இந்தியாவில் முதன்முதலாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை பூனேவில் உள்ள கேலக்சி கேர் லாப்ராஸ்கோபிக் இன்ஸ்டிடுயுட்டில் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை சோலாப்பூரைச் சேர்ந்த 21 வயது பெண்மணிக்குச் செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்படாமையால் இதைச் செய்வதற்கு அரசின் அனுமதி பெற வேண்டியிருந்தது.
மகாராஷ்டிர மாநில சுகாதார இயக்ககம் இதற்கான அனுமதியை மிகுந்த காலதாமத்திற்குப் பின் 17.5.2017இல்தான் வழங்கியது. உடனே 18.5.2017இல் மருத்துவர்கள் இதைச் செய்துள்ளனர். இதைச் செய்வதற்குமுன் அப்பெண்ணின் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்த ஓவரியிலிருந்து 8 கருமுட்டைகளை எடுத்துக் குளிர்பதனம் செய்து வைத்துள்ளனர்.
அறுவை சிகிச்சை முழுமையாக வெற்றிபெற்று அப்பெண்ணின் உடல், புதிதாகப் பொருத்தப்பட்ட கருப்பையை எப்பிரச்சினையும் இன்றி ஏற்றுக் கொள்ளுமானால் 8 மாதங்களுக்குப் பின் இக்கருமுட்டைகள் அக்கருப்பையில் வைக்கப்படும்.
பிறகு இயல்பான கருத்தரித்தலுக்கு வாய்ப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மருத்துவ அறிவியலில் ஒரு சாதனை மைல்கல்தானே. இனி கருப்பை ஏதேனும் காரணத்தால் பழுதுபட்டுவிட்ட பெண்கள் கூட கருப்பைதானம் செய்ய முன் வரக்கூடிய பெண்கள் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வழிபேற்பட்டுள்ளது.
இது பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சிச் செய்திதானே. வெல்க மருத்துவ அறிவியல் முயற்சிகள்!