சமுதாயத்தில் சரிபாதி பெண்கள். ஆனால், சமூகத்தில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் முழுமையாகக் கிடைக்கின்றனவா? என்பதை எண்ணும்போது இல்லையென்பதே விடையாகும். பண்டு முதல் இன்றுவரை பெண்ணுரிமை பற்றிப் பல தலைவர்கள் வற்புறுத்தி இருப்பினும் தந்தை பெரியார் அவர்கள்தான் மிகத் தீவிரமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பெண்ணுரிமைக் கருத்துககளைக் கூறியதோடு பெண்கள் தாங்களே தங்கள் உரிமையை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் ஆண்கள் தங்களுக்கான உரிமைகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பது ‘நண்டுகள் கூடி நரியிடம் சுதந்திரம் வேண்டுவது’ போன்றதே என்றும் கூறினார்.
பெண்கள் என்றால் அவர்கள் அடுப்படியிலே அடைந்து கிடக்க வேண்டியவர்கள் என்றும், வீட்டில் சமைப்பது என்பது பெண்களுக்கு மட்டுமே உள்ள கடமையாக, பொறுப்பாகத்தான் இன்றளவும் உள்ளது. ஆனால், அந்த அடுப்படியே அவர்களின் ஆயுளை முடித்திடும் அதகளத் தலமாக மாறிவிடுவதைப் பல நேரங்களில் காண்கிறோம். இவற்றில் மிகச் சிலவே விபத்துக்களாக இருக்கக் கூடும்.
பெரும்பான்மை உயிர்ச் சேதங்கள் வரதட்சணைக் கொடுமைகளாலும், வேறு பல காரணங்களாலும் தற்கொலைக்குத் தள்ளப்பட்டவையாகவும் மற்றும் தற்கொலை என்று நம்பும்படியாகச் செய்யப்பட்ட கொலைகளாகவுமே உள்ளன.
இதுகுறித்து 17.07.2016 ஆங்கில நாளிதழில் சிறீவத்சவா என்பவர் தன் கட்டுரையில் கொடுத்துள்ள புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி தரத் தக்கவைகளாக உள்ளன.
இந்தியா முழுமையும் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 91,000 பெண்கள் அடுப்படி விபத்துகளால் (ரிவீtநீலீமீஸீ கிநீநீவீபீமீஸீts) உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது பெண்களின் மீதான வன்முறைகளின் கொடுமைகளை விளக்குவதற்கான ஒரு தரவாகவே கொள்ளலாம்.
இது மற்ற நோய்களால் ஏற்படுகின்ற மரணங்களைவிட மிக அதிகமாகும். பிரசவ நேரத்தில் 2015இல் ஏற்பட்ட மகளிர் மரணங்கள் 45,000, கருப்பைவாய்ப் புற்றுநோயால் ஏற்பட்ட மரணங்கள் 74,000, வன்புணர்வுக்கு உள்ளான பெண்களின் எண்ணிக்கை 36,735.
இவை எல்லாவற்றையும்விட அடுப்படி விபத்துகளால் ஏற்பட்ட மரணங்கள் 91,000 என்று காணும்போது மற்ற நோய்களுக்கான தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகளைவிட இந்த விபத்துகளைத் தடுப்பதற்கு மிக அதிக கவனம் செலுத்த வேண்டியது அரசின் கடமையாகிறது என்பதுதானே உண்மை.
இந்த விபத்துகள் மணமான இளம் பெண்களுக்கே ஏற்படுகின்றன என்பதோடு ஏறக்குறைய அனைத்து விபத்துகளும் பெண்கள் புகுந்த இல்லங்களிலேயே (புக்ககங்கள்), அதாவது கணவன்மார்கள் இல்லங்களிலேயே ஏற்பட்டுள்ளன என்பதை அறியும்போது அதன் விபரீதத்தை அதற்கான வித்தை விளக்கவும் வேண்டுமோ? ஆனால், இந்த இறப்புகளுக்கு பெரும்பான்மை காரணம் விபத்துக்களே அல்ல என்றும், இவற்றிலும் வெறும் 5% மட்டுமே காவல் துறையில் வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
மும்பை கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மய்யத் தலைமை மருத்துவர் திருமதி வனிதா பூரி அவர்கள் விபத்துகளால் ஏற்படுகின்ற தீக்காயங்கள் எனில் 60% முதல் 80% அளவுக்கு இருக்க முடியாது என்று கூறுகிறார். எனவே, இவை பெண்களின் மீதான வன்முறையே என்கிற முடிவுக்குத்தான் வரவேண்டியவர்களாக உள்ளோம். இந்தச் சமுதாயமும், அரசும் தொண்டு நிறுவனங்களும் இன்னும் கடுமையான முறைகளில் முயற்சித்து இக்கொடுமையைக் குறைக்க முயல வேண்டும் என்பதே இப்புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்தும் செய்தியாகும்.
– கெ.நா.சாமி