ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வகாஜூதின் அன்சாரி (வயது 24). இவர் கடந்த 2012_ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பிற்காக மராட்டியத்தில் உள்ள 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்-பித்திருந்தார்.
உரிய தகுதி இருந்தும் வகாஜூதின் அன்சாரிக்கு கல்லூரியில் இடம் கிடைக்க-வில்லை. ஆனால் இவரை விடக் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இடம் கிடைத்தது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் முறை கேட்டாலும், மாநில அரசின் அலட்சியத்தாலும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறாமல் போய்விட்டது என வகாஜூதின் அன்சாரி மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சாந்தனு கேம்கர் மற்றும் பிரகாஷ் நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. விசாரணையில், மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் ஈடுபடும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் தான் மாணவிக்கு எம்.பி.பி.எஸ்.
படிப்பிற்கான சீட் கிடைக்கவில்லை என்பது நிரூபணமானது. இதையடுத்து நீதிபதிகள், உரிய தகுதி இருந்தும் சீட் மறுக்கப்பட்ட வகாஜூதின் அன்சாரிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடாக வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் 8 வாரங்களுக்குள் இந்தத் தொகையை மாணவிக்கு வழங்க வேண்டும் என்றும் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.