கையடக்கக் கருவி
வளர்ந்துவரும் விஞ்ஞான உலகில் நோய்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. அந்தவகையில், வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்போரின், நோயின் தாக்கத்தைத் தடுக்க விரைவாக சோதித்துப் பார்க்க உதவும் கருவிகள் தேவைப்படுகின்றன.
வைரஸ் கிருமியின் பாதிப்பு ஒருவரின் உடலில் உள்ளதா என்பதை, சில நிமிடங்களில் கண்டுபிடிக்கக்கூடிய கையடக்கக் கருவியை ட்வெண்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆஸ்டெண்டம் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இக்கருவியைப் பயன்படுத்துவோர் சிறப்புப் பயிற்சி ஏதுமின்றி, பாக்டீரியா, புரதங்கள் மற்றும் டி.என்.ஏ. மூலக்கூறுகள் இவற்றையும் எளிதில் கண்டுபிடிக்கலாம். இக்கருவியில் முதற்பகுதி சிறிய ஆய்வகத்தை உள்ளடக்கிய ஒளி உணரும் சில் (Chip) லையும், இரண்டாம் பகுதி எளிதில் எடுத்துச் செல்லும் ஏற்பியையும் (Portable Detector) கொண்டுள்ளது.
சில்லில் உள்ள பல்வேறு துளைகள் வழியாக சோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் இரத்தம் அல்லது எச்சில் மாதிரி உள்ளே செலுத்தப்படுகிறது. இந்தத் துளைகளின் உள்ளே நுண்ணுயிரிகளுடன் வினைபுரியும் ஏற்பிகள் உட்பூச்சாகப் பூசப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட லேசர் ஒளிக்கற்றையும் இந்த நுண்ணுயிரிகளுடன் அனுப்பப்படுகிறது.
ஏற்பிகளாகிய எதிர் உயிரிகளுடன் வைரஸ்கள் வினைபுரியும்போது லேசர் ஒளிக்கற்றையின் அதிர்வெண் வேறுபடுகிறது. இந்தக் கருவியின் மூலமாகப் பெறப்படும் அளவீடுகள் மிகவும் நுணுக்கமானதாக இருப்பதால் குறிப்பிட்ட வைரசை இனங்காணுவது மிகவும் எளிதாக இருக்கும். ஒவ்வொரு வைரசிற்கும் வெவ்வேறு அளவில் இந்த அதிர்வெண் மாற்றம் இருப்பதும் இந்தக் கையடக்கக் கருவியின் சிறப்பம்சமாகும்.