காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் புதைக்கபட்ட நீதியை மீண்டும் நிலை நாட்டவேண்டியது அவசர – அவசியம்!

மே 16-31

 

சென்னை உயர்நீதிமன்றம் 4.5.2017 அன்று ஒரு முக்கியமான கேள்வியை புதுச்சேரி அரசுக்கு எழுப்பியுள்ளது.

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. அதில் காஞ்சி சங்கர மடத்தினைச் சேர்ந்த மடத்தின் தலைவர் ஜெயேந்திரர், துணை மடாதிபதி விஜயேந்திரர் மற்றும் சங்கர மடத்தின் மேலாளர் மற்றும் பலர் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.

இந்தக் கொலை வழக்கு சம்பந்தமான விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, விசாரித்த செஷன்ஸ் நீதிபதிக்கு, குற்றவாளிகள் தரப்பிலிருந்து தொலைபேசியில் பேசினர் என்றெல்லாம் புகார் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிறழ் சாட்சியங்கள் மூலம் விடுதலை பெற்றனர்

2004, செப்டம்பர் 3 ஆம் தேதி, காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதியில், அதன் மேலாளர் சங்கரராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், அடுத்த ஜூனியர் விஜயேந்திரர் முதலியவர்கள் முறையே முதல், இரண்டாவது குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, கொஞ்ச நாள் கழித்து பிணையில் வெளியே வந்து, வழக்குகளை தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, புதுச்சேரிக்கு மாற்றி, – வழக்கு நடத்தி- சுமார் 87 பிறழ் சாட்சியங்கள் (Hostile Witnesses) மூலம் வழக்கிலிருந்து விடுதலை பெற்றனர்.

நீதிபதியிடம் குற்றவாளிகளின் தொலைபேசிப் பேச்சு குறித்த புகார் மற்றும் பல பெரிய அரசியல் புள்ளிகள் – பிரமுகர்களின் தலையீடுகள், அழுத்தங்கள் எல்லாம் இடையில் நடந்தது உலகறிந்த செய்தியாகும்!
யார் குற்றவாளி என்பதே வெளிச்சத்திற்கு வரவேயில்லை!

இந்நிலையில், குற்றவாளிகள் முழுவதும்

(Total Acquittal) விடுதலையான ஒரு பட்டப் பகல் கொலை வழக்கில், இதுவரை யார் குற்றவாளி என்பதே வெளிச்சத்திற்கு வரவேயில்லை!

கொலையுண்ட சங்கரராமனின் மனைவியே கூட பிறழ் சாட்சிகளில் ஒருவர் என்றால்,   அவ்வழக்கில் கொடுக்கப்பட்ட அழுத்தம், செல்வாக்கு எவராலும் புரிந்துகொள்ளக் கூடியதுதானே!

4.5.2017 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டீஸ் கிருபாகரன், ஜஸ்டீஸ் பார்த்திபன் ஆகியோர் புதுவை அரசுக்கு – முக்கியமான பரபரப்பு மிகுந்த இந்த கொலை வழக்கில் ஏன் மேல்முறையீடு அப்பீல் செய்யவில்லை புதுச்சேரி  அரசு? சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உடனடியாகப் பதில் அளிக்கவேண்டும் என்று கேட்டிருப்பது மிகவும் நியாயம், நீதி சாய்ந்துவிடக் கூடாது என்ற பொறுப்புணர்-வோடு கேட்கப்பட்டுள்ள கேள்வியாகும்! உடனடியாக புதுவை மாநில அரசு; இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து, பிறழ் சாட்சிகளின் மீது தக்க கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுவையில் 8.5.2017அன்று புதுவை மாநில திராவிடர் கழகமும், முற்போக்காளர்களும் புதுவை அரசை வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் நிலைநாட்ட வேண்டும்!

இந்த வழக்கினை துல்லியமாக தமிழ்நாட்டில் நடத்திய காவல்துறை அதிகாரிகள் ஓய்வு பெற்று வழக் குரைஞர்-களாகவும் உள்ளனர். அவர்களையும் புதுவை அரசு அமர்த்தி, புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் நிலை நாட்ட ஆவன செய்யவேண்டியது அவசரம் – அவசியம்!   

கி.வீரமணி
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *