தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயங்கக் கூடாது
சிலர் தன் செயலும், முடிவும், கொள்கையும் தவறு என்று தெரிந்தாலும் விடாப்பிடியாக அது சரியென்று காட்ட முயற்சிப்பர். எந்த வொன்றையும் விரும்புவதற்கும் காரணம் வேண்டும்; வெறுப்பதற்கும் காரணம் வேண்டும். எதையும் அறிந்து சீர்தூக்கியே ஏற்கவோ மறுக்கவோ வேண்டும்.
கடவுளை மறுப்போரைக் கண்டாலே வெறுத்தல், பக்தியுடையோரை ஆராயாது ஏற்றல் இரண்டும் தவறு.
அரசியல் கட்சிகளைப் பின்பற்றுவதும், புறக்கணிப்பதும் காரணத்துடன் இருக்க வேண்டும்; கண்மூடித்தனமாக இருக்கக் கூடாது. பலர் ஏற்பதை ஏற்பதும் ஒதுக்குவதை வெறுப்பதும் தப்பு. நாம் ஆய்வு செய்தே அதைச் செய்ய வேண்டும்.
வரிசையில் முந்த முயற்சிக்கக் கூடாது
பல இடங்களில், வரிசையை மீறி, முந்தி சிலர் நுழைவர். இது மிகவும் கண்டிக்கத் தக்கது. முன்னமே வந்து நிற்பவர்களுக்கு அது பெரும் வெறுப்பை, வேதனையை ஏற்படுத்தும்.
முடி திருத்தும் இடத்திற்குச் சென்ற இரஷ்ய அதிபர் லெனின் வரிசையில் காத்திருந்தே முடி வெட்டிக் கொண்டார் என்கிறது வரலாறு. மனிதர்களாகப் பிறந்தவர்களுக்கு அதுவே மாண்பு.
இயலாதவர்களாய் இருப்பின் அவர்களைக் காத்திருக்காமல் முன்செல்லவிட வேண்டும். அவர்களோடு போட்டியிடக் கூடாது. அவர்களை வரிசையில் வரச் சொல்வதோ, காத்திருக்கச் செய்வதோ கூடாது.
ஒதுங்கி வாழக்கூடாது
சிலர் பிறருடன் நெருங்கிப் பழகினாலோ, அடிக்கடிப் பழகினாலோ, பல பேர் மத்தியில் அடிக்கடி வந்தாலோ மதிப்பு குறைந்துவிடும் என்று விலகி, ஒதுங்கி, தனித்து இருப்பர்.
இப்படிக் கிடைக்கும் மதிப்புகள் போலி-யானவை. அவை அதிகாரம் உள்ள மட்டும் நிலைக்கும். இப்படிப்பட்ட மரியாதைகள் அச்சத்தால் வருபவை. அது ஒரு வகை வெளி நடிப்பு மட்டுமே! உள்ளூர எழும் அன்பின், மரியாதையின் வெளிப்பாடு அல்ல.
மக்களோடு கலந்து அப்துல்கலாம் பெற்ற மரியாதையை வேறு எந்தக் குடியரசுத் தலைவரும் பெறவில்லை. இவருக்குப் பதவி போனாலும், மரியாதையும், அவர் மீதுள்ள பற்றும் குறையவில்லை. மற்றவர்களுக்குப் பதவி போன அன்றே எல்லாம் போய்விட்டன. இதை உணர்ந்து வாழ வேண்டும்.
நமது அன்பை மறைக்கக் கூடாது
சிலர் பெற்ற பிள்ளைகளிடம்கூட அன்பை வெளிப்படையாகக் காட்ட மாட்டார்கள். உள்ளுக்குள் அன்பு இருக்கும் வெளியில் கண்டிப்பாக நடப்பார்கள். அன்பை வெளிக்காட்டினால் பயம் இருக்காது. சொற்படி நடக்க மாட்டார்கள் என்பது அவர்கள் முடிவு.
ஆனால், அப்படிப்பட்டவரின் பிள்ளைகள் அவரிடம் நடிப்பார்கள். வெளியில் வேறு மாதிரி நடப்பார்கள். கண்டிப்பு வேண்டிய இடத்தில் வேண்டும். காவலர் கையில் உள்ள தடி அடித்துக்கொண்டே இருப்பதற்கு அல்ல. அவசியம் வரும்போது பயன்படுத்த, கண்டிப்பும் அப்படித்தான்.
பிள்ளைகள் முன் கடுமையாக நடந்துவிட்டு, அவர்கள் தூங்கும்போது அருகில் சென்று அன்பைப் பொழிவார்கள். பிள்ளைகள் அந்த அன்பை அறிவார்களா?
நாம் யார்மீது அன்பு செலுத்தினாலும் அது வெளிப்படையானதாக, நேரடியானதாக இருக்க வேண்டும். அதுவே, அன்பைப் பெறுவோருக்கு மகிழ்வளிக்கும்; பயன் அளிக்கும்.
உள்மனதில் உறுதி எடுக்கத் தவறக்கூடாது
சிலர் எண்ணியதை முடித்துச் சாதிக்கின்றனர். பலர், எண்ணுவர்; ஆனால் சாதிக்க மாட்டார்கள். இதற்கு என்ன காரணம்? உள்மனதால் உறுதி எடுத்தால் அது கட்டாயம் நிறைவேறும். புறமன முடிவுகள் ஊக்கம் பெறுவதில்லை.
புகை, மது இவற்றை விடுவது என்றால்கூட இனித் தொடமாட்டேன் என்று ஆழ்மனதால் உறுதி கொண்டால் மட்டுமே அது நடக்கும். மற்றபடி ஒப்புக்கு எடுக்கப்படும் முடிவுகள் உறுதி பெறுவதில்லை. நிறைவேறுவதும் இல்லை. விட நினைத்தாலும், சிகரம் தொட நினைத்தாலும் உள்மனதால் உறுதிகொள்ள வேண்டும்.