Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நாட்டில் முதன்முதலாய் காவல் உதவி ஆய்வாளராய் திருநங்கை பதவியேற்பு!

க.பிரித்திகா யாஷினி, வயது 26. சேலம் மாநகரைச் சேர்ந்த கலையரசன், சுமதி ஆகியோர் இவரது பெற்றோர். 2011-ஆம் ஆண்டு சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “பிசிஏ’ படித்து முடித்தார். கடந்த 2016-இல் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு, தற்போது தருமபுரி மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

முதல் 6 மாதம் காவல் நிலைய நடைமுறைகள் குறித்த நேரடி பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், திங்கள்கிழமை அவர் பணியாற்றவுள்ள காவல் நிலையம் குறித்த உத்தரவு வழங்கப்படும் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் 1028 உதவி ஆய்வாளர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில், தருமபுரி மாவட்டத்தில் பிரித்திகா யாஷினி உள்பட 18 பேர் பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே முதல் திருநங்கை ஒருவர், காவல் துறையில் தேர்வெழுதிப் பணியேற்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. எனினும், இதனை உறுதி செய்ய இயலவில்லை. வெளிப்படையாக இதுவரை யாரும் தனது பாலினத்தை அறிவித்தது ஊடகங்களில் பதிவாகவில்லை என திருநங்கைச் செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஆயினும், தமிழ்நாட்டில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பொறுப்பேற்கும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி என்பது குறிப்பிடத்தக்கது.