும் மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டார்கள். தேவலோகத்திலிருந்து வந்திருப்பவரைப் பார்க்க மன்னர் விரும்பினார். அம்மாமனிதரை உரிய மரியாதையுடன் பார்த்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினார்.
மன்னர் தலைமையில் பெருந்திரளாக மக்கள் தாரைதப்பட்டைகள் மற்றும் பல்வேறு வாத்தியங்கள் முழங்க ஆர்ப்பாட்டமாக மலையடிவாரத்திலுள்ள குகைக்குச் சென்றனர். மன்னர் முதலில் குகைக்குள் சென்றார். சந்நியாசி உடையில் இருப்பவரைப் பார்த்து பரவசமடைந்தார். அவர் அருகே மிகுந்த அச்சத்துடன் நடுங்கிக் கொண்டே சென்றார். கையெடுத்துக் கும்பிட்டார். சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கினார்.
எழுந்து நின்று, பவ்யமாக அவரை வானளாவப் புகழ்ந்தார். அவர் இங்கு விஜயம் செய்தது தன்னுடைய முன்னோர்கள் செய்த புண்ணியம் என்றார். அவர் எந்த சலனத்தையும் காட்டவில்லை. அமைதி நிலவியது. புறப்படுவதற்குத் தயாரான மன்னரிடம் அப்பாஜி பணிவுடன், “இம்மாமனிதரிடமிருந்து ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியை அளிக்கவல்ல சிறு பரிசுப் பொருளைப் பெற்றுச் செல்வது பொருத்தமாக இருக்கும்; மயிரைக்கூட உயர்ந்த பரிசுப் பொருளாகக் கொள்ளலாம்’’ என்றார்.
அப்பாஜியின் யோசனைப்படி, மன்னர் மிக்க கவனத்துடனும், மரியாதையுடனும் அவர் மார்பிலிருந்து ஒரு மயிரைப் பிடுங்கிக் கொண்டார். மயிரை முத்தமிட்டார். இவ்வரிய பொக்கிஷத்தை தன் கழுத்தில் தொங்க-விட்டிருக்கும் தங்க டாலரில் எப்போதும் வைத்திருப்பேன் என்ற பிரகடனம் செய்தார்.
மன்னரைத் தொடர்ந்து அனைவரும் வரிசையில் நின்று அவரது மயிரை மிகுந்த மரியாதையுடன் பிடுங்கினார்கள். சிலர் மயிரைக் கொத்தாகவும் பிடுங்கினார்கள். சில மணி நேரத்தில் அவன் உடலில் மயிரே இல்லை. அரண்மனைக்குத் திரும்பிய மன்னர் ராணிகளிடம் விஷயத்தைச் சொன்னார். அவனிடமிருந்து பிடுங்கிய மயிரை மிகுந்த மரியாதையோடு காண்பித்தார். அப்புனித மயிரை ராணிகளும், மற்றோரும் முத்தமிட்டார்கள், கும்பிட்டார்கள்.
மறுநாள் அப்பிரசித்தி பெற்ற பிரமுகரை தாங்களும் பார்க்க விரும்புவதாக அந்தப்புர பெண்கள் அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். அவர்களது விருப்பத்திற்கிணங்க அரசவை அங்கத்தினர்களையும், தளபதிகளையும் அனுப்பி தேவலோகவாசியை மிகுந்த மரியாதையுடன் அரண்மனைக்கு பல்லக்கில் அழைத்து வரச் செய்தார்.
அரண்மனையிலுள்ள மிக அலங்காரமான அறையில் தங்க வைத்தார். ராணிகளும், இளவரசிகளும் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கினர். அவரை மிகுந்த ஆச்சரியத்துடனும், பக்தியுடனும், பயத்துடனும் பார்த்தார்கள். அவர்களும் அவரின் நினைவாக மயிரைப் பெற விரும்பினர். அவன் உடல் முழுவதையும் மயிருக்காக தடவிப் பார்த்தனர். அவன் உடலில் மயிரே இல்லை. சிரத்தையுடன் தேடி, அவன் உடலில் ஒட்டியிருந்த சில மயிர்களைக் கண்டு, அவற்றை கிடைத்தற்கரிய பொக்கிஷமாகக் கருதி எடுத்துக் கொண்டனர்.
அதைப் பக்தி உணர்வோடு கும்பிட்டனர். அரண்மனைப் பெண்கள் அனைவரும் தேவலோகவாசியைப் பார்த்து முடித்த பின்னர் தேவலோகவாசி தனியாக அறையில் ஓய்வெடுக்கட்டும் என்று எண்ணி, அனைவரும் உறங்கச் சென்றுவிட்டனர்.
குருபா இரண்டு நாட்கள் ஒன்றும் சாப்பிடாததால், பசியால் வாடினான். தனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருந்தான். அந்த அறைக்குள் அப்பாஜி மெதுவாக தனியாக நுழைந்தார். குருபாவைத் தட்டிக் கொடுத்தார். இரண்டு நாட்கள், தான் சொன்னபடி சரியாக நடந்தமைக்கு மனதாரப் பாராட்டினார்.
சந்நியாசி உடையை கழற்றிவிட்டு, சாதா உடையை அணியச் சொன்னார். அரண்மனையிலிருந்து ரகசியமாக வெளியேறச் செய்தார். செய்த வேலைக்கு சிறப்பான அன்பளிப்பு அளிப்பதாக வாக்களித்தார். உணவருந்தி ஓய்வு எடுத்துவிட்டு மறுநாள், ஆடு மேய்க்கச் சென்று விடுமாறும் கேட்டுக் கொண்டார்.
மறுநாள் காலை அரசரும், மற்றோரும் அறையில் தேவலோகவாசி இல்லாததைக் கண்டனர். ஆச்சரியப்பட்டனர். தேவலோகவாசி தேவலோகத்திற்கே திரும்பிச் சென்றிருப்பார் என்று நினைத்துக் கொண்டார்கள். மன்னரும், அரண்மனைவாசிகள் அனைவரும் அப்படித்தான் நினைத்தார்கள். நகரெங்கும் இந்த அற்புத நிகழ்ச்சியைப் பற்றியே பேசினார்கள். அவருடைய சாம்ராஜ்யம் முழுவதும் மக்கள் இதைப் பற்றியே பேசினார்கள்.
சில நாட்கள் கழித்து கிருஷ்ணதேவராயர் அரசவையில் மீண்டும் அதே கேள்வியை அமைச்சர் அப்பாஜியிடம் கேட்டார். பழக்க வழக்கங்கள் கேலிக்குரியவைகளா? அல்லது மக்கள் கேலிக்குரியவர்களா? என்று கேட்டார்.
இச்சந்தர்ப்பத்தைத்தான் அப்பாஜி எதிர்-பார்த்துக் கொண்டிருந்தார். மன்னரின் சந்தேகத்தை உடன் தீர்ப்பதாகச் சொன்னார். தன்னை மன்னர் தண்டிக்க மாட்டேன் என்று உறுதியளித்தால் சந்தேகத்தைத் தீர்ப்பதாகச் சொன்னார். மன்னரும் தண்டிக்கமாட்டேன் என்று உறுதியளித்தார்.
அவ்வுறுதியை வாங்கிக் கொண்டு அப்பாஜி பேசினார். மன்னர் மலையடிவாரத்திலுள்ள குகைக்கு தேவலோக-வாசியை பார்க்கச் சென்றதே இக்கேள்விக்குப் பதிலாகவும் சான்றாகவும் அமைகிறது என்றார். உண்மையைச் சொன்னார். தேவலோகவாசி என்று நீங்கள் நம்பியவர் என்னுடைய ஆடுகளை மலையடிவாரத்தில் மேய்ப்பவன் என்றார். அவன் மதியற்றவன், அருவருப்-பானவன் என்றார்.
என்னுடைய வார்த்தை-களைக் கேட்டு, அவற்றை அப்படியே நம்பி அவனுக்கு ராஜமரியாதை செய்தீர்கள். அவனை கடவுளின் பிரதிநிதியாகவே கருதினீர்கள். நான் சொன்ன செய்தியை சந்தேகப்படவுமில்லை.
அறிவுபூர்வமாக சிந்தித்துப் பார்க்கவுமில்லை. உங்களைப் பின்பற்றி லட்சக்கணக்கான மக்களும் ஆடு மேய்ப்பவனை தேவலோகவாசி-யாகவும், கடவுளின் பிரதிநிதியாகவும் கருதினார்கள். நீங்கள் செய்த செயல்பாடுகளே மக்கள் எதையும் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்காமல் செயல்படுகிறார்கள் என்பதற்கு சரியான அத்தாட்சி என்றார். நீங்களே மூடப் பழக்கவழக்கங்கள் கேலிக்குரியனவா அல்லது மக்கள் கேலிக்குரியவர்களா என்ற கேள்விக்கு விடை சொல்லிவிட்டீர்கள் என்றார்.
மக்கள்-தான் கேலிக்குரியவர்கள் என்பதை நிரூபித்து-விட்டீர்கள் என்றார். அப்பாஜியின்மீது கோபப்படாமல் உண்மையை விளக்கியதற்குப் பாராட்டினார்.
‘பக்தி வந்தால் புத்தி போய்விடும்’ என்ற தந்தை பெரியார் கூறியது முற்றிலும் சரியென்று இது உறுதி செய்கிறதல்லவா?
இந்நிகழ்வை, பிரெஞ்சு நாட்டுக் கிறிஸ்துவ மத பிரசாரகராக தமிழகத்தில், தென்-இந்தியாவில் வாழ்ந்த அபு துபே (1765_1848) “இந்துக்களின் பழக்கவழக்கங்கள்’’ (Hindu manners, customs and ceremonies-page 466 to 473) என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
– ந. ஆனந்தம்