உரிமையை மறுப்பது என்பது சமூக அநீதியாகும்.
கிராமப்புறத்தில் நம்முடைய மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு பெரிய நோக்கத்தை விரிவாகப் பேசிக் கொண்டே, அதேநேரத்தில், அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் மேல்பட்டப் படிப்பை படிக்க வேண்டும் என்று முயற்சி செய்கின்ற நேரத்தில், ஏழை, எளிய, வசதியற்ற, பிற்படுத்தப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த முதல் தலைமுறையினர் அல்லது இரண்டாவது தலைமுறையினர் என்று வரக்கூடிய டாக்டர்களுக்கு வாய்ப்பளிப்பது 50 சதவிகித இடஒதுக்கீடு என்பதாகும்.
அது நீண்டகால போராட்டத்திற்குப் பிறகுதான் அந்த உரிமை கிடைத்தது. அதற்கு வேட்டு வைப்பதைப்போல, ஒரு நீதிமன்றத் தீர்ப்பு அண்மையில் வந்ததை வைத்துக் கொண்டு, இன்றைக்கு அந்த உரிமையை மறுப்பது என்பது சமூக அநீதியாகும்.
தமிழக அரசின் மேல்முறையீடு வரவேற்கத்தக்கது!
நாங்கள் அறிக்கை எழுதி, அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, “அதற்கு மேல்முறையீடு செய்யப் போகிறோம்’’ என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தகுந்தது.
ஆனால், அதனை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், இந்த அரசு – மத்திய அரசோடு போராடி, மீண்டும் பழைய நிலையை, உரிமையை உருவாக்க வேண்டும் அது மிக முக்கியமானது.
மருத்துவர்கள் மீது திணிக்கப்பட்ட போராட்டம் இது!
நம்முடைய மருத்துவர்களுக்கு இருக்கின்ற வேதனை காரணமாகத்தான், வலி காரணமாகத்தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து இருக் கிறார்களே தவிர, அவர்கள் விரும்பி எடுத்ததில்லை. அவர்கள் மீது திணிக்கப்பட்ட போராட்டமே தவிர, அவர்கள் விரும்பி நோயாளிகளை கவனிக்காமல் இருக்க வேண்டும் என்பதல்ல. எனவே, போராளிகளா? நோயாளிகளா? என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்தவேண்டிய அவசியமில்லை.
அவர்களுடைய கடமையும், லட்சியமும், அவர்கள் படித்ததே, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றுவதற்காகத்தான். அக்கடமை உணர்வு அவர்களுக்கு உண்டு. அப்படிப் பட்டவர்களை போராட வைத்தவர்கள் 50 சதவீத ஒதுக்கீட்டை மீண்டும் அளித்துத் தீர்வு காண வேண்டும்.
“ஒண்ட வந்த பிடாரி,
ஊர்ப் பிடாரியைத் துரத்துவதா?’’
ஆகவே, மத்திய அரசு இதில் மிக கவனமாக இருந்து இதனை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில்தான் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உண்டு. வெளி மாநிலத்தில் இருப்பவர்களையெல்லாம் இந்தக் கல்லூரிகளில் கொண்டு வந்து திணித்துவிட்டு, இங்கே உள்ள பிள்ளைகளுக்கு இடமில்லை என்று சொன்னால், “ஒண்டவந்த பிடாரி, ஊர்ப் பிடாரியைத் துரத்திற்று’’ என்ற பழமொழிக்கேற்ப ஒண்டவரும் பிடாரியை விரட்டி, ஊர்ப் பிடாரிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எங்களைப் போன்றவர்கள் இருக்கிறோம். பசியேப் பக்கார்களைத்தான் முதலில் பந்தியில் அமர வைக்க வேண்டுமே தவிர, புளியேப்பக்காரர்கள் பந்தியை ஆக்கிரமிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
ஒத்தக் கருத்துள்ளவர்களை
ஒன்றிணைத்து போராடுவோம்!
எனவே, இந்த, சமூகநீதிக்கு விரோதமாக இருக்கக்கூடிய இந்த ஏற்பாட்டை மாற்றி, மீண்டும் பழைய நிலையான 50 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுவோம் நாங்கள் ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்து இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
– கி.வீரமணி,
ஆசிரியர்