சென்னையைப் பொறுத்தமட்டில் கோடைக்காலம் என்று தனியான காலம் கிடையாது. அந்த அளவுக்கு கால நிலை மாறுபாடு இல்லாமல் பெரும்பாலான மாதங்களில் வெப்பம் தகிக்கும். இதில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை வெப்பம் உச்சத்தைத் தொடும். இதனால் கார் பயணத்தின்போது ஏசி பயன்படுத்துவதில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது உடல் ரீதியான தொந்தரவுகளைத் தவிர்க்க உதவும் என்கிறார் டாக்டர் ஜெ. ஜெயப்பிரகாஷ். அதேபோல கார் ஏசி உபயோகத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சிலவற்றை பட்டியலிடுகிறார் டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெடின் துணைத் தலைவர் கே. ஸ்ரீனிவாசன்.
காருக்குள் நுழைந்தவுடன் ஏசி-யை இயக்கி ஜன்னலை மூடக்கூடாது. காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் ஏசி-யைப் போடவேண்டும். பொதுவாக கார்களின் டாஷ்போர்டு, இருக்கைகள் மற்றும் காரினுள் உள்ள பெரும்பாலான பாகங்கள் பிளாஸ்டிக்கினால் ஆனவை. இவை பென்சீன் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன.
சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் ஆகும். வீடுகளில் நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும்.
அதே வேளையில் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும். இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம்.
இதன் காரணமாக புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும்.
இதேபோல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் காரில் ஏசி போட்டு உறங்கவும் கூடாது. காரின் இன்ஜின் இயக்கத்தில் இருக்கும்போது புகையிலிருந்து கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும். இது ஃபயர் வால் மற்றும் காரின் பிற உள்பாகங்கள் வழியாக காரினுள் பரவும். உறக்கத்தில் இருக்கும் நபர்களுக்கு நச்சு வாயுவை சுவாசிப்பது தெரியாது. இதனால் ரத்தத் திசுக்களுக்கு ஆக்சிஜன் குறைந்து மூச்சுத் திணறல் ஏற்படும். சில சமயம் இது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.
ஒருவேளை தூங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், காரின் கண்ணாடியை ஓரளவு திறந்து வைத்துத் தூங்குவது பாதுகாப்பானது. அதேபோல நிறுத்தப்பட்ட காரில் ஏசி இயக்கத்தில் இருந்தால் அதை ரீசர்குலேஷன் மோடில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.