தந்தை பெரியார்
கோடை காலங்களில் தமிழ்நாட்டில் எங்கும் மாரியம்மன் திருவிழா என்று ஒன்று நடந்து வருகிறது. இந்த மாரியம்மன் கடவுள் கிராம தேவதை என்று பெயர் இருந்தாலும், அது ஆரியக் கதைப்படி ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி மாரி ஆகிவிட்டாள் என்பதாகும். இந்த மாரி இல்லாத கிராமமே கிடையாது. ஆகவே, இவள் கிராம தேவதை ஆகி கிராம மக்கள் எல்லோருக்கும் கடவுள் ஆகிவிட்டாள்.
இந்த ரேணுகை என்னும் மாரியம்மனின் சரித்திரம் மிகவும் இழிவாகக் கருதத்தக்கதாகும்.
இந்த ரேணுகை எனும் மாரி ஜமதக்கினி முனிவரின் மனைவி. அவள் ஒரு அன்னிய புருஷன் மீது இச்சைப்பட்டு, அதாவது, அவள் நீராடக் கங்கைக்குச் சென்றபோது எதிர்ப்பட்ட சித்ரசேனனைக் கண்டு மோகித்துக் கற்பு கெட்டாள். அதனை அறிந்த அவளது கணவன் ஜமதக்கினி அவளைக் கொன்றுவிடும் படியாகத் தனது மகன் பரசுராமனிடம் கட்டளையிட்டார். பரசுராமன், ரேணுகையை யார் தடுத்தும் கேளாமல் கொன்று விட்டான். கொன்றுவிட்டு வந்து, தாயை கொன்று விட்டோமே என்று துக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்போது தகப்பன் ஜமதக்கினி அதை அறிந்து, மகனுக்காக மாரியை பிழைப்பிக்கச் செய்ய இசைந்து, மந்திர நீர் தந்து எழுப்பி வரும்படி மகனை அனுப்பினான்.
தாயைப் பிழைப்பிக்கச் சென்ற பரசுராமன் கொலைக் களத்துக்குச் சென்று, தாயின் தலையை எடுத்து முண்டத்துடன் ஒட்டவைக்கை-யில், கொலைக் களத்தில் பல முண்டங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் அடையாளம் சரிவரத் தெரிந்து கொள்ளாமல் ஏதோ ஒரு முண்டமாகக் கிடந்த உடலை எடுத்து தலையுடன் ஒட்டவைத்து, அழைத்து வந்து தகப்பனிடம் விட்டான். கணவன் அவளைப் பார்த்து, நீ இங்கு இருக்க வேண்டாம். கிராமங்களுக்குச் சென்று நீ அங்கு வாசம் செய்து கிராம மக்களுக்கு நோய் வந்தால் பரிகாரம் செய்து கொண்டு இரு எனக் கூறி அனுப்பினான். அது முதல் மாரி கிராமங்களில் வசிக்கத் தொடங்கினாள். கிராமவாசிகள் இந்த விஷயம் அறிந்து, தலையை மாத்திரம் வணங்கிப் பயன் அடைய முன் வந்து, தங்கள் ஊர்களில் மாரிக்குக் கோயில் கட்டி, மாரியின் தலையை வைத்து வணங்கி வருகின்றார்கள். இது ஒரு புராணம்.
சிவபுராணத்தில் மாரியானவள் கார்த்தவீரி-யனை மோகித்துச் சாபமடைந்தாள் என்று காணப்படுகிறது.
மற்றொரு புராணத்தில் –
அவள் கணவன் ஜமதக்கினி கொல்லப்-பட்டதால் அவள் அவனுடன் உடன்கட்டை ஏறினாள். இதை இந்திரன் ஒப்புக் கொள்ளாமல் மழை பெய்யச் செய்ததும், அவளது உடல் அரைவேக்காட்டுடன் நின்று விட்டது. அதனால் அவள் எழுந்து பக்கத்தில் உள்ள பஞ்சமத் தெருவில் நிர்வாணத்தோடு வேப்பிலையால் மானத்தை மறைத்துக் கொண்டு ஓடினாள்.
அதைக் கண்ட பஞ்சமர்கள், பச்சை மாவும், பழமும், இளநீரும் கொடுத்து உபசரித்தார்கள்; ஒரு வண்ணாத்தி சேலை கொடுத்து ஆதரித்தாள். இந்த அய்தீகம்தான் இன்று மாரியம்மன் பூசையாக நடத்தப்படுகின்றது. பூசை உருவம், உணவு முதலியவை எப்படி இருந்தாலும் இந்த மாரியம்மன் மீது இரண்டு விபச்சாரக் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
(1) சித்திரசேனனை மோகித்துக் கற்பு இழந்தது.
(2) கார்த்தவீரியனை மோகித்துக் கற்பு இழந்தது.
இரண்டிலும் அவளது கணவன் ஜமதக்கினியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவள் தண்டிக்கப்பட்டு இருக்கிறாள். இதற்குப் புராண ஆதாரங்கள் இருக்கின்றன.
நமது கடவுள் நம்பிக்கையிலும், கடவுளை வணங்குவதிலும் நமக்குள் எவ்வளவு மடமை இருந்தாலும், நாம் வணங்கும் கடவுள்களை இவ்வளவு மோசமான, நாணயம், ஒழுக்கம், நாகரிகம் என்பவை இல்லாமல் காட்டுமிராண்டித்-தனமாக இருப்பது பற்றிக் கவலைப்பட வேண்டாமா? என்றுதான் கவலைப்படுகின்றேன்.
* * *
விழாவும் நாமும்
விழா என்பதன் நோக்கமே மக்கள் பலர்கூடி அளவளாவிக் களிக்க வேண்டுமென்பதுதான். விழாவிற்காகப் பலதரப்பட்ட கருத்துக்களுடைய மக்கள் ஒன்று சேரும்போது அவரவர்களுடைய கருத்தை ஒருவரோடொருவர் பரிமாறிக் கொள்ளச் சந்தர்ப்பம் எழுகிறது. இங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் அன்றாடம் ஒருஅறிஞரை வரவழைத்து அவருடைய கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் பாராட்டத்தக்க காரியம் ஆகும்; அதோடு பயனுள்ள காரியமுமாகும். அனேகமாக விழாக்கள் எல்லாம் இப்படித்தான் கொண்டாடப்பட வேண்டும். நம் நாட்டு விழாக்கள் என்பவை இன்று பெரும்பாலும் அர்த்தமற்ற சடங்குகளாகவே இருந்து வருகின்றன. மேலும், இவைகள பெரும்பாலும் எந்தக் காலத்திலோ, யாருடைய நன்மை கருதியோ, யாராலோ, எதனாலோ ஏற்படுத்தப்-பட்டனவாயிருக்கின்றனவே யொழிய, பெரிதும் நம்முடைய முன்னேற்றத்திற்கு ஏற்றனவாக அமைந்திருக்கவில்லை.
உதாரணமாக, ஒவ்வொரு விழாவும் மத சம்பந்தமனதாகவும் அவை பெரிதும் பார்ப்பான் மேன்மைக்கும், பிழைப்புக்கும் பயன்படத்தக்க ஒரே தத்துவத்தை அடிப்படையாக வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பவையாகவே நாம் காண்கிறோம். அந்தந்த விழாவையொட்டிய சடங்குகளும் பெரும்பாலும், துவக்கிய காலந்தொட்டு ஒரே மாதிரியாக இருக்கின்றன-வேயொழிய, நாளுக்குநாள் எவ்வித முன்னேற்ற மாறுதலும் அடைந்துவரக் காணோம். மக்களுடைய அறிவு வளர்ச்சிக்கும் விழாச் சடங்குகளுக்கும், எவ்வித சம்பந்தமும் இருப்பதாகக் கூட நமக்குத் தோன்றவில்லை. சென்ற ஆண்டில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை, பிள்ளையார் பூஜை, உற்சவம், கடவுள்கள் திருமணம் ஆகிய இவற்றிற்கும்-_இவ்வாண்டு நடைபெற்ற இவ்விழாக்களுக்கும் நம்மால் எவ்வித மாறுதலும் காண முடியவில்லை. முன்பு விளக்கெண்ணெய் விளக்கென்றால் இன்று ‘காஸ்லைட்’, ‘எலெக்ட்ரிக் லைட்’ _ இவைதாம் மாறுதல். நம்முடைய பழம் பண்டிகைகளும்கூட எவ்வித மாறுதலும் இன்றியேதான் நடைபெற்று வருகின்றன. இத்தகைய விழாக்களில் கலந்து கொள்வதால் மக்களுக்கு ஏதாவது பயனுண்டா என்பதுபற்றி யாரும் கவலை எடுத்துக் கொண்டு சிந்திப்பதில்லை. இந்த மாதிரி பலர் கூடிக் களிக்கும் சந்தர்ப்பத்தை _ அவர்களிடையே உள்ள வேற்றுமையை நீக்கவும், அவர்களது அறிவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவும் அறிவாளிகள் உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும். அந்த மாதிரி நம்முடைய விழாக்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வெக காலமாகவே இருந்து வருகிறது. கொஞ்ச காலத்திற்கு முன்பே பொதுநலத் தொண்டர்கள் இதில் போதிய கவனம் செலுத்தியிருப்பார்களானால், நம் நாடு இதற்குள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கும். அறிவுக்குக் கேடாயிருந்து வரும் பல விழா முறைகள், அறிவு வளர்ச்சிக்கான விழாக்களாக மாற்றியமைக்கப்-பட வேண்டும் என்று நான் கூறுவது வெகு பேருக்குச் சங்கடமாயிருக்கலாம்.
விழாவிற்கு வந்து வீடு திரும்பும் ஒருவனைக் கண்டு, ‘என்னப்பா விசேஷம்?’ என்று கேட்டால் அவன் என்ன கூறுவான்? ‘ஒன்றும் விசேஷமில்லை; நிறையக் கூட்டம் இருந்தது; அலங்காரம் அழகாயிருந்தது; கூட்டத்தில் பலர் நசுக்கப்பட்டார்கள்; இந்த வருடம் புது வாத்தியக்காரன் வந்திருந்தான்; அவன் விடியவிடிய வாசித்தான்; வாத்தியத்திற்கு மட்டும் ரூபாய் ஓராயிரமாம்’ என்று இப்படித்தான் பதில் கூறுவான்.