பெண்ணால் முடியும்

மே 01-15

 கண்ணை இழந்தாலும் பெண்ணால் முடியும்!

சிவகாமியின் சாதனை!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சிவகாமி பார்வை-யில்லா நிலையில் ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீச்சல், நீளம் தாண்டுதல் என்று பல போட்டிகளிலும் பதக்கங்கள் குவித்து வருகிறார்.

திருமணத்துக்குப் பிறகு 34 வயதில் விளையாடத் தொடங்கி, தேசிய அளவில் விளையாடி பதக்கங்களைக் குவித்து வரும் ஆச்சர்யப் பெண் சிவகாமி கூறுகையில்,

“எனக்குச் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் நல்கிராமம். அப்பா _ அம்மாவுக்கு நாங்க அய்ந்து பிள்ளைகள். என்னோட பெரியக்கா திருவாயி, சின்னக்கா ராஜாம்பாள் ரெண்டு பேருக்குமே பார்வை கிடையாது. அதற்குப் பிறகு பிறந்த அண்ணனுக்கும் அக்காவுக்கும் பார்வை உண்டு. அவர்களுக்குப் பிறகு பிறந்த எனக்கு பார்வை இருக்கும்னு எதிர்பார்த்த பெற்றோருக்கு பெருத்த ஏமாற்றம். எனக்கும் பார்வை இல்லை. நான் குழந்தையாக இருக்கும்போதே அம்மாவும் இறந்துட்டாங்க.

அப்பா எங்க மூணு பேரையும் எத்தனையோ மருத்துவமனைகளுக்கு கூட்டிக்கிட்டுப் போய் காண்பிச்சாரு. சொந்தத்துல திருமணமானதால-தான் இப்படி கண்ணில் நரம்பு பாதிப்போடு பொறந்திருக்காங்க. இவங்களுக்குப் பார்வையை கொண்டுவர முடியாதுன்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. பார்வைக் குறைபாட்டால் அக்காக்கள்தான் படிக்கலை. ஆனா, என்னையாவது படிக்க வைக்கணும்னு அப்பா என்னைப் பள்ளியில் சேர்த்தார். பக்கத்துவீட்டுத் தோழியைப் பிடித்துக்கொண்டே தினமும் பள்ளிக்கூடம் போய்டுவேன். ஸ்கூல் மிஸ் என்னைப் பார்த்து, ‘நீ ரொம்ப ஹைட்டா கம்பீரமா இருக்க.. உன்னோட தைரியத்துக்கு ஐ.பி.எஸ்ஸே ஆகலாம்’னு சொல்லி எங்க்ரேஜ் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அதிலிருந்தே, என் மனசுல அய்.பி.எஸ். ஆகணும்ங்குற ஆசை அரும்ப ஆரம்பிச்சுடுச்சு.

பார்வையுள்ளவர்கள் கலந்துகொள்ளும் ஓட்டப்பந்தயப் போட்டியில் யாராவது ஒருவரின் கையை பிடித்துக்கொண்டுதான் ஆரம்பத்தில் ஓடிவருவேன். ஆனால், போகப் போக தனியாக ஓடிவர ஆரம்பித்து, வெற்றியும் பெற்றேன். அதேபோல வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளிலும் வெற்றிபெற்று முதல் பரிசையும் பாராட்டுகளையும் குவித்தேன்..’’

“எங்களுக்கு அம்மாவாகவும் இருந்தது அப்பாதான். கவலையிலேயே அவரும் இறந்து போயிட்டாரு. அதனால், பத்தாம் வகப்புக்குப் பிறகு என்னால் பள்ளிக்கூடம் போகமுடியல. அந்தச் சூழலில்தான், பார்வையற்றவர்களுக்கான தொண்டு நிறுவனம், டெல்லியிலுள்ள ‘ஆல் இந்தியா கான்வர்டேஷன் ஆஃப் பைளைண்ட் ஸ்கூல்’_க்கு என்னை பயிற்சிக்கு அனுப்பி உதவியது.

பார்வையில்லைன்னாலும் அடுத்தவர்களின் உதவியில்லாமலேயே ஸ்டிக் வைத்துக்கொண்டு நடப்பது, ப்ரெய்லி முறையில் படிப்பது, யாருடைய உதவியும் இல்லாமல் சமைப்பது, சுயமாக முன்னேறுவது என வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பயிற்சிகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட, 7 வருடங்கள் அங்கேயேதான் இருந்தேன். அப்போதெல்லாம், விளையாடுவதற்கான சூழலும் அமையலே. பயிற்சி முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். அடிக்கடி மாற்றுத் திறனாளிகளுக்கான கருத்தரங்குகளில் கலந்துகொள்ளும்போதுதான் என் கணவர் செந்தில்குமார் எனக்கு அறிமுகமானார்.

ஆரம்பத்தில் நண்பர்களாகத்தான் பழகினோம். ஆனா, ஒரு நாள், “மாற்றுத் திறனாளி பெண்ணைத்தான் திருமணம் செய்துக்கலாம்னு இருக்கேன். அப்படியிருக்கும் போது, நீங்களே ஏன் என் வாழ்க்கைத் துணையா வரக்கூடாது?’’ன்னு விருப்பத்தை வெளிப்-படுத்தினாரு செந்தில். எனக்கும் அவரை பிடிச்சிருந்ததால கல்யாணத்துக்கு ஒப்புக்-கிட்டேன். திருமணமாகி சிவகங்கையிலிருந்து கணவர் ஊரான ஜெயங்கொண்டத்துக்கு வந்துட்டேன். இரண்டு பெண் குழந்தைகள் என் குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடு இல்லை.

ஆனா, என்னோட அக்கா திருவாயி சொந்தத்திலேயே திருமணம் செய்துக்கிட்டாங்க. சோகம் என்னன்னா அவங்ளோட மூணு குழந்தைகளுமே பார்வை குறைபாட்டோடு பிறந்துவிட்டன. என்னோட வீட்டுக்காரர் தாலுக்கா அலுவலகத்தில் ஜெராக்ஸ் கடை வைத்திருந்தார். நானும் அந்தக் கடையை கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான், அரியலூர் மாவட்டத்தில் பார்வை யற்றோருக்-கான விளையாட்டுப் போட்டி அறிவிக்கப்-பட்டது. அப்போது, “நீங்களும் விளையாடுறீங்-களா?’’ன்னு அதிகாரிகள் கேட்டாங்க. ஏற்கெனவே, விளையாட்டுகளில் பல பரிசுகளை குவித்ததால் மறுபடியும் விளையாடணும்கிற உற்சாகம் உள்ளுக்குள் பொங்க ஆரம்பிச்சுது.

திருமணத்துக்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கல. 2012_ஆம் ஆண்டு அரியலூரில் நடந்த 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் கலந்துக்கிட்டு முதல் பரிசுகளை வாங்கினேன். அப்போதான், எனக்குள்ளே இப்படியொரு திறமை இருக்குதான்னு அக்கம்பக்கத்துல உள்ளவங்க மட்டுமில்ல, என்னோட கணவரே பார்த்து பிரமிச்சுப் போனாரு. என் கணவர் தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்த, எனது பள்ளிக்கால ஆசிரியை மீண்டும் வந்ததுபோல் உணர்ந்து புதுத்-தெம்புடன் புத்துணர்வுடன் விளையாட ஆரம்பித்தேன்.

மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்-கான விளையாட்டுப் போட்டி ராமநாதபுரத்தில் அதே ஆண்டில் நடந்தது. அதில், வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வாங்கியதுடன் 5,000 ரூபாய் பரிசுத் தொகையையும் வாங்கினேன். அதற்குப் பிறகு, 2013இல் சென்னையில் தேசிய அளவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றேன்.

அப்போதுதான், நீச்சல் போட்டியிலும் ஏன் கலந்துகொள்ளக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. காரணம், சிறுவயதில் தோழி-களோடு குளத்தில் அடிக்கடி குளிக்கச் செல்லும்போது நீச்சலடித்திருக்கிறேன். அந்த சிறு தகுதியைக் கொண்டு சென்னையிலேயே நீச்சல் பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.

இரண்டே நாட்களில் ஃப்ரீ ஸ்டைல், பேக் ஸ்டோக் பயிற்சி எடுத்து 50 மீட்டர், 100 மீட்டர் பிரிவுகளில் கலந்துகொண்டு நான்கு தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்தேன்….’’ என்று கூறி வியக்க வைக்கும் சிவகாமி, 2014ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தேசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும், 2015ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கமும், 2016ஆம் ஆண்டு ஹரியானாவில் நடந்த தேசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும் குவித்துள்ளார். மேலும், 2016ஆம் ஆண்டு காரைக்குடியில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும், தேனியில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ப்ரஸ்டோக், பட்டர்ஃப்ளை பிரிவுகளில் நான்கு தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இதுவரை, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு 41 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளார் சிவகாமி. கடந்த மாதம், ஹரியானாவில் 2018ஆம் ஆண்டுக்கான ஆசிய அளவிலான மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்கான வீரர்கள் தேர்வில் வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், நீச்சல் என நான்கு போட்டி-களுக்கும் சிவகாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *