உலகிற்குச் சோறிடும் விவசாயிகள் தற்கொலை! பா.ஜ.க. அரசின் பாராமுகம்!

ஜூன் 01-15

பத்து லட்சம் ரூபாயில் சூட்டும் கோட்டும் அணிந்து ஆண்டு முழுவதும் அயல்நாடு-களிலேயே பவனிவரும் இந்தியப் பிரதமர் மோடியின் ஆட்சியில் 2015ஆம் ஆண்டில் மட்டும் 12,602 விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்னும் கொடுமையான செய்தி எந்தக் கல்நெஞ்சினையும் கரைத்து விடுமன்றோ!

இது 2015இல் மட்டுமே நிகழ்ந்ததல்ல. 2014லும் இதே அளவு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆக இந்த அரசு பொறுப்பேற்றது முதல் 2014, 2015ஆம் ஆண்டுகளில் மொத்தம் 25,000 விவசாயிகள் (அதாவது ரு லட்சம்) தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது, இவர்கள் இரண்டாண்டுக்கால சாதனைகளை மக்களிடையே விளக்குவதற்கு, வெளிச்சமிடு-வதற்கு மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் இதையும் இவர்களின் சரித்திரம் படைக்கும் சாதனைகளில் ஒன்றாக இந்திய விவசாயி ஏற்றுக் கொள்வானா?

அண்மையில் தமிழக விவசாயிகள் 40 நாள்களுக்கு மேல் டெல்லி ஜந்தர்மந்திர் பகுதியில் இந்த அரசின் கவனத்தை விவசாயிகளின் பிரச்சினைகளின்பால் ஈர்ப்பதற்காக மேற்கொண்ட போராட்டத்தின்-போது இந்த ஆட்சியாளர்கள் நடந்துகொண்ட முறையையும், பிரதமர் அவர்களைச் சந்திக்க மறுத்ததையும், தமிழக பி.ஜே.பி. தலைவர்களும் அத்தி பூத்ததென அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ள தமிழக பி.ஜே.பி.

அமைச்சர் இராதாகிருஷ்ணன் வெளியாட்டக் கருத்துகளும் இவர்கள் விவசாயிகளின் மீது கொண்டுள்ள பரிவுக்கும், பரிகாரம் காணத் துடிக்கும் பரோபகாரச் செயல்களுக்கும் உதாரணங்களாகக் கொள்ளலாமா?

இத்தற்கொலைகள் குறித்து ஒரு சேவை நிறுவனம் ‘குடிமக்கள் பொருண்மையும் நடவடிக்கை முனைப்பும்’ ( (Citizen Resources and Action Initiative) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தலைமை நீதிபதி எஸ்.கேஹர் மற்றும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சஞ்சய் கிஷன் ஆகியோர் இந்த நேரத்தில் இதில் நாங்கள் தலையிடுவது சிரமம், முற்றிலும் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தில்தான் விளைபொருள்கள்களுக்கான விலை நிர்ணயமும், பயிர் பாதுகாப்புக்கான (Crop Insurance) காப்பீடு ஆகியவையும் உள்ளன என்றனர்.

மத்திய அரசு நீதிமன்றத்தில் நாங்கள் நிதி அயோக்கிடம் இதற்கான நிவாரணம் குறித்து பரிசீலிக்கக் கேட்டுள்ளோம் என்றபோது நீதியரசர்கள் எதை எதைத்தான் நிதி அயோக்கிடம் ஒப்படைப்பீர்கள்? அவர்கள் எப்படி அனைத்தையும் செய்வார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார்கள்.

கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மன் அவர்கள் அரசு 2022ஆம் ஆண்டு வாக்கில் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக்க இலக்கு நிர்ணயித்துள்ளது என்று கூறியுள்ளார். அப்படியானால் அதுவரையில் இந்தத் தற்கொலைகள் தொடரும் என்கிறாரா?

வழக்கு தொடுத்த சேவை நிறுவனத்தின் வழக்குரைஞர், ‘கோலின் கான் சால்வே’ அவர்கள் அரசாங்கத்தால் மிக உன்னதமாகப் பேசப்பட்ட ‘பிரதமர் பாசல் பீமா யோஜனா’ ((PM Fasal Bhima Jojana)  என்கிற காப்பீட்டுத் திட்டம் 20% விவசாயிகளைக்கூடச் சென்றடைய-வில்லை. ஆனால் அரசாங்கம் அதற்காக தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஒதுக்கித் தந்துள்ளது. அந்தப் பணம் அக்காப்பீட்டு நிறுவனங்களிலேயே தங்கியுள்ளது என்று கூறினார்.

ஆக மொத்தத்தில் அரசின் அலட்சியத்தால் விவசாயிகளின் தற்கொலைகள் அனுதினமும் தொடர் நிகழ்வுகளாகின்றன என்பதே நிதர்சனம். இத்தற்கொலைகளில் மகாராஷ்டிர மாநிலம் 4291, கர்நாடகா 1569, தெலுங்கானா 1400, மத்தியப் பிரதேசம் 1290, சட்டீஸ்கர் 954, ஆந்திரப் பிரதேசம் 916, தமிழ்நாடு 606 என்கிற அளவில் நிகழ்ந்துள்ளன. ஆக மொத்த தற்கொலைகளில் இந்த ஏழு மாநிலங்களில் மட்டும் 87.5% ஆகும்.

இவ்வளவு தற்கொலைகள் நடந்தும் இந்த மாநில அரசுகள் இவைகளைத் தடுக்க எந்தவித அவசர அவசிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையே என்பதை எண்ணுகின்றபோது உயிர்வாழ, உணவளிக்கும் உன்னதப் பணியில் உளமுவந்து உழைக்கின்ற உழவனை உச்சகட்ட உளைச்சலுக்கு உள்ளாக்குவது–, உழவைப் பாவத்தொழிலாக எண்ணும் சனாதன ஆட்சியின் விளைவாகும்!

– கெ.நா.சாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *