சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

மே 01-15

 பெருந்தலைவரின் நிழலில்

நாத்திகரா? – ஆத்திகரா?

தலைவர் காமராசருக்கு இறைவன், கோவில், சமய உணர்வு ஆகியவற்றில் நம்பிக்கை உண்டா? இல்லையா? இவற்றையெல்லாம் நம்பாத நாத்திகரா? என்ற கேள்வி பலர் மனதில் எழுந்ததுண்டு. ஆனால், யாருக்கும் அவரிடம் கேட்பதற்கு துணிவு இல்லை. தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் செயலாளரும், தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவருமான சீர்காழி பெ.எத்திராஜ் ஒருமுறை தலைவரிடமே துணிந்து இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார்.

எத்திராஜ் மீது தலைவருக்கு மிகுந்த அன்பு உண்டு. நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற தியாகச் சீலர் மட்டுமல்ல, மிகமிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் மிகுந்த தஞ்சை மாவட்டத்தில் எத்திராஜ் போன்ற ஏழைத் தொண்டரைத் தேர்ந்தெடுத்துச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தலைவர் ஆக்கினார் என்றால் அவர் மீது எவ்வளவு மதிப்புக் கொண்டிருந்தார் என்பது எல்லோருக்கும் விளங்கும்.

தலைவரிடம் தான் கேட்க நினைத்த கேள்விகளை ஒரு சரியான வேளையில் அவரிடம் எத்திராஜ் துணிந்து கேட்டுவிட்டார். அவரது கேள்விகளும் தலைவர் அளித்த பதில்களும் இங்கே தரப்படுகின்றன.

“கடவுள் பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்? பூஜை, வழிபாடு, நேம, நிவேத்தியங்கள் பற்றி அவரது கருத்து என்ன? இதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.

“கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா?’’

“இருக்கு இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தாப் போதும். பக்தனா இருக்கறதைவிட யோக்கியனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோவிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா’’ என்றார்.

இந்தியாவின் முதல் தலைமையமைச்சராக இருந்த சவகர்லால் நேரு ஒருமுறை, “இந்திய அரசியல்வாதிகள் சிலர் தங்களுடைய பேச்சில் அடிக்கடி இறைவனைப் பற்றிக் குறிப்பிடுவதை வன்மையாகக் கண்டித்தார். அவரைப் பொறுத்தவரையில் சமய உணர்வு என்பது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட விருப்புகளுக்குட்பட்டது. அரசியலுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அவரவர்கள் விரும்புகிறவாறு எந்தச் சமயத்தையும் பின்பற்றலாம் அல்லது இறை நம்பிக்கையற்ற நாத்திகராவும் இருக்கலாம். இது அவரவரின் சொந்த முடிவுகளுக்கு உட்பட்டதாகும். இந்திய அரசியலில் அவற்றைக் கலப்பது என்பது மதவெறியிலும், மத மோதலிலும் கொண்டுபோய் விட்டுவிடும். இதைத் தவிர்த்தாக வேண்டும்’’ என்பதுதான் அவரது கொள்கையாக இருந்தது. இதை நினைவுகூர்ந்து எத்திராஜ் தலைவரிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டார்.

“கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும் உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலிருக்கே? என்று நான் ஆரம்பித்ததும் காமராசர் சொன்னார்: “நேரு கடவுளைப் பத்திக் கவலைப்படாதவர்தான். ஆனா மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரணும்கறதுல அவர் கவனமாயிருந்தார். அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி, எப்படி யோசிச்சிப் பார்த்தாலும் சாதாரண மனிதனைக் கைதூக்கிவிடணும் கிறதத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்… ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா இன்னிக்கு நம்ம மதங்கள் அதைப் பத்திக் கவலைப்படுதான்னேன்? எவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேறணும்னுதானே ஒவ்வொரு மதவாதியும் நினைக்கிறான். இதுக்குக் கடவுள் சம்மதப்படுகிறாரா?’’ என்று கேட்டார்.

நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக்கிறீர்களா? இருந்திருந்தா இந்த அயோக்கியத்தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே?! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் சாதி, கீழ் சாதின்னு படைச்சிருக்க மாட்டேரே?’’ என்றேன்.

மேல்சாதி, கீழ்ச் சாதியெல்லாம் இடையிலே வந்தவர்கள் பண்ணின துன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடுன்னேன்.

எல்லோரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்துதானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன், சூத்திரன்? ரொம்ப அயோக்கினத்தனம்!’’ என்றார் காமராசர்.

எனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபடவில்லை. காமராசரைக் கட்டிப்பிடித்து அணைக்க வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா? இத்தனை எழுச்சியா? அடங்காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.

“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ளவில்லை?’’ என்று கேட்டேன்.

“நான் ஒரு சமுதாயத் தொண்டன்’’ நாத்திகவாதி ஆத்திகவாதி எல்லோருக்கும் தொண்டு செய்கிறவன். எனக்கு எதிரே வர்றவனை மனுஷன்னுதான் பாக்குறேனே தவிர, அவனைப் பிராமணன் சூத்திரன்னு பாக்குறதில்லே? அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக் கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோவிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது அரசியல்வாதியோட கடமை. அந்தக் கோயில்ல ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா, விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது ஆட்சி பண்றவனோட வேலை. நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்னு ஆட்சியிலிருக்கிற எவனும் சொல்ல முடியாது. கம்யூனிச சமுதாயத்திலேகூட கோவிலும் பூசையும் இருக்கே. நான் பூசை புனசுகாரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனக்கிறவன்’’ என்று மிகத் தெளிவாகப் பேசினார்.

காங்கிரஸ் கம்யூனிஸ்ட் _ தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான். மதம் மனிதனுக்குச் சோறு போடுமா? அவன் கஷ்டங்களப் போக்குமா? இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும் நீ பெரிசா, நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே?! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே?! இப்படியெல்லாம் அடிச்சிகிட்டுச் சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?’’

தலைவர் காமராசர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.

நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல| புதுசு கட்டுனதுமில்ல| பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம். அது நம்ம கலாசாரத்தோட ஒட்டுன விழான்னேன்!’’ என்று விளக்கினார்.

“மதம் என்பதே மனிதனுக்கு அபின், அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே?’’ என்ற கேள்வியைப் போட்டேன்.

தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் இலட்சக்கணக்கான ரூபாயில் வைர ஒட்டியானம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக் கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனைப் பயமுறுத்தியே வைக்குதே தவிர தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்’’ என்றார்

கடவுள், மதம் போன்றவற்றில் தனக்கு நம்பிக்கைக் கிடையாது என்றாலும் தான் ஒரு சமுதாயத் தொண்டனாக இருப்பதால் எல்லோரையும் சமமாகப் பாவிக்க வேண்டிய பொறுப்பை அவர் உணர்ந்திருந்தார். நாத்திகமோ? ஆத்திகமோ? எதுவாக இருந்தாலும் அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தனிமனிதக் கொள்கையாகும். யார் மீதும் யாரும் எதையும் திணிக்க முற்படக் கூடாது. குறிப்பாக, அரசியலில் நாத்திக ஆத்திக வாதம் தேவையற்றது என அவர் கருதினார். எனவேதான் மக்கள் அழைக்கும்போது அவர்களின் உணர்வை மதித்துக் கோவில்களுக்கு அவர் சென்று வந்திருக்கிறார். இதில் மதவேறுபாடு அவருக்குக் கிடையாது. கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போன்றவர்கள் அழைத்த போதும் அவர்களின் வழிபடும் இடங்களுக்கு அவர் செல்லத் தவறியதில்லை.

1962ஆம் ஆண்டில் நமது நாட்டின் மீது சீனா படையெடுத்தது. அதன் விளைவாக இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையே மோதல் ஏற்பட்டது. அதையொட்டி மக்களிடம் போர் நிதி திரட்டப்பட்டது. அப்போது மீனாட்சிக் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவராக தியாகி அ.சிதம்பர முதலியார் இருந்தார். அப்போது முதல்வராக இருந்த காமராசரைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று இரண்டு தங்கக் குடங்களைப் போர் நிதிக்கு மீனாட்சி கோவிலின் சார்பில் அவர் அளித்தார். அதை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டு கோவிலில் வழிபாடு செய்துவிட்டுத் தலைவர் திரும்பினார்.

1974ஆம் ஆண்டு சூலை 1ஆம் தேதி மீனாட்சி கோவிலுக்கு வரவேண்டுமென அறங்காவலர்கள் அவரை வேண்டிக் கொண்டனர். அவரும் அவர்களின் அழைப்பை ஏற்று மீனாட்சி கோவிலுக்குச் சென்றார். தலைவருடன் நானும் மற்றும் திண்டிவனம் இராமமூர்த்தி, தண்டாயுதபாணி, ஜி.கருப்பையா மூப்பனார், எஸ்.சேதுராமலிங்கம் ஆகியோரும் உடன் சென்றோம். பூரண கும்ப மரியாதையுடன் தலைவரை அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்தனர். பிறகு கோவிலைச் சுற்றிப் பார்த்த தலைவர் அங்குள்ள சிலைகளுக்கும், சிற்பங்களுக்கும் உரிய விளக்கங்களைக் கேட்டறிந்தார்.

1973ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி பழனி கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அன்றிரவு பழனியில் தலைவர் தங்கினார். மறுநாள் காலையில் பழனி அறங்காவலர் குழுவினர் அவரைச் சந்தித்துக் கோவிலுக்கு வரவேண்டுமென வேண்டிக்கொண்டனர். அதை ஏற்று, தலைவர் காமராசரும் கோவிலுக்குச் சென்றார். அவருடன் நானும் மற்றும் மதுரை மாவட்டக் காங்கிரஸ் நிர்வாகிகளான ஏ.எஸ்.பொன்னம்மாள், கே.முத்துக்கருப்பன் அம்பலம், எஸ்.ஒன்னுராம், தி.அழகிரிசாமி, என்.எஸ்.வி.சித்தன் ஆகியோர் சென்றோம். கோவில் மூலஸ்தானத்திற்கு அருகே தலைவரை உட்கார வைத்து தரிசனம் செய்ய வைத்தார்கள். கோவில் வழக்கப்படி அவர் தலையில் பரிவட்டம் கட்டி நெற்றியில் பட்டையாக சந்தனம் பூசினார்கள். எங்கே தலைவர் அதைத் தடுத்து விடுவாரோ என நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவரோ மிகப் பணிவுடன் தலைவணங்கி அவற்றை ஏற்றுக்கொண்டார். பிகு வெளியில் வந்தபோது எங்கிருந்தோ பறந்துவந்த மயில் ஒன்று அவரது தோளில் ஒருகணம் அமர்ந்துவிட்டு மறுபடியும் பறந்தது. இதைப் பார்த்த மக்கள் பக்திப் பரவசத்துடன் முருகா முருகா எனக் கூவினார்கள். ஒன்றும் புரியாமல் தலைவர் என் பக்கம் திரும்பிப் பார்த்தார். “மயில் அவர் தோள் மீது அமர்ந்துவிட்டுச் சென்றதைப் பார்த்த மக்கள் பக்தியுடன் கூவுகிறார்கள்’’ எனக் கூறினேன். தலைவரும் புன்னகையுடன் மக்களைப் பார்த்து கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டார். மயில் பறந்து வந்து அவர் தோளின் மீது அமர்ந்துவிட்டு சென்றது தற்செயலாக நிகழ்ந்ததே தவிர, அதற்கு வேற எதுவும் முக்கியத்துவம் உண்டு என அவர் நினைக்கவில்லை. ஆனால், மக்களின் உணர்வுகளை மதிப்பதற்காக அவர்கள் அழைப்பை ஏற்று கோவிலுக்குச் சென்றிருக்கிறாரே தவிர, ஒருபோதும் அவர் தானாக எந்தக் கோவிலுக்கும் சென்று எந்தக் கடவுளையும் வழிபட்டதில்லை.

அவரைப் பொறுத்த வரையில் கடவுளைப் பற்றியோ, கோவிலைப் பற்றியோ அவர் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. மனிதர்களைப் பற்றித்தான் அவர் கவலைப்பட்டார். சமுதாயத்தில் பக்தி பரவுவதைவிட கல்வி பரவ வேண்டும். ஏழ்மை ஒழியவேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் ஆகியவற்றைக் குறித்து அவர் கவலைப்பட்டார். அவற்றை நிறைவேற்றத் தொடர்ந்து பாடுபட்டார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *