தமிழீழத் தந்தை செல்வா

ஏப்ரல் 16-30

மலேசிய நாட்டில் ஈப்போ பகுதியில் பிறந்த, சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வ-நாயகம் என்ற பெயருடையவரே பின்னாளில் செல்வா என்று எல்லோராலும் அறியப்-பட்டவர் ஆவார்.

இவரது தாய்நாடு இலங்கைதான். ஆனால் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் மலேசியாவில் உள்ள ஈப்போ மாநிலத்தில்தான்.

இவரது தந்தை வேலுப்பிள்ளை மலேசியாவில் வணிகத்துறையில் இருந்தார். ஆனால், செல்வா இளம் வயதாக இருக்கும்-போது, இவரது தந்தை இறந்து போனார். அதன் காரணமாக இவர் மீண்டும் இலங்கைத் திரும்ப வேண்டியதாயிற்று.

மலேசிய மொழியில் ஈப்போ என்பதற்கு தூய்மை என்ற பொருள். தான் பிறந்த மண்ணின் தன்மைக்கு ஏற்பவே இவர் வாழ்நாளெல்லாம் தூய்மையாக இருந்தார்.

இவர் 1898ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31ஆம் நாள் பிறந்தார். தந்தையார் மறைவிற்குப் பின் இலங்கைக்குச் சென்றவர். யாழ்ப்பாணத்தில் தூய யோவான் கல்லூரியில் பயின்றார். பின் யாழ்ப்பான கல்லூரியில் பயின்று இளங்கலை அறிவியல் (பி.எஸ்சி) பட்டம் பெற்றார். அதன்பின், தாமஸ் கல்லூரியிலும், வெஸ்லி கல்லூரியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்து பிறகு சட்டக் கல்லூரியில் பயின்றார். ஆசிரியத் தொழிலில் அடியெடுத்து வைத்தவர், தன் தடத்தை உடனடியாக மாற்றிக் கொண்டு வழக்கறிஞர் பணியாற்ற விரும்பி சட்டம் பயின்றார். சிறப்பாகக் கற்றவர் வழக்கறிஞராகவும் (Civil Lawer) ஆனார்.

ஆனால், நீதிமன்றத்தில் வழக்காடி, வருவாய் ஈட்டி தன் வாழ்வை வளப்படுத்திக் கொள்-கின்ற வழக்கமான வழக்கறிஞராக செல்வா இல்லாமல், சமுதாய வழக்கறிஞராக தமிழின வழக்கறிஞராக குறிப்பாக ஈழத் தமிழர்களுக்-கான வழக்கறிஞராக மாறினார்.

தொடக்க காலத்தில் சிங்களர்களின் வல்லாண்மையை (ஏகபோகத்தை) எதிர்ப்பதில்-தான் தன் பணியைத் தொடங்கினார் செல்வா. தமிழினத்தின் மீது அவர்கள் செலுத்துகின்ற ஆதிக்கத்தையும், அத்துமீறலையும் பேரினப் போக்கால், இரண்டாந்தர மக்களாகத் தமிழர்-களை அவர்கள் நடத்திய கொடுமைகளையும் செல்வா தீவிரமாக எதிர்த்ததோடு, அவை பற்றிய விழிப்புணர்வையும் தமிழர்களிடையே ஏற்படுத்தினார்.

தான் கிறிஸ்தவராக இருந்தாலும் அந்த உணர்வை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. அவரிடமிருந்த உணர்வு தமிழன் என்ற உணர்வே. அதனால்தான், சிறுபான்மை கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவராக செல்வா இருந்தபோதிலும் சிவநெறியைப் பின்பற்றிய பெரும்பாலான தமிழ் மக்களின் தலைவராக அவரால் உயர முடிந்தது.

யாழ்ப்பாணத்தான், வன்னியான், திரிகோண மலையான், மட்டக்களப்பான், மலையகத்தான் என்று தமிழன், மாநில அடிப்படையில் பிரிந்து கிடந்த நிலையை மாற்றி, ஒரு குடையின்கீழ் கொண்டு வந்த பெருமை தந்தை செல்வாவையே சேரும்.

ஓர் இனம் மாற்றானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டுமானால், முதலில் அந்த இனத்திலுள்ள வேறுபாடுகள், கூறுபாடுகள் ஒழிக்கப்பட்டு இன ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும் என்ற முதன்மையான உண்மையை செல்வா சரியாக உணர்ந்திருந்த-தால்தான் இனத்தின் ஒற்றுமையை ஏற்படுத்தும் பணிக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்டார். செயல்பட்டதோடு அதைச் செய்தும் முடித்தார். அதற்குரிய ஆளுமைத் திறன் அவரிடம் இருந்தது.

செல்வா ஆற்றல்மிகு பேச்சாளராகவும், மக்களை ஈர்க்கின்ற சொல்லாட்சிக்கு உரியவராகவும், அலங்காரமில்லா பொருள் பொதிந்த பேச்சின் ஊற்றாகவும் அவர் திகழ்ந்தார்.

எல்லா மக்களுக்கும் உரிய உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைக்க இரண்டு இனங்களும் பங்குபெறும் இணைப்பாட்சியே ஏற்றது என்று முடிவு செய்தார்.

1965இல் செல்வநாயகம் – செனநாயகா ஒப்பந்தமும் 1970இல் செல்வநாயகம் – சிறிமாவோ உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டன. ஆனால், இன்றைக்கு நடப்பது போலவே, சிங்கள ஆதிக்கவாதிகள் இவ்வொப்பந்தங்களை மதிக்கவில்லை. ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட ஒரு சில நாட்கள் கூட அதற்குச் சிங்களர் மதிப்பளிக்கவில்லை. ஒப்பந்தங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தங்கள் ஆதிக்கங்களை, தமிழர்கள் எதிர் நடவடிக்கை-களை மேற்கொண்டனர். இதனால், தந்தை செல்வா இனி ஒருங்கிணைந்த சிங்களர்களோடு வாழ்வதென்பது இயலாது. அதற்காகச் செயல்படும் முயற்சிகளெல்லாம் வீண்தான் என்று உறுதியாக நம்பினார்.

என்றைக்கும் சிறுபான்மையாக உள்ள தமிழினம் ஆட்சியில் முதன்மைப் பங்கு பெற முடியாது. எனவே, தமிழர்க்குள்ள உரிமையையும், வாய்ப்புகளையும், மதிப்பையும் பெறவே முடியாது என்பதால், தமிழர்-களுக்கென்று தனி ஈழம் உருவாக்கப்படுவது ஒன்றே உகந்த வழி என்று முடிவு செய்தார்.

தமிழீழம் முடிந்த முடிவு என்றார் தந்தை செல்வா. அமைதி வழிநாடிய அவராலே அந்த முடிவுதான் இறுதி முடிவாகக் கொள்ளப்-பட்டது என்றால் அதைத் தவிர்க்க முடிவேது? இலங்கைத் தமிழ் மக்களுக்கு விடிவேது?
வாழ்க செல்வாவின் புகழ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *