மழை கொடுக்கக் கையாளாகாத கள்ளழகருக்கு விழாவா?

மே 16-31

வழக்கம் போல் மதுரை கள்ளழகர் இவ்வாண்டும் வைகை ஆற்றில் இறங்கினார்;  பக்தர்களால் தூக்கிக் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டார்.

வறட்சியோ, வறட்சி! மக்கள் குடிக்கத் தண்ணீரும் இன்றி அவதிப்படும் அவலம். கள்ளழகருக்குச் சக்தி இருக்குமானால் கோடை மழையையாவது பொழியச் செய்திருக்கலாமே!

அதைவிட வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் ஒரு தகவல். கள்ளழகர் ஆற்றில் இறங் கும்போது ஆற்றில் தண்ணீர் ஓடவேண்டும் என்பது அய்தீகமாம். ஆனால், ஆற்றில் ஒரு சொட்டுத் தண்ணீரும் இல்லை.

அழகர், பக்தர்களைக் கைவிட்டாலும் தமிழக அரசு அதிகாரிகள் கைவிட்டு விடுவார்களா? பக்தி வியாபாரம் செய்து வயிறு வளர்க்கும் பார்ப்பனச் சக்திகள்தான் கைகட்டிக் கொண்டு நிற்குமா?

என்ன செய்கிறார்கள் தெரியுமா?

10 அடி அகலம் 300 அடி நீளத்தில் சிமென்டினால் செயற்கையாக வாய்க்கால் அமைத்து, 8 லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து அழகர் என்கிற சாமிப் பொம்மையை ஆற்றில் கொண்டு வந்து இறக்கும்போது மட்டும் கொட்டுவார்களாம்!
எப்படி?

கடவுள் சக்தியை எவ்வளவு கற்பனையாக, செயற்கையாக காப்பாற்று கிறார்கள்!

வைகையில் வெள்ளம் கரைபுரண்டபோது கூலித் தொழிலாளியாக அவதாரம் எடுத்து, சிவன் கரையை உயர்த்தினான் என்றெல்லாம் புரூடா விடுவார்கள் ஒரு பக்கம். இது எல்லாம் புராணத்தில்தான். எந்தக் காலகட்டத்தில் இது நடந்தது என்பதற்கான வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கிடையாது. புராணம் என்றால் பொய்ப் புழுதி மேடுதானே?

அது நடந்தது உண்மையென்றால், கள்ளழகரும் இந்தக் காலகட்டத்தில் தன் கைத்திறனைக் காட்டி இருக்கவேண்டாமா?

வறட்சியைப் போக்க மழையைத் தந்திருக்கலாமே!

கள்ளழகர் திருவிழாவில் நடக்கும் இந்தத் திருக்கூத்தைக் கண்ட பின்பும், கள்ளழகருக்குச் சக்தி உண்டு என்று எவரேனும் சொல்வார்-களேயானால் வாயால் சிரிக்க முடியாது.

மக்கள் குடிநீரின்றிப் பரிதவிக்கும்போது, பெண்கள் குடங்களைத் தூக்கிக்கொண்டு தண்ணீருக்காக அல்லாடும்போது, செயற்கைக் கால்வாய் வெட்டி, பல லாரி தண்ணீரையும் கொட்டுகிறார்கள் என்றால், இதற்குப் பெயர்தான் மக்கள் நல அரசாங்கமா? பக்தர்களே எழுப்பவேண்டிய கேள்வி இது!

எந்தச் சக்தியும் இல்லா பொம்மைகளை வைத்து எத்தனைப் பொருள் விரயம்? பொழுது விரயம்? உழைப்பு விரயம்?  இந்த அறிவியல் உலகிலும் ஆட்டுமந்தைகளாய் அலைமோதுதல் அறிவுள்ள மனிதர்க்கு அழகா? சிந்திக்க வேண்டாமா? 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *