வந்தவர் மொழியா.? செந்தமிழ்ச் செல்வமா..?

மே 16-31

அகராதி

அகரம்+ஆதி=அகரவாதி என வேண்டிய இத்தொடர் அகரத் தொகுத்தல் பெற்று அகராதி என ஆயிற்று.

இதில் ஆதி என்பது தமிழ் அன்று என்பார் உரை சரி அன்று. ஆதல் என்ற தொழிற்பெயர் போன்றதே ஆதி, ஆ என்ற வினை முதனிலையுடன் தி என்ற தொழிற்பெயர் சேர்ந்தது. ஆதி, ஆ என்ற வினை முதனிலையோடு தல் என்ற தொழில் இறுதிநிலை சேர்ந்தது ஆதல். எனவே, இரண்டும் தொழிற் பெயர்களே.

ஆதல் அல்லது ஆதி என்றால் முதலிடம் முற்காலம் என்பதுதான் பொருள்.

அகராதி என்றால் அகரத்தை முதலிடத்திற் கொண்ட நூல் என்பதுதான் பொருள்.

இதை அன்மொழித் தொகை என்பர் இலக்கணத்தார்.  

சிலர் அகராதி என்பதற்கு அகர வரிசை என்று எழுதி வருகின்றனர். அவர்கள் அகராதி என்ற சொல், வடசொல் என்று பிழையாக எண்ணினார்கள். ஆதலால், அகரத்தை ஆதியாக முதலாகக் கொண்ட நூல் என்றால் ஆகாரம் முதலியவற்றை அண்டையில் வரிசையாகக் கொண்டது என்ற கருத்தும் தோன்றும். அகர வரிசை என்பது அவ்வகையில் பொருள் சிறவாமையை அவர்கள் நோக்கினாரில்லை.

அகரம் என்பதில் அ என்ற எழுத்து கரம் என்ற சாரியை பெற்றது. அதுவும் தூய தமிழே.
எனவே,

அகராதி வந்தவர் மொழியன்று, செந்தமிழ்ச் செல்வமே.
(குயில்: குரல்: 3, இசை: 5, 12-7-1960)

தண்டை

அடிக்கும் மணியின் பெயர். டண் என்பது ஒலிக் குறிப்பு. இந்த டண் என்பது கண்ட் என எழுத்துநிலை மாறிற்று. ஐ என்ற பெயர் இறுதிநிலை பெற்றுக் கண்டை என்றாயிற்று. எனவே கண்டா மணி என்றும் வழங்கும்.
இது கண்டா மணி என்றும் வழங்கும். இது கண்டா என்ற வடசொல்லின் சிதைவென்று சடகோப இராமானுசர் கூறுவது பொருந்தாது.

கிண்கிணி

காலணியின் பெயர். கிண்கிண் என ஒலிப்பது. இது வடசொல் என்ற சடகோபர் கூற்றுச் சரியானதன்று.
எனவே கிண்கிணி வந்தவர் மொழி அன்று செந்தமிழ்ச் செல்வமே.
(குயில்: குரல்: 3, இசை: 9, 16-8-1960)

நுகம்

இது எருது பூட்டப்படுவதற்கான நுகத்தடி. இதைச் சடகோபர், யுகம் என்ற வடசொற் சிதைவென்றார். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோட்டவாறு.

நுகத்தல் என்பது ஒன்றின் முரட்டுத் தனத்தினின்று இளக்கிக் கொணர்வது என்ற பொருளுடையது. நூகு முதநிலை. அம் தொழில் இறுதிநிலை. தொழிலாகு பெயராய் நுகத்தடியை உணர்த்தியது.

எனவே நுகம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்க.

வண்ணம்

மேலும் ஆச்சாரி, வண்ணம் என்பது வர்ணம் என்ற வடசொல்லின் சிதைவு என்று மாணவர்களிடம் போடுகின்றார்.

வண்ணம் என்பது ஒரு பொருளின் மிகுதியும் சிறப்பும் ஆகும். இந்த வகையால் நிறம் என்றும், ஓவம் என்றும் பொருள் தருவதாயிற்று.

வண்ணங்கள் சாத்தனார், வண்ணான் முதலியவற்றில் ஓவியம் சிறப்பு என்ற பொருள் தந்து நிற்பது உணரப்படும்.

வர்ணம் என்ற சொல்லும் வடசொல் அன்று. வண்ணம் என்ற தமிழ்ச் சொல்லை ஆரியர் பிழைபட உச்சரித்ததேயாகும் எனவே வண்ணம் தூய தமிழ்க் காரணப் பெயர். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *