கோவை மாநகரில் பொறியியல் மாணவர்கள் சந்தோஷ், விவேக், வினோத், சிவப்பிரகாஷ் போன்றோரின் கூட்டு முயற்சியால் பெட்ரோல், டீசல் வாகனத்துக்கு மாற்றாக மின்சாரக் கார் ஒன்றைத் தயாரித்துள்ளனர். இந்த மின்சாரக் காரை ஒரு கிலோ மீட்டர் தூரம் இயக்க 40 காசு மட்டுமே செலவாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“நானோ காரை முன்மாதிரியாக வைத்து மின்சார வாகனத்தை தயாரிக்க முடிவு செய்தோம். ரூ.28 ஆயிரம் கொடுத்து பழைய நானோ கார் ஒன்றை வாங்கினோம்.
அதன் எடையைக் குறைத்தோம். எஞ்சின், கியர் பாக்ஸ், கிளச் உள்ளிட்டவற்றைக் கழற்றினோம். எங்கள் தேவைக்கு ஏற்ப சிலவற்றைப் பொருத்தினோம். இது வெற்றிபெற்றது. இந்த மின்சாரக் கார் ஒரு கிலோ மீட்டர் பயணித்தால் 40 காசுதான் செலவாகிறது.
ஆனால் பெட்ரோலைக் கொண்டு இந்தக் காரை இயக்கினால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.8.50 செலவாகிறது’’ என்று மாணவர்கள் தெரிவித் துள்ளனர். நானோ காரை, மின்சாரக் காராக மாற்றியமைக்க ரூ.47,000 மட்டுமே செலவாகி யுள்ளது. தேவைப்பட்டால் குளிர்சாதன வசதியையும் இதில் செய்துகொள்ளலாம் என்றும் கூறினர்.