மைசூரிலிருந்து அப்போது£ன் வந்து இறங்கியிருக்கிறார் செல்வமணி. காக்கி நிறச் சீருடை கசங்கியிருக்கிறது. நான்கு நாள்கள் உறக்கமும் களைப்பும் கண்களில் தளும்புகின்றன. மறுநாள் தேங்காய் ஏற்றிக்கொண்டு மத்தியப் பிரதேச மாநிலம் கட்னிக்குப் பயணமாகும் பரபரப்பில் இருக்கிறார்.
“இப்படித்தான் தம்பி… வேலை வந்தா, சேர்ந்து வரும். இல்லைன்னா ஒரு வாரம் பத்து நாள்கள் வீட்டிலேயே சும்மா உட்கார்ந்திருப்-போம்’’… சிரித்துக்கொண்டே பேசகிறார் செல்வமணி.
சங்ககிரியைச் சேர்ந்த செல்வமணி என்ற பெண் லாரி ஓட்டிச் சென்று வருகிறார். 13 வருடங்களாக குஜராத், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா என கணவருக்கு உதவியாக க்ளீனராக லாரி ஏறியவர், இப்போது முழுநேர டிரைவர். அதுவும், மாநிலம் விட்டு மாநிலம் போய், சரக்கு ஏற்றி இறக்குகிறார்.
“சூழ்நிலையும் தேவையும்தான் தம்பி எல்லாத்தையும் தீர்மானிக்குது. திருமணத்துக்கு முன்னாடி எனக்கு சைக்கிள்கூட ஓட்டத் தெரியாது. இப்போ ஹைவேயில தொடர்ச்சியா 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரி ஓட்டுறேன். ரோட்டுல எல்லாரும் ஆச்சர்யமா பார்க்கிறாங்க. வேலையில் இது ஆம்பளை வேலை, பொம்பளை வேலைன்னு எதுவும் இல்லை’’ என்று கூறும் அவர்,
“பிறந்த இடத்துக்கும் வாக்கப்பட்டுப்போன இடத்துக்கும் ஒரே ஒற்றுமை, வறுமை. எனக்கு நாலு வயசு இருக்கும்போது, சொந்தக்காரங் களுக்குள்ள நடந்த ஒரு தகராறுல ஒருவரைக் கொலை பண்ணிட்டு என் அப்பா ஜெயிலுக்குப் போயிட்டார். கொஞ்ச நாள்ல அங்கேயே தூக்குப்போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டார். என்னையும் அண்ணனையும் வெச்சுக்கிட்டு அம்மா தவிச்சுப்போய் நின்னுச்சு.
சுண்ணாம்பு சூளைப் போட்டு அம்மா எங்களை எல்லாம் வளர்த்தெடுத்துச்சு. பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்ச அண்ணன் லாரிக்குப் போய் தொழிலைக் கத்துக்கிச்சு. நான் காட்டு வேலைக்குப் போவேன். கணவர் பெயர் கோபால்.
உறவுக்காரக் குடும்பம்தான். நல்லவிதமா பார்த்துக்கிட்டாங்க. இவர் ஒரு முதலாளிக்-கிட்ட டிரைவரா ஓட்டிக்-கிட்டிருந்தார். பத்து நாள்கள், பதினைஞ்சு நாள்கள்னு லாரி ஓட்டிட்டு வருவார். நான் வீட்டுக்குள்ளயே கிடப்பேன். வரிசையா ரெண்டு பசங்க பிறந்தாங்க. அதுக்கு அப்புறம் இன்னும் சிரமமாப் போச்சு. நாமளும் ஏதாவது செஞ்சு, நாலு காசு சம்பாதிச்சாதான் உண்டுன்னு ஆனபிறகு, தையல் கத்துக்கிட்டேன். வீட்டுலயே ஒரு மெஷினை வாங்கிப்போட்டு தைக்க ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு நல்லவிதமா தைச்சதால வேலை நிறைய வந்துச்சு.
நாங்க கஷ்டப்படுறதைப் பார்த்துட்டு, எங்க உறவுக்காரப் பையன் ஒருத்தர், அவரோட டேங்கர் லாரியை எங்கக்கிட்ட கொடுத்து ‘கொஞ்ச நாள் வெச்சு ஓட்டுங்க’ன்னார். எங்க வீட்டுக்காரர் தேங்காய் எண்ணெய் ஏத்திக்கிட்டு கொல்கத்தாவுக்குப் போனார். வழியில பெரிய விபத்து. கூடப்போன அண்ணன் பையன் அங்கேயே இறந்துட்டான். இவருக்குப் பலத்த அடி. ஒரு வழியா காப்பாத்தி மீட்டெடுத்தேன். வண்டிக்கான செலவு, இவருக்கான மருத்துவச் செலவுனு நாலு லட்சம் ரூபாய் கடன் ஆகிடுச்சு.
கடனுக்கு வட்டி ஏறி, நாலு லட்சம் ரூபாயா இருந்த கடன், ஆறு லட்சம் ரூபாயா அதிகமாகிடுச்சு. வருமானமும் குறைஞ்சுபோச்சு. ஏதாவது செய்தால்தான் உயிர்வாழ முடியும்கிற கட்டாயம். உறுதியா ஒரு முடிவு எடுத்தேன். இருந்த மனையை வித்து கடனைக் கட்டிமுடிச்சேன். நாமளே ஒரு டாரஸ் லாரி வாங்கிடலாம்னு முடிவுசெஞ்சேன். லோன் போட்டு லாரியைக் கொண்டுவந்து நிறுத்திட்டேன். மொத்தமா பதினோரு லட்சம் ரூபாய் கடன்…’’
கும்பகோணத்துல தேங்காய் ஏத்துக்கிட்டு குஜராத் மாநிலத்துல உள்ள போர்பந்தருக்குப் போகணும். நானும் வருவேன்னு விடாப்பிடியா ஏறி உட்கார்ந்துட்டேன். பன்னிரண்டு நாள்கள் பயணம். அதை இப்போது நினைச்சாலும் பகீர்னு இருக்கும். பளீர், பளீர்ன்னு முகத்தில் வெளிச்சத்தை வீசிட்டுப் போற வண்டிங்க, காடு, மலைன்னு விதவிதமான இடங்கள், அந்நியமான முகங்கள்னு அது புது அனுபவமா இருந்தது.
அதன்பிறகு எல்லாமே பழகிடுச்சு. மூணே மாசத்துல லாரி ஓட்டக் கத்துக்கிட்டேன். டிரைவர், க்ளீனர்னு வெளியாள்கள் யாரையும் வேலைக்கு வெச்சுக்கிறதில்லை. நானும் கணவரும் சரக்கை ஏத்தி, தார்ப்பாயைப் போட்டு நான் மேல ஏறி கயிறு போடுவேன். அவர் கீழேநின்று வாங்குவார். கை காச்சுப் போற அளவுக்குக் கடினமான வேலை அது. போகப் போகப் பழகிடுச்சு.
ஆறு, குளம்னு தண்ணி கண்ட இடத்துல வண்டியை நிறுத்திட்டுக் குளிப்போம். வெயில் காலத்துல ஆங்காங்கே சேட்டுமார்கள் சேலையில தடுப்புக்கட்டி அண்டாவுல தண்ணி வெச்சிருப்பாங்க. அப்படியே மேலே அள்ளி ஊத்திக்கிட்டு ஈர உடையோட உட்கார்ந்து ஓட்டுவோம். பத்து நிமிஷத்துல காய்ந்துவிடும்.
அரிசி, எண்ணெய், ஸ்டவ்னு எல்லா பொருள்களும் வண்டியிலேயே வெச்சிருக்கேன். அவர் ஓட்டும்போது உள்ளே வெச்சே சமைச்சுடுவேன். 400 கிலோ மீட்டருக்கு ஒருத்தர்னு மாத்தி மாத்தி ஓட்டுவோம். பதிமூணு வருஷங்களாச்சு… இந்த ஸ்டீயரிங்கைத் தொட்டு. மாசத்துல இருபது நாள்கள் ரோட்டுலதான் எங்க வாழ்க்கை. ஆண்டவன் கருணையில, இன்னைக்கு வரைக்கும் வண்டி மேல சின்னதா ஒரு கீறல்கூட விழலை. அதுதான் பெரிய சாதனை.’’ _ நம்பிக்கையோடு பேசுகிறார் செல்வமணி.
எனக்கு ரெண்டு பசங்க. அவங்களை நல்லா படிக்க வெச்சுட்டேன். மூத்தவன் எம்.பி-.ஏ. முடிச்சுட்டு பெங்களூருல சேலை செய்றான். சின்னவனும் அய்.டி.அய். படிப்பு முடிச்சுட்டு வேலை பார்க்கிறான். எட்டு லட்சம் ரூபாய்ல ஒரு வீடும் கட்டிட்டோம். இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு. ரெண்டு வருஷங்கள், ரெண்டு பேரும் லாரி ஓட்டினா, அதையும் அடைச்சுட்டு நிம்மதியா வீட்டுல உட்காரலாம்னு நினைக்கிறேன். என் கணவரோட குடி, புகைப்பழக்கத்தையும் விடச் செய்தேன்! பெண்ணாலயும் எல்லாம் முடியும் என்றார் பெருமையோடு!