ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்கும் வாரிசுரிமை இருக்கிறதா?

மே 01-15

 

சொத்துக்களைப் பிரிக்கும்போதும் பெண்கள் ஏமாற்றப்பட்டு வந்தார்கள். பல்வேறு காலகட்டங்களுக்குப் பிறகு இந்து வாரிசுரிமைச் சட்டம் (1956) உருவாக்கப்பட்டு ஆண்களுக்குச் சாதகமான அம்சங்களைக் கொண்டு பெண்ணுக்கு சொத்துக்களில் உரிய வகையில் பங்கு கிடைக்காத நிலையே இருந்தது. இறுதியாக ஒரு சரித்திரப் புரட்சியாக 50 வருடங்களுக்குப் பிறகு இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005இல் புதிய திருத்தங்களுடன் அமலுக்கு வந்தது.

விவசாய நிலங்கள்.

இந்துக் கூட்டுக் குடும்பத்தின் சொத்துக்கள்.

பெற்றோர்கள் வாழும் வீடு

விதவைகளுக்கான உரிமைகள்.

ஆகியவைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாரிசுரிமை உண்டு என்பதை புதிய இந்து வாரிசுரிமைச் சட்டம் உறுதி செய்கிறது.

திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம் (2005) எந்த வகையில் பெண்களுக்கு உரிமை அளிக்கிறது. அதில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

விவசாய நிலங்கள்

விவசாய நிலங்களிலும் பெண்களுக்கு வாரிசுரிமை உண்டு என்பது ஒரு அற்புதமான சட்டத்திருத்தம். முந்தைய இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 பிரிவு 4(2) விதியை ரத்து செய்து புதிய வாரிசுரிமைச் சட்டம் பெண்களுக்கு முழு உரிமையை அளிக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு வகையான சட்டவிதிகள் அமைந்து இருந்தன. அவைகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து புதிய சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டது.

இந்தப் புதிய சட்டத் திருத்தத்தின்படி பெண்களுக்கு விவசாய நிலத்தில் பங்கு கிடைத்தவுடன் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை நட்சத்திரம் உருவானது. கேரளாவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்கின்படி கணவன், மனைவிகளை கொடுமைப்படுத்துவது 48 சதவீதமாக இருந்தது 18 சதவிகிதம் குறைந்துள்ளது.

விவசாய நிலங்கள் ஆண் வாரிசுகள், பெண் வாரிசுகள் என பல பாகங்களாகப் பிரித்தால் அது விவசாயத் தொழிலைப் பாதிக்கும். கூட்டுறவுப் பண்ணை என்பது முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என ஒரு சிலர் இந்தச் சட்டத்தைக் குறை கூறுகின்றனர். இது தவறான வாதம். ஆண் வாரிசுகளுக்கு, விவசாய நிலங்களைப் பிரிக்கும்பொழுதுகூடத்தான் நிலங்களின் அளவு குறைத்திட வாய்ப்புண்டு.

கூட்டுக் குடும்பச் சொத்துகளில் பெண்களுக்குரிய உரிமை

கூட்டுக் குடும்பச் சொத்தில் ஒரு குடும்பத் தலைவரின் மகன்களுக்கு முழு உரிமை இருந்து வந்தது. பெண்களுக்கும் அதிலும் திருமணமான பெண்களுக்கும் குடும்பச் சொத்தில்பங்கு உண்டு என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது நிச்சயமாக நல்லதொரு தன்னம்பிக்கையை பெண்களுக்கு கொடுத்திடும். அதாவது முந்தைய இந்து வாரிசுரிமைச் சட்டப்படி மகனுக்கு நேரடியாக வாரிசுரிமையில் ஒரு பங்கு கிடைத்து வந்தது. ஆனால், பெண்களுக்கும் தற்போது வாரிசு உரிமை கிடைக்கிறது.

இது நிச்சயம் அவளுக்கு ஒரு பொருளாதாரப் பாதுகாப்பை அளித்திடும். ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு குடும்பச் சொத்தை சம பங்காக ஆணுக்கு இணையாக பெண் வாரிசுக்கும் கொடுத்திட வேண்டும் என்பது சரியான சட்ட விதியாகும். நிச்சயம் கள்ளிப் பால் கொடுத்து பெண் சிசுவைக் கொல்லும் செயலும் அரிதாகிவிடும். ஆக ஒரு பெண்ணுக்கு தான் பிறந்த வீட்டிலும் சொத்தில் பங்கு உண்டு. கணவன் வகையில் வரும் சொத்துக்கும் உரிமை உண்டு.

குடும்பச் சொத்தான பரம்பரை வீட்டில் பெண்ணுக்குரிய பங்கு

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 பிரிவு 23இல் குறிப்பிட்ட சட்ட விதிகளை ரத்து செய்து குடும்பத்தின் சொத்தான ஒரு பொது வீட்டில் ஆண்மகனைப் போலப் பெண் மகளுக்கும் முழு உரிமை உண்டு என திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம் வழி வகுத்துள்ளது. திருமணம் ஆகாமல் இருந்தாலும், திருமணம் ஆகி இருந்தாலும் சம்பந்தப்பட்ட வீட்டில் பெண்கள் வாழ்ந்திட முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மறுமணம் செய்து கொண்ட பெண்ணுக்கும் உரிமை உண்டு.

ஒரு சிலர் இதனால் இறந்துவிட்ட குடும்பத் தலைவரின் விதவை மனைவி, அவளின் தாயாருக்கு வீட்டில் உள்ள சொத்தின் பல மடங்கு குறைந்துவிடும் என வாதாடுகின்றனர். ஆனால், இந்தப் புதிய விதியின்படி ஒரு வீட்டில் பிறந்து, வளர்ந்து ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு தன் சகோதரர் அனுமதித்தால்தான் அந்த வீட்டிற்கு வந்து வாழ வேண்டிய தர்மசங்கடம் இப்போது இல்லை. உரிமையுடன் தன் பிறந்த வீட்டிற்கு இந்த சட்டத்தினால் வந்து வாழ முடியும் அல்லவா?

பெண்ணுக்கு வாரிசுரிமை சமமாக வழங்கப்பட வேண்டும் என்பது திடீரென்று அமல்படுத்தப்படவில்லை. நெடுங்கால போராட்டத்திற்குப் பின் முதலில் 2004ஆம் ஆண்டு சட்டக் கமிஷன் 174ஆவது பரிந்துரைகள், ராஜ்ய சபையில் சமர்ப்பிக்கப்-பட்டு நீண்ட விவாதங்களும், கூச்சல்களும், ஒத்திவைப்புகளும் நடந்தும் ஒரு முடிவு பிறக்கவில்லை. மக்கள் இயக்கங்கள் பலவித-மாகப் போராடியது. பல்வேறு மாதர் சங்கங்கள், மனித உரிமைக் கழகம், மாண்புமிகு முன்னாள் நீதியரசர்கள், நாட்டின் பல்வேறு சிறந்த வழக்குரைஞர்கள் ஆகியோர்களின் தொடர் போராட்டத்தால் ஒரு வழியாக 2005 இந்து வாரிசுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *