”இந்துமதம் இருக்கும்வரை இந்நாட்டில் கம்யூனிசம் வராது!”

ஜூன் 01-15

08.11.1980 அன்று, தமிழகத்தின் அனைத்து பகுத்தறிவாளர் கழகங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது. எல்லா மாவட்டங்களிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வந்திருந்தனர். கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அனை-வரையும் வரவேற்றுப் பேசினார்.

நான் தலைமை உரையில், “அறியாமை நிறைந்த நம் மக்களிடையே சமுதாயப் பணி செய்வது என்பதுதான் மிகவும் கடினமான காரியம் ஆகும். நாம் எத்தனையோ சோதனைகளை ஏற்றாக வேண்டும். குறிப்பாக அரசு அலுவலர்களுக்கு ஆயிரம் சோதனைகள் வரும், அதை ஏற்றுக் கொண்டுதான் நாம் பணியாற்ற வேண்டும்.

உதாரணமாக திண்டிவனம் தோழர் சம்மந்தம் அவர்கள் நம்முடைய கூட்டம் ஏற்பாடு செய்த காரணத்தினாலேயே திண்டிவனத்திலே இருந்து கன்னியாகுமரிக்கு மாற்றப்பட்டார். அதுபோல எத்தனையோ தோழர்கள் நம்மிலே உண்டு.

அநியாயத்தைப் பார்த்துவிட்டு அமைதியாக இருந்தால் எப்படி நீதியை நிலைநாட்ட முடியும்? எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்! அநீதி அழிக்கப்படுகின்ற வரை எதிர்க்குரல் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்-கள் என்பனபோன்ற செய்திகளை எடுத்துக் கூறினேன்.

16.11.1980 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள “கலைஞர் கருணாநிதி’’ சிலையை அகற்றுவோம், எடுப்போம்’’ என்று ஆளும் அ.இ.அ.தி.மு.க.வினர் பேசியதைக் கண்டித்து ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டேன். அதில், “1975ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கலைஞர் அவர்களது சிலை, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்டு, அவர்கள் ஆணைப்படி, விருப்பப்படி, அன்னை மணியம்மையார் அவர்களின் தலைமையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால், திராவிடர் கழகம் ஏற்பாட்டின்படி திறந்து வைக்கப்பட்டச் சிலையாகும்.

அச்சிலை நிறுவுவதைத் தடுக்க அ.இ.அ.தி.மு.கவினர் வழக்குப் போட்டு உயர்நீதி மன்றம் சென்றனர். சிலை வைப்பதைத் தடுக்கச் செய்த முயற்சிகள் நிறைவேறவில்லை. பிறகு வழக்கு விசாரணையாலும் அவர்கள் வெற்றி பெற இயலாத நிலையில் கலைஞர் சிலையை அகற்றுவோம்; எடுப்போம் என்றெல்லாம் மீண்டும் மீண்டும் பேசுவது ஆளும் பொறுப்பில் உள்ள கட்சியினருக்கு அழகல்ல என்பது மாத்திரம் அல்ல, தமிழ் மக்களது ஆத்திரத்தையும் எரிச்சலையும் சம்பாதித்துக் கொள்ளும் வேலையற்ற வேலையாகும்.

பதவி நிரந்தரமானதல்ல; பண்பாடுதான் நிரந்தரம் ஆகும். அரசியல் மனித தன்மைக்கு அப்பாற்பட்டது. கலைஞர் சிலை பற்றிப் பேசினால் திராவிடர் கழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதை தந்தை பெரியார் வழிவந்த உண்மைத் தோழர்கள், தொண்டர்கள் சார்பாக ஆளுங்கட்சி நண்பர்களுக்கு, சகோதரர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டேன்.

வேலூர் (வ.ஆ.) கோட்டை திடலில் 04.11.1980 நடைபெற்ற கழக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கத்தையும் வகுப்புவாரி உரிமையின் அவசியத்தையும் விளக்கிப் பேசினேன். அதில், இந்தச் சமுதாயத்திற்கு தந்தை பெரியாரின் தொண்டு கிடைத்ததுபோல வேறு நாட்டிற்குக் கிடைத்திருக்குமேயானால், “மண் கூட மனிதனாகியிருக்கும்’’. ஆனால் நாம் இன்னும் மண்ணாகவே இருக்கின்றோமே!

பார்ப்பனரின் எலும்புத் துண்டிற்காக ஆழ்வார்கள், நாயன்மார்களுக்காக நம்மைக் காட்டிக் கொடுக்கும் விபீடணர்களாக மாறுகின்ற பார்ப்பனர் தாசர்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடுகின்றோம். அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த வகுப்புரிமை கேட்கிறோம்’’ என்று குறிப்பிட்டேன்.

01.10.1980 அன்று கோவையில் வழிநடைப் படை வீரர் பாராட்டு விழா கோவை, காந்தி பார்க்கில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு 35 பேருக்கு பாராட்டிதழ் வழங்கி, “பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு’’ மாநாட்டு விளக்கப் பிரச்சாரப் படை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினேன்.

வகுப்புரிமையைக்  கழகம் வலியுறுத்துவதற்கான காரணங்களை விளக்கிப் பேசினேன். 9.11.1980 திண்டுக்கலில் நடைபெற்ற தந்தை பெரியார் 102ஆம் ஆண்டு விழாவும், வகுப்புரிமை பாதுகாப்பு விளக்கப் பொதுக்-கூட்டமும் நடந்தது. அதில் கலந்துகொண்டேன். அப்போது தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள், “பார்ப்பானுக்கு எப்பொழுதும் முன்புத்தி கிடையாது’’ என்று பார்ப்பனர்-களிலேயே மிகப் பெரிய பார்ப்பனர், அவர்களின் இணையற்ற தலைவர் தலையிலிருந்து கால்வரை மூளை உள்ளவர் என்று சொல்லப்படுகின்ற ராஜகோபாலாச்சாரி, அவரையே எடுத்துக் கொள்ளுங்கள்.

அவர் செய்த காரியங்கள் பார்ப்பானருக்கு நல்லதாக முடிந்ததா? அவர் இந்த நாட்டில் இந்தியைப் புகுத்தினார். பின்னர் அவரே தவறு என இந்தி எதிர்ப்பிற்கும் தலைமை தாங்கினார் என்பதைப் பார்க்கின்றோம். 1952இல் குலக்கல்வியைக் கொண்டு வந்தார். இன்றைக்கு சிருங்கேரி சங்கராச்சாரி சொல்வதுபோல் வம்ச பரம்பரைத் தொழிலைக் கற்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்து அதைச் செயல்படுத்தினார்.

அவர் செயல் மக்களிடையே வெறுப்புணர்ச்சியை உண்டாக்கியது. இத்திட்டம் சரியல்ல எனப் பெரியார் சொன்னார். காமராசர் எடுத்துச் சொன்னார்.

100க்-கு 7 பேர்கூட இன்னும் படிக்கவில்லை என்ற நிலையில் பள்ளிக் கூடங்களை இராஜாஜி மூடினார். 6000 பள்ளிகளை மூடினார். காமராஜர் வந்தார், அவர் மூடிய பள்ளிகளை இவர் திறந்தார். திருப்பம்.

இந்த நாட்டில் கல்விக் கூடங்களைத் திறந்தவர் தந்தை பெரியார் என ஆனந்த விகடன் தலையங்கம் எழுதியது.

அடுத்த வாரத்தில் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில், கல்விக் கூடங்களைத் திறந்தது காமராசர் அல்லவா? பெரியார் என எழுதி இருக்கிறீர்களே, எனக் கேட்டு ஒரு கடிதம் ஆனந்த விகடனுக்கு வந்தது. அதைப் போட்டு, விகடன் ஆசிரியர் வாசன் கீழே குறிப்பு எழுதினார். “காரணம் பெரியார்; காரியம் காமராசர்’’ என்று, ராஜாஜி மனம் நொந்து வேதனையுடன், “கறுப்புக் காக்காய், அதைக் கல்லால் அடியுங்கள்’’ என்று பேசினார்.

