செய்யக்கூடாதவை

மே 16-31

விருப்பங்கள் தப்பானவையாக இருக்கக் கூடாது

சிலர் நம் விருப்பப்படி நடக்கக்கூட நமக்கு உரிமையில்லையா? என்பர். விருப்பம் என்பது தனக்கும், பிறருக்கும் கேடு பயவாத் தேவைகள் ஆகும்.

தனக்குக் கேடு பயக்கும் விருப்பங்களைச் சிலர் நிறைவேற்றும்போது சட்டம் அதைத் தடுப்பதில்லை. அது சரியான சட்ட நிர்வாகம் ஆகாது.

தனிநபர் விருப்பங்கள் பீடி, சிகரெட், மது, சூது போன்றவை சட்டப்படி அனுமதிக்கப் படுகின்றன. இது தப்பு.

தற்கொலை செய்துகொள்ள ஒருவன் விரும்புகிறான். சட்டம் அனுமதிக்குமா? நடுச்சாலையில் அம்மணமாகப் போக ஒருவர் விரும்பினால் சட்டம் ஏற்குமா?

தனக்கும், பிறருக்கும் தீங்கு தரும், கேடு தரும் ஏதும் விருப்பங்கள் ஆகா.

மதுவும், நஞ்சும் மருந்தாகப் பயன்படுகிறது. நன்மை தரும் என்றால் பொய்கூட வாய்மையாகிறது. எனவே, விருப்பங்கள் நன்மை பயப்பன மட்டுமே!

பிடிவாதம் கூடாது

மனித வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் கருத்து முரண்பட்டு, நடத்தை மாறுபட்டு, கொடுக்கல் வாங்கலில் சிக்கல் வந்து, ஏமாற்று, வஞ்சகம், பொறாமை, கீழறுப்பு, துரோகம் என்று பல காரணங்களால் சிக்கல்கள் ஏற்படும். மேலும், தவறான புரிதலாலும், கோள் சொல் கேட்பதாலும், அவசர, ஆத்திர முடிவுகளாலும் சிக்கல் எழும். எப்படி ஏற்பட்டாலும் சிக்கல்கள் நிரந்தரமானவை அல்ல.

பிரச்சினை என்பது ஏற்படுவது _ உருவாவது மட்டுமே. அது தீப்பொறி போன்றது. அதைத் தொடர்ந்து எரிய வைப்பது நாம்தான்.

யார் முதலில் விட்டுக் கொடுப்பது, யார் இறங்கி வருவது, நம் கௌரவம் என்னாவது, நாலு பேர் என்ன நினைப்பார்கள் என்பன போன்றவையே பிரச்சினைகளை நீடிக்கச் செய்கின்றன.

எனவே, பிரச்சினைக்குக் காரணமான இரு தரப்பாரும் அல்லது எல்லா தரப்பினரும் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக் கொடுத்து விலகினால் சிக்கல் தீரும். உளைச்சல் நீங்கும்.
வகித்த பதவியை எண்ணி வருந்தக் கூடாது

வயதான காலத்தில் பலரையும் வாட்டும் உணர்வு இது. “யார் என்னை மதிக்கிறார்கள்! அன்றைக்குக் கைகட்டி நின்றவனெல்லாம் இன்று கண்டுக்காம போகிறான்! என் பதவி போனதும் எல்லாம் போயிற்று!’’ என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்விலும் புலம்புவர்.

நமக்கு எதனால் மதிப்பு வருகிறதோ அது இல்லாதபோது அம்மதிப்பு போகத்தானே செய்யும். இதற்குப் புலம்பி என்ன பயன்?

பதவி, அதிகாரம், பணம் மூலம் கிடைக்கும் மரியாதை எல்லாம் நமக்குக் கிடைக்கும் மரியாதையல்ல. அது அவற்றிற்குக் கிடைக்கின்ற மரியாதை. அவை போனால் மரியாதையும் போகும். இதைப் புரிந்து கொண்டால் புலம்பல் குறையும்.

நம்மீது என்றும் பிறர் மதிப்பும், பற்றும் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் மற்றவர் மீது இவற்றை எப்போதும் கொண்டிருக்க வேண்டும். அப்படி வரும் மதிப்பு நீங்காது. பதவி, பணம், அதிகாரத்திற்கு அப்பால் நம் நற்பணிகளால் நாம் பெறும் மதிப்பே என்றும் நிலைக்கும்!

கிடைக்காததை உயர்வாக எண்ணக் கூடாது

எது தனக்குக் கிடைக்காமல் போனதோ அது மிகவும் சிறந்தது. உயர்ந்தது என்று எண்ணி ஏக்கப்படும் இயல்பு பலருக்கு உள்ளது. ‘ஓடிப் போன எலி ஒன்றரை கிலோ இருக்கும்’ என்று கிராமங்களிலே கேலியாகச் சொல்வார்கள். இப்படிப்பட்டவர்களை இடித்துரைக்கச் சொல்லப்பட்டதே இது.

கிடைக்காத காதலிதான் உலகில் உயர்ந்தவள்; இறந்து போன பிள்ளை இருந்திருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கும்; அந்த நாட்டில் பிறந்திருந்தால், அந்த வீட்டில் பிறந்திருந்தால் எவ்வளவோ உயர்ந்திருப்பேன் என்ற உளப்பாங்கு ஒருவனை வீழ்த்தித் தாழ்த்திவிடும். நத்தையில் முத்து, சேற்றில் செந்தாமரை சிறப்பது போல, முயன்றால் எல்லா இடத்திலும் சாதிக்கலாம். எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள்தானே நாட்டின் தலைவராய் உயர்ந்திருக்கிறார்கள் ஒரு சிலரைத் தவிர. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *