குழந்தைகளுக்கு எதிரான மோடி அரசு!

ஏப்ரல் 16-30

கெ.நா.சாமி

வளர்ச்சி, வளர்ச்சி என வாய்ச்சவடால் அடித்தே வாக்குகளைப் பெற்று அரசாளும் வாய்ப்பைப் பெற்றுள்ள மோடி அரசு அமைந்தது முதல் அடித்தட்டு மக்களை மேலும் அதலபாதாளத்தில் ஆழ்த்தி அமுக்கிடும் அறமிலாச் செயல்களையே செய்து வருகிறது.

குறிப்பாக ஏழைக் குழந்தைகளின் நலனைப் புறக்கணித்து அவர்களுக்குப் பாதிப்பான நடவடிக்கைகளை மோடியின் பாசிச அரசு மேற்கொண்டு வருகிறது. 2016ஆம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தில் பல தேவையற்ற மாறுதல்களைச் செய்து 14 வயதுக்கு குறைவானவர்களை தொழிலகங்களில் பணியமர்த்துவதில் இருந்த தடைகளை நீர்த்துப் போகச் செய்ததன் மூலம் குழந்தைகளின் கல்வி வாய்ப்பில் மண் போடும் “மகோன்னதப்’’ பணிக்குத் தன்னைச் சொந்தக் காரனாக ஆக்கிக் கொண்டது. குலக்கல்வித் திட்டத்துக்கு கால்கோல் விழா கண்டது.

தற்போது மீண்டும் 2017ஆம் ஆண்டில் குழந்தைகள் பள்ளிகளில் இலவச மதிய உணவு பெறுவதற்கு ‘ஆதார் அட்டை’ கட்டாயம் என்கிற அதிரடியான, அடாவடித்தனமாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் வீட்டில் மூன்றுவேளை உணவுக்கு உத்தரவாதமில்லாத ஏழை, அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசுக்குத் தானே குழந்தைகள் அத்தனை பேருக்கும் ஆதார் அட்டைகளை வழங்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது. அதை அனைத்துப் பள்ளிகளின் மூலமாக செயல்படுத்துவதில் முனையாமல் இப்படி ஒரு உத்தரவைப் போடுவதால் இந்த அரசு ஏழைக் குழந்தைகளுக்கு உணவளிக்கும் கடமையி லிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் துடிக்கின்றது என்பதுதானே இதற்கு அர்த்தம்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகளுக்காக (Integrated Child Development Services) ஒதுக்கப்பட்டு வந்த தொகையில் 2015_16 ஆண்டுகளில் 50% குறைத்துவிட்டது. இதுதான் ஏழைகளின் அரசா? இந்தக் குறைப்பு நடவடிக்கையை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆளும் பி.ஜே.பி.யின் அமைச்சர் மேனகா காந்தியே மிக வன்மையாகக் கண்டித்ததை அனைவரும் அறிவார்கள்!

இப்படிக் குறைக்கப்பட்டதால் அங்கன் வாடிப் பணியாளர்களுக்கு ஓராண்டாக சம்பளம் கொடுக்க இயலவில்லை என்பதோடு பள்ளி செல்வதற்கு முன்பான கல்வியும்(Pre School Education) மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ உதவியையும் (Medicine Kit) செய்ய முடியவில்லை என ஒடிசா அரசு 2015_16இல் மய்ய அரசுக்கு கடிதம் மூலமாக தன் அவல நிலையை விளக்கியதே!

பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்காக வழங்கப்பட்ட தொகையில் 2015_16இல் 36% விழுக்காடு குறைக்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில் 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒதுக்கிய தொகையைவிட 25% குறைவானதாகும். 4 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கிய தொகையில் 25% குறைவு என்பதை இன்றைய உண்மையான பணவீக்க மதிப்பில் கணக்கிடும்போது 50% குறைவு என்றே ஆகும். இதையே வேறொரு கோணத்தில் நோக்கினால், இதன் அவலம் வெளிப்படும். அதாவது, மாநிலங்களுக்குப் பங்கு தரத் தேவையில்லாத வரி வருமானங்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 32%ஆக இருந்தது. இக்கொடுங்கோலர்களின் ஆட்சியில் 42%ஆக உயர்ந்திருக்கிறது. ஆக மாநிலங்களிலிந்து திரட்டப்படும் நிதியிலிருந்தே கூட மாநிலங்களுக்கு உரிய பங்கினை நல்காமல் ஒற்றையாட்சி முறைபோல் செயல்படுகின்ற நிலை உள்ளது.

இப்படி நிதி ஒதுக்கீடுகள் குறைந்த காரணத்தால் மதிய உணவுத் திட்டத்தை சுருக்கிக் கொண்டுவரும் சூழ்ச்சி இது!

அநேக மாநிலங்கள் மதிய உணவோடு முட்டையும் சேர்த்து வழங்குகின்றன. முட்டை குழந்தைகளுக்குச் சத்துள்ள உணவு என்கிற முறையில் நாடு முழுவதும் இதை அமல்படுத்தி யிருக்க வேண்டும் இந்த அரசு, உண்மையில் குழந்தைகள் நலனில் அக்கறையிருந்தால். ஆனால், பி.ஜே.பி ஆளுகின்ற மாநிலங்களில் முட்டை அசைவ உணவு என்னும் கண்ணோட்டத்தில் வழங்கப்படுவதில்லை. ஆக உணவு முறையிலும் தன்னுடைய அடாவடித் தனத்தையே செயல்படுத்தி உடல் நலத்திற்குத் தேவையானதைத் தர மாட்டேன், என் கொள்கைப்படிதான் நீ உணவு உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.

பிறந்து வளர்கின்ற குழந்தைகள் பாதிக்கப்-படும் நிலை இது என்று சொன்னால் பிறப்பதற்கு முன்பே கருவறையில் இருக்கும்போதே இந்தக் காட்டான்களின் அரசு செய்யும் அக்கிரமங்கள், அவலங்கள் அளவில்லாதவை. அவற்றிற்கான இரண்டு உதாரணங்களைப் பார்ப்போமா?

வயிற்றுக் குழந்தையையும் வஞ்சிக்கும் அரசு

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act)) 2013இல் அய்க்கிய முற்போக்கு ஆட்சியில் கொண்டுவரப்பட்டு அதன்படி ஒவ்வொரு கருவுற்ற தாய்மார்-களுக்கும் சத்துள்ள உணவுக்காகவும் மற்ற தாய்மைப் பேற்றுக்கான செலவினங் களுக்காகவும் ரூ.6,000/-_ வழங்கப்பட்டது. இது ஒரு முன்மாதிரித் திட்டமாக முதலில் 53 மாவட்டங்களில் அப்போது செயல்படுத்தப் பட்டது. இந்த அரசு இதை முறையாகச் செயல்படுத்தவில்லை. 2015 அக்டோபர் 30 அன்று (இந்திராகாந்தி நினைவு நாள்) இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவோம் என்று மோடி அரசு இந்த நாட்டின் உச்சநீதி மன்றத்தில் எழுத்துமூலம் உறுதியளித்தது. ஆனால், இன்றுவரை முழுமை செய்யவில்லை. இதற்காக ரூ.2,700/_ கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது நான்கில் ஒரு பகுதிக்கே போதுமானதாகும். இது முழுமையும் மத்திய அரசே ஏற்கும் செலவல்ல. 60% மத்திய அரசும் 40% மாநில அரசும் செலவேற்கும் திட்டம். ஆக இந்த நாட்டின் ஏழை எளிய சமுதாயத்தை கருவிலேயே காவு கொள்கிற பச்சைத் துரோகமல்லவா இது. இதுதான் ஏழைகளின் அரசா?

அடுத்து ‘ஜனனி சுரக்ஷா யோஜனா’ (Janani Suraksha Yojana) என்கிற திட்டம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டுவரப்-பட்டது. இதன்படி அனைத்துப் பிரசவங்களும் மருத்துவமனைகளில்தான் நிகழ வேண்டும். அதுதான் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பு என்பதோடு நோயில்லா சமுதாயத்தை உருவாக்க அது அடிப்படை என்கிற நிலையில் வற்புறுத்தப்பட்டது. அதற்கான நிதியும் ஒதுக்கப்-பட்டது. அதன்படி 2005_06 ஆண்டுகளில் 39%ஆக இருந்த மருத்துவமனைப் பிரசவங்கள் 2015_16 ஆண்டுகளில் 79%ஆக உயர்ந்தன. இதனால் சிசு மரணங்களும் வெகுவாகக் குறைந்தன.

ஆனால், தற்போது இந்தத் திட்டத்துக்காக தனியாக நிதி ஒதுக்காமல் இதை கருவுற்ற தாய்மார்களுக்கு 6000 ரூபாய் கொடுக்கப்-படுகின்ற திட்டத்தோடு இதை இணைத்துவிட முடிவு செய்திருக்கிறது இந்த அரசு. அந்தத் திட்டச் செலவுக்கான ஒதுக்கீட்டையே நான்கில் ஒன்றாகக் குறைத்துவிட்ட நிலையில் இதையும் அதனோடு இணைப்பது, உள்ளதும் போச்சடா நொள்ளையா என்பதுதான்!

தற்போது இவை அத்தனைக்கும் ஆதார் என்கிற ஆப்பு அடிக்கப்படுகிறது. ஆதார் இருந்தால்தான் இந்த அரைகுறை சலுகை-களையே பெறமுடியும். நல்லோரே, நாம் இங்கே ஒன்றை நினைவு கூர்வோமா! இந்த ஆதார் திட்டத்தை அன்றைய அரசு கொண்டுவந்த-போது இந்த பி.ஜே.பி வகையறாக்கள் பிலாக்கானம் பாடிய பீலாக்களைச் சற்று நினைத்துப் பாருங்கள்!

இத்தனை அவலங்களுக்குப் பிறகும் பி.ஜே.பி  கார்ப்பரேட்களின், பணமுதலைகளின் ஆதரவில் வாக்குகளைப் பெற்றுக் கோலோச்ச முடிகிறதே! அது எப்படி? மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒற்றுமையோடு இருந்து, பி.ஜே.பி. அலங்கோல அரசின் அவலச் செயல்பாடுகளை மக்களிடம் வெளிச்சமிட்டு மக்கள் ஆதரவோடு அவர்களை விரட்டு-வதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட சமுதாயக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுபடாமல் வெட்டி விலகி நிற்பதுதானே! காரணம்? உரியவர்கள் சிந்திக்கட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *