வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். விமானத்தைப் பறக்க வைக்கும் எரிபொருளாக அந்தப் புல் பயன்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
பெல்ஜியம் நாட்டின் கென்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வில் புதிய சாதனையைப் படைத்துள்ளனர். இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி வே செர்ன் கேர் கூறுகையில், “தற்போது விலங்குகளுக்குத் தீவனமாக மட்டுமே புல் பயன்பட்டு வருகிறது. அந்தப் புல்லை பயோ எரிசக்தியாகவும் பயன்படுத்தலாம். உலகம் முழுவதும் புல்வெளிகள் படர்ந்து உள்ளதால் எதிர்கால பயோ எரிசக்திக்கு உகந்ததாக புல் இருக்கும். இதற்காகப் புல்லுடன் பாக்டீரியாவை சேர்த்து லாக்டிக் ஆசிடாக மாற்ற வேண்டும். பின்னர் அதை பயோ எரிபொருளாகப் பயன்படுத்தலாம். அதையும் பல்வேறு கட்ட ஆய்வுகளின் மூலம் அதை விமான எரிபொருளாக மாற்றலாம். தற்போது புல்லில் இருந்து எடுக்கப்படும் சிறிய அளவு எரிபொருளுக்கு அதிகமாகச் செலவாகிறது. இதை வர்த்தகரீதியில் நாம் உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் செலவு குறையும். இதை வரும் ஆண்டுகளில் நாங்கள் செய்து காண்பித்துச் சாதனை படைப்போம்’’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் வே செர்ன் கேர்.