அறிவையும் ஆற்றலையும் முடக்கக் கூடாது
கற்றவன் என்பவன் கல்லாத சிலருக்குக் கற்பிக்க வேண்டும்; சிந்தனையாளன் என்பவன் பலரைச் சிந்திக்கச் செய்ய வேண்டும்; பேச்சாற்றல் உள்ளவன் மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும்; அறிவாளி என்பவன் மற்றவர்களுக்கு அறிவூட்ட வேண்டும்.
அனாதையாய்ப் பிறந்தவர்கள் ஆயிரம் அனாதைகளை முயன்று காக்கும்போது, கல்லாதவர்கள், மற்றவர்கள் கற்க தன் வாழ்வையே அர்ப்பணிக்கும்போது, ஏழையாய் இருப்பவர்கள் எத்தனையோ பேருக்கு உதவும்போது, வசதி, வாய்ப்பு, அறிவு, படிப்பு உள்ளவர்கள் அதைப் பிறருக்குப் பயன்படுத்தாமல் இருந்தால் அது ஒருவகை மோசடியே! மனிதன் சமுதாய உறுப்பினர். எனவே, சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல் போனால் சமுதாயம் விரைவில் சீரழியும். அது எல்லோருக்கும் கேடுதானே!
இளமையை எண்ணி ஏங்கக் கூடாது
என்னுடைய இளமையில் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தேன்; எப்படியெல்லாம் சுற்றினேன், எவ்வளவு அழகாய், உடற்கட்டோடு இருந்தேன் என்று சிலர் பழையதை எண்ணி ஏக்கமும் கவலையும் கொள்வர். இது அறியாமை. இளமை அப்படித்தான்; முதுமை இப்படித்தான். இயற்கையை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப வாழ்பவனே அறிவு உடையவன். முதுமையிலும் நிறைவோடும், சாதித்தும், நலத்தோடும் வாழ முடியும். அது நம் திட்டமிட்ட வாழ்வின் விளைவு. அது வாழும் கலைத்திறன். எனவே, இயற்கையை ஏற்று வாழவேண்டும்; ஏங்கி வாழக்கூடாது.
நழுவிய வாய்ப்பை நினைத்து இருக்கும் வாய்ப்பை விடக்கூடாது
நழுவிய வாய்ப்புகள், அடைந்த தோல்வி போன்றவற்றையே எண்ணிக் கொண்டு, கிட்டியிருக்கும் வாய்ப்பைப் பற்றிச் சிந்திக்காமல் கெட்டுப் போகின்றவர்களே அதிகம்.
செத்த குழந்தையைத் தோளில் தூக்கிக் கொண்டு, உயிருடன் இருக்கும் குழந்தையை வெள்ளத்தில் விடுவது எவ்வளவு அறிவற்ற செயலோ, பைத்தியக்காரத்தனமோ அப்படிப்பட்டதுதான் இவர்கள் செயலும்.
நடந்தவற்றைப் பாடமாகக் கொண்டு, நடக்க வேண்டியவற்றை, செய்ய முன்னுள்ள பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ளுகின்றவர்கள் மட்டுமே சாதிக்க முடியும்; நிறைவுடனும், மகிழ்வுடனும் வாழ முடியும். இழந்ததை எண்ணிக் கவலைப்படுவது, இனி நடப்பதையும் கெடுத்து இரட்டிப்பு இழப்பையே ஏற்படுத்தும் மறக்கக் கூடாது.
கட்டாயம் செய்ய வேண்டியது கடினம் என்றாலும் விலகக் கூடாது
ஒரு செயல், பணி, கடமை, கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்றால், அது கடினமானது, இழப்பு தரும், உளைச்சல் கொடுக்கும் என்றாலும் அதை விலக்கக் கூடாது, விடக்கூடாது. செய்ய முடியும். ஆனால், ஏன் சிரமப்பட வேண்டும் என்பவன் கோழை. சிரமம்தான் என்றாலும் செய்தாக வேண்டும்; செய்வேன் என்பவனே சாதிக்கிறான்; சரித்திரம் படைக்கிறான்.
கடினப்பட்டுச் சாதிக்க முடியாமல் போவது உண்டு. ஆனால், அது நிரந்தரமல்ல, 6 ரன்னில் அவுட்டாகும் கிரிக்கெட் வீரன் அடுத்து 200 ரன்கள் எடுப்பதில்லையா!
உலகம் முழுவதும் வென்று வந்த விஸ்வநாதன் ஆனந்த் தன் சொந்த மண்ணில் தோற்கவில்லையா? சாதனையாளனுக்கும் சறுக்கல் உண்டு. அது தோல்வியல்ல. சாதனைகள் அனைத்தும் தோல்வியையும் உள்ளடக்கியவையே!
இடர்களைத் துன்பங்களாகக் கருதக்கூடாது
வாழ்வில் ஏற்படும் இடர்கள், சோதனைகள், தடைகள், இன்னல்கள் போன்றவற்றைத் துன்பங்களாக எண்ணித் துயர்படக் கூடாது.
இடர் அற்ற வாழ்வு ரசனையற்ற வாழ்வு. இடர்களை ஏற்றுச் சமாளித்து வாழ்வதுதான் சுவையான வாழ்வு. கம்பியை மீட்டாமல் வீணையில் இசை வருமா? இன்பம் தருமா? கம்பியின்மீது விழும் தாக்குதல் போன்றதுதான், வாழ்வில் வரும் இடர்கள். இடர் இல்லா வாழ்வு மீட்டப்படா வீணை போன்றதே!
கணவன் மனைவி, நண்பர்களிடையே கூட ஊடல், பிணக்கு வந்து மீண்டும் கூடுவதில்தான் சுகம். காதலனும் காதலியும் கட்டிப் பிடித்தபடி வாகனத்தில் செல்லும்போது வாகனம் குலுங்கினால்தான் சுகம். அப்படித்தான் இடர் ஏற்கும் வாழ்வு!