ஆரியம் எப்போதும் தன் சூழ்ச்சியால் மற்றவரை வீழ்த்தியது. அண்ணா அந்த ஆரியத்தை வென்றார்’’ என்று முக்கிய வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறினேன்.

குடந்தையில் 7.11.1980 அன்று நடைபெற்ற ‘வகுப்புரிமைப் பாதுகாப்பு’ கூட்டத்தில் கலந்து-கொண்டேன். அப்போது, பார்ப்பனர்களின் கண்ணோட்டம் எல்லாம் அவர்கள் படிப்பதைவிட நாம் படிக்கக் கூடாது என்பதுதான்! இதை ஆதாரத்தோடு சொல்கிறேன்.

பார்ப்பான் சமுதாயத்து இன உணர்ச்சி இருக்கிறதே அதுதான் மிக முக்கியமானது. தங்களது சமுதாயத்திற்கு லாபம் என்றால் என்னுடைய கவுரவத்தையும் இழப்பதற்கு தயாராய் இருப்பேன் என்ற இன உணர்ச்சியோடு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வந்த ஒரு வழக்கு பற்றி குறிப்பிட்டுக் காட்டுவதுதான் சரியாக இருக்கும் என்பதால் இங்கே குறிப்பிடுகிறேன்.

கம்யூனல் ஜி.ஓ.விற்கு எதிராக ஒரு பார்ப்பன அம்மையாரை விட்டு வழக்குப் போட வைத்துள்ளனர். அந்த அம்மையார் வழக்குப் போட வேண்டுமென்றால் முதலில்மனு போட்டிருக்க வேண்டும். மனுவே போடவில்லை. வைத்தியக் கல்லூரிக்கு மனு போட்டேன் என்று பொய் சொல்லி இந்த வழக்குப் போட்டார்.

அரசியல் சட்டக் குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே பொய் சொன்ன அம்மையாருக்காக வாதாடினார். நம்ம ஆட்கள் எல்லாம் பெரிய நிலைக்குப் போய்விட்டால் அய்க்கோர்ட்டுக்கு எல்லாம் நான் வரமாட்டேன் என்றுதான் சொல்லுவார்கள்.

ஆனால், பார்ப்பனர்கள் தங்களது சமுதாயத்துக்கு லாபம் என்றால் என்னுடைய கவுரவத்தையும் இழப்பதற்குத் தயாராய் இருப்பேன் என்ற இனஉணர்ச்சியோடு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தார் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். பார்ப்பனரின் இணவுணர்வு நமக்கு வேண்டாமா? என்று கேட்டுப் பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினேன்.

22.11.1980இல் கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன். வேதகாலம் முதல் இந்தக் காலம் வரை நடந்துவரும் பார்ப்பனர்களின் சூழ்ச்சிப் போக்குகள் குறித்து விரிவான உரையை ஆற்றினேன்.

24.11.1980 அன்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டின் தலையங்கத்தில் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு 50 சதவீதத்தினையும் தாண்டலாம் என்று நீதிபதிகள் ஜஸ்டிஸ் திரு.வி.ஆர்.கிருஷ்ண அய்யர், ஜஸ்டிஸ் திரு.ஆர்.எஸ்.பதக், ஜஸ்டிஸ் திரு.அய்.சின்னப்ப ரெட்டி ஆகியோர் அடங்கிய குழு தீர்ப்பு வழங்கியது. இதனை வரவேற்று நான் 24.11.1980 அன்றே, “பார்ப்பனர் ஆசையில் மண்போட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!’’ என்று தலைப்பிட்டு விரிவான அறிக்கை வெளியிட்டேன்.

அதில், அ.இ.அ.தி.மு.க. அரசின் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தந்தார் என்றவுடன் துள்ளிக்குதித்து, பணத்தை அள்ளி இறைத்து, உயர்நீதிமன்றத்துக்கும் உச்சநீதி மன்றத்துக்கும் சென்று அங்கே, “களம் அமைத்த’’ வீராதிவீரர்கள், சூராதி சூரர்களுக்கெல்லாம், சுப்ரீம் கோர்ட்டின் இத்தீர்ப்பு.

“எக்ஸ்பிரஸ்’ ஏட்டின் தலையங்கத்தில்,

““The Present practice is to reserve 15 percent jobs for the Scheduled Caste and 7.5 percent for the Scheduled Tribes. Aprt from this, the states have their own quotas ranging from 15 to 40 percent for various Backward Castes. The Supreme Court has now ruled that the over all reservation quota can exceed the 50 percent limit stipulated in tow of this previous decision.” 

அதாவது, தற்போது அமுலில் உள்ள முறைப்படி, தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதமும், மலைவாழ் மக்களுக்கு 7.5 சதவீதமும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவன்றி, மாநில அரசுகள் 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை பல்வேறு பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு செய்துள்ளன.

தற்பொழுது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில், அதற்கு முன்பு அது அளித்த இரண்டு தீர்ப்புகளின் மூலம் இடஒதுக்கீடு, ஒட்டுமொத்தத்தில் 50 சதவீதம் அளவினைத் தாண்டக் கூடாது என்று இருந்த நிலையை இடஒதுக்கீடு 50 சதவீதம் விழுக்காட்டினையும் தாண்டலாம் என்று தெளிவாகியுள்ளது’’ என்று எழுதியுள்ளது.

50 சதவீதத்தினை எதிர்த்து, ஆர்ப்பரித்தவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டின் இப்புதிய தீர்ப்பு சம்மட்டி அடிகொடுத்து அவர்கள் நம்பிக்கையை சுக்கல் நூறாக உடைத்து எறிந்துவிட்டது.
வகுப்புரிமை என்ற வாய்மைப் போரில் மேலும் இது ஒரு நல்ல திருப்பம்! பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சகோதரர்களே இதை உணர்ந்து நாம் அனைவரும் ஓரணியில் திரள்வோம் என்று அதில் குறிப்பிட்டு இருந்தேன்.

28.11.1980 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 24,000 கிராம அதிகாரிகளின் (‘தமிழ்நாடு அரசு பகுதி நேர கிராம அதிகாரிகளான கிராம முன்சீப்பு, கர்ணம்’ ஆகியோர்) பதவிகளை ஒழித்து ஒரு அவசரச் சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி, இரவோடு இரவாக அவர்களுடைய வீடுகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ஜீப்புகளில் சென்று சம்பந்தப்பட்ட ரிகார்டுகளை பெற்றுக் கொண்டு வந்தனர் என்பதனைக் கேள்விப்பட்டு, “கிராம அதிகாரிகள் பதவி நீக்கமும் தமிழக அரசின் நிலையும்’’ என்ற தலைப்பில் தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் வேண்டுகோள் மற்றும் அறிவுரையை எடுத்துக்கூறினேன்.

வருவாய்த் துறை நிலவரி மற்றும் கிராமங்களில் பல ஆண்டுகள் அனுபவப்பட்ட கிராம அதிகாரிகள் பதவியை மாற்று ஏற்பாடு எதனையும் சரிவர செய்யாத நிலையில் திடீரென ஒழிப்பது, பொதுமக்களுக்குப் பெரும் இடர்ப்பாடாகவே முடியும்.

அவர்கள் மீது காழ்ப்பு, கோபம் இவைகளை முல்வரோ, அரசோ கொள்ளக் கூடாது. இணக்கமாக, மனிதாபிமானத்துடன் பரிசீலிக்க வேண்டும்.

பேச்சு வார்த்தைகள் மூலம் சுமூகமாகவே இதனை அரசு முயன்று இருந்தால் முடித்து இருக்க முடியும்.

கிராம அதிகாரிகளில் தகுதியுள்ளவர்களுக்கு அல்லது அவரது வாரிசுகளில் தகுதியுள்ளவர்களுக்கு அரசு பதவி வழங்க வேண்டும் என்று எடுத்துக் கூறினேன்.

“இடஒதுக்கீடு குறித்துச் சிலரின் பதட்டமும் நமது பதிலும்!’’ என்ற தலைப்பில் கம்யூனல் ஜீ.ஓ.வை எதிர்த்து அன்றும் என்றும் இன்றும் போர்க்கொடி தூக்குபவர்கள் பார்ப்பனர்கள் என்றால், அவர்கள் கொளுத்த விரும்பும் தீயிக்கு நீங்களா விறகாவது? ஊற்றப்படும் நெய்யாவதா? என்ற நமது வேதனையை 2.12.1980, 3.12.1980 ஆகிய இரண்டு நாட்களும் விரிவான முறையில் அறிக்கையை அடிப்படைக் கூற்றுகளுடன் பார்ப்பனரின் கபளீகரத்தை விளக்கியிருந்தேன்.

நீடாமங்கலம் அ.ஆறுமுகம் நினைவுக் கல்வெட்டு திறப்பு விழா 21.11.1980 அன்று நீடாமங்கலம் பெரியார் அரங்கில் நடைபெற்றது. இதில் நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.

கல்வெட்டு, படம் ஆகியவற்றை திரு.பி.எஸ்.ஆர். மாதவராசு அவர்கள் தலைமையில் நான் திறந்து வைத்துப் பேசும்-பொழுது, “இந்த இடத்தில் எத்தனையோ மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நான் இன்றைக்கு  கலங்கிய நெஞ்சத்துடன் நிற்கிறேன். இது பேரிடி மட்டுமல்ல; எதிர்பார்க்காத நிலையும்கூட! எந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டாரோ அதற்கு சர்வபரிதியாகத்திற்குத் தயாராக இருந்த ஒரு லட்சிய வீரரை இன்றைக்கு இழந்திருக்கிறோம்.

எந்தத் தோள்கள் எங்களைத் தாங்கினவோ அதனுடைய கால்களையும் இழந்திருக்கிறோம். அவர்களுடைய துணிவே எதிரிக்கு அச்சம் தரும், அந்தத் தோள்களுக்கு கால்களும் இல்லா நிலையிலே நாம் இன்று இருக்கிறோம்.

அய்யா அவர்கள் திராவிடர் கழகத்தை ஒரு ராணுவ அமைப்பாக வைத்திருந்தார் என்பதற்கு நீடாமங்கலம் அய்யா அ.ஆவன்னா அவர்கள் ஒரு உதாரணம்!

இதே நீடாமங்கலத்திலேதான் அய்யா அவர்கள் பச்சையாகச் சொன்னார், “எனக்கு முட்டாள்கள்தான் தேவை’’ என்று! முட்டாள்கள் என்றால் யாருக்கு? பெரியாருக்குத்-தான் முட்டாள்களே தவிர, வேறு யாருக்கும் இல்லை.

ராணுவத்தில் ஒவ்வொருவரும் சொந்தமாகப் புத்தியைப் பயன்படுத்தினால் அந்த ராணுவத்தினுடைய நிலை என்னவாகும்?

எனவேதான், “அய்யா அவர்கள் என்னிடம் வந்துவிட்டால் நான் சொல்வதை அப்படியே செய்கிற முட்டாள்கள்தான் தேவை’’ என்றார்.  

இன்றைக்கு இங்கு திறக்கப்பட்ட படமும் கல்வெட்டும் பூசை செய்வதற்காக அல்ல; பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகத்-தான், “பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினேன்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மன்னை ப.நாராயணசாமியும், வழக்கறிஞர் சண்முகநாதன், நாவலர் சின்னத்தம்பி, தஞ்சை நாகராசன், தி.மு.க.செயலாளர் கோவிந்தராசன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட கழக முக்கிய தோழர்கள், தோழியர்கள் மற்றும் ஏராளமானப் பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் உள்ளிக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் பக்கிரிசாமி படத்திறப்பு விழாவிலும் 21.11.1980 அன்று கலந்துகொண்டு உரையாற்றினேன்.

இவரது சோடா பாக்டரிதான் மன்னையில் எங்களது தங்குமிடம் கழகக் கூட்டங்களுக்குப் போகும்போது சைக்கிளில்கூட அழைத்துச் செல்வார்! இங்கே அரசியல்வாதி ஆவது என்பது சர்வசுலபம். ஆனால், சுயமரியாதைக் காரனாவது என்பது அவ்வளவு சுலபமல்ல.

சாதாரணமானதல்ல. காரணம் சுயமரியாதை என்பது ஒரு வாழ்க்கை நெறி. அதை ஏற்றுக்கொண்டு வாழ்வது என்பது சாதாரணமானதல்ல; காரணம் வைதீகர்களால் ஒவ்வொரு சுயமரியாதைக்காரனும் கூர்ந்து கவனிக்கப்படுகிறான். பெரியாரின் தொண்டன் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது. வரையறுத்துள்ளது என்று குறிப்பிட்டேன்.

என்னுடன் என்.ஜி.ஓ.க்களின் தலைவர் திரு.சிவ.இளங்கோ, முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமி அவர்களும் பல்வேறு கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள்.

30.11.1980 அன்று மாலை திருச்சியிலுள்ள பெல் தொழிற்சாலை அமைந்துள்ள திருவெறும்பூரில் நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழகத் தொடக்க விழாப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

அப்பொழுது ‘மார்க்சிஸ்ட்’கட்கு சரமாரியான கேள்விக் கணைகள்! தொடுத்து, சர்.சி.பி.இராமசாமி அய்யர் சொன்ன வார்த்தைகளை எடுத்துக் கூறினேன்.

“பொதுவுடைமை இந்த நாட்டில் புகுந்துவிடும்; பூத்துக்குலுங்கி விடும்; என்று என்னுடைய சக நண்பர்களே! முதலாளித்துவ நண்பர்களே! உயர்ஜாதிக்காரர்களே! யாரும் பயப்படாதீர்கள்! ‘இந்து மதம்’ இருக்கின்ற வரையிலே கம்யூனிசம் இந்த நாட்டில் வராது என்று சொன்னார்.

ஏன்? இந்து மதத்தினுடைய தத்துவம் என்ன? என்று கேள்வியை எழுதியிருந்தேன். இதனைத் தொடர்ந்து அன்று காலையில் என்னுடைய தலைமையில் நடந்த மாநில தொழிலாளர் கழகப் பொறுப்பாளர்-களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திராவிடர் தொழிலாளர் கழகத்திற்கு புதிய கொடி வடிவமைப்பு மேற்கொள்ள உத்தி வகுக்கப்-பட்டது.

அதன் அடிப்படையில், “திராவிடர் தொழிலாளர் கழகத்திற்கு கொடியாக, திராவிடர் கழக கொடியிலேயே (DWU (Dravidian Workers Union) எழுத்துகள் பொறிக்கப்படுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

மலேசிய துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ பத்மநாபன் அவர்களுக்குக் கழகத்தின் சார்பில் 05.12.1980 அன்று இரவு அளிக்கப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில் உரையாற்றினேன். அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது கருத்துகளைப் பிரச்சாரம் செய்கிற நம்முடைய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி வருகிற நமது சகோதர இயக்கமான மலேசிய திராவிடர் கழகம் ஒரு கட்டடத்தை கழகத்திற்காக வாங்குவது என முடிவெடுத்தது.

அந்த நேரத்திலே நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்தக் கட்டடத்தை வாங்குவதற்கென ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள்; உதவியாயிருக்கிறார்கள். தந்தை பெரியாருடைய நூற்றாண்டு விழாவினை மலேசியாவிலே கொண்டாடிய போது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு பொறுப்புகள், நிகழ்ச்சிகள் இருந்தாலும்கூட அவைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நம்மோடு பல நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டார்கள் என்று எடுத்துக் கூறினேன்.

அவர் ஒரு தோட்டத் தொழிலாளியின் பிள்ளை. படித்து, உயர்ந்து அமைச்சரானார்.
06.12.1980 அன்று தமிழக முதலமைச்சர் திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களை நோக்கி மணியாச்சி சந்திப்பில் ஒரு கத்தி வீசப்பட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு 07.12.1980 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தேன்.

(நினைவுகள் நீளும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